நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்தது. அது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்து, இன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறது. பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும் வருகின்றோம். ஆனால், எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில், உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).
அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?
இவற்றைப் பார்த்தவுடனேயே, இவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவற்றைச் சரியாகப் பாருங்கள். அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும், எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாது. அந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும், அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.
"என்ன விளையாடுகிறீர்களா? அது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறது" என நீங்கள் அலறுவது புரிகிறது. கத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காது. அத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காது. அத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான். இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும், எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால், குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள். உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.
இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானா? இல்லையா? என்கிற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், அவை வெளிச்சம் தந்தால் இப்படிக் காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.
'இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாது. இவையெல்லாம் வேறு ஏதோ சித்திரங்கள்' என்று சொல்லி நானும், நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம். ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 'இல்லை, இவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையே' என்ற முடிவுக்கு நாம் வரவேண்டிய சூழலில், எம்மை வைத்துவிட்டது.
கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்தது என்னமோ உண்மைதான். அந்தப் பொருள் என்ன தெரியுமா? பாட்டரிகள்.
"என்ன பாட்டரிகளா? கி.மு.250 வருடத்திலா?" என்றுதானே கேட்கிறீர்கள். நீங்களே பாருங்கள்.
எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு, இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றன. இவை பற்றி பல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இவை எம்மை யோசிக்க வைக்கின்றன. உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.
சரி, இவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால், இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்? இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.
அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்று அடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன். அதைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள்.
என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.
நவீன விண்வெளி மனிதன் ஒருவன், அதே உடைகள், காலணிகள், தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின் உச்சமல்லவா?
எப்பொழுதும் விழிப்புணர்வு என்பது எமக்கு மிக அவசியமானது. நாம் எல்லாவற்றையும் நம்புகிறோம். எல்லாரையும் நம்புகிறோம். அரசியல்வாதியாக இருந்தாலென்ன, மதவாதியாக இருந்தாலென்ன, எழுத்தாளனாயிருந்தாலென்ன, எல்லாரையும் சுலபமாக நம்பிவிடுகிறோம். எமது இந்த நம்பிக்கையையே பலகீனமாகக் கொண்டு, தப்பான கருத்துகளை எம்முள் விதைப்பதற்கு ஒரு கூட்டமே எம்முன்னே காத்திருக்கிறது. அதனால்தான், அடிப்படையில் குறைந்தபட்சமாவது சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறது அறிவியல். பல விசயங்களுக்கு விடைகள் இல்லாதபோதும், தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க, அறிவியல் எம்மை வற்புறுத்துகிறது. ஆதாரமில்லாத எதையும் அறிவியல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவதில்லை.
ஒன்றைச் சரியாகக் கணிப்பது என்றால் என்ன? தர்க்க ரீதியாக சிந்திப்பது என்றால் என்ன? என்பது பலருக்குத் தெரிவதில்லை. பரீட்சைகளில் வரும் வினாத்தாள்களில் ஒரு வினாவுக்கு நான்கு பதில்கள் கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதில் சரியான விடையைத் தெரிந்தெடுப்பது சரியான கணிப்பு. அதே நேரத்தில் சரியான விடை எதுவென எமக்குத் தெரியாத பட்சத்தில், தப்பான பதில்கள் எவையாயிருக்கும் எனச் சிந்தித்து, அவற்றை நீக்குவதன் மூலம் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான் தர்க்க ரீதியாக முடிவெடுப்பது என்பது.
ஓவியத்தில் நாம் கோடுகளையும், நிறங்களையும் படிப்படியாக, சேர்த்துச் சேர்த்து முழு ஓவியத்தைப் படைக்கின்றோம். ஆனால் சிலையில், அதைச் செய்யும் கல்லில் இருந்து தேவையற்ற பாகங்களை படிப்படியாக நீக்கி, முழுச் சிலையையும் வடிக்கிறோம். ஒன்று சேர்த்தல், மற்றது நீக்கல். இரண்டும் இறுதியில் முழுமையான படைப்பாய் மாறுகின்றன.
ஒரு விண்வெளி மனிதன் கிருஸ்தவத் தேவாலயத்தில் சிலை வடிவமாக இருக்கும் படங்களைக் கடந்த பதிவில் தந்தது ஞாபகம் இருக்கலாம். அந்தக் கிருஸ்தவ தேவாலயம் ஸ்பெயின் நாட்டில் உள்ள 'சலமன்கா' (Salamanca) என்னும் ஊரில் இருக்கிறது. அந்தத் தேவாலயம் கட்டப்பட்டது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர். அதாவது கி.பி.1200 களில் கட்டப்பட்டது. அதில் எப்படி ஒரு நாசா விண்வெளிப் பயணியின் உருவம் வரமுடியும்? அதற்குச் சாத்தியம் உண்டா? எனச் சிந்தித்தால், சாத்தியமே இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். அந்த உருவத்தில் இருக்கும் காலணி முதல் ஜாக்கெட் வரை எல்லாமே, தத்ரூபமாக இன்றைய நவீன விண்வெளிப் பயணி போல இருப்பது என்னவோ நெருடலான விசயம். மாயாக்களோ அல்லது எகிப்திய பிரமிட்களோ இப்படிச் சித்திரங்களைக் கொடுத்தாலும், இவ்வளவு தத்ரூபமாக கொடுக்கவில்லை.
ஆராய்ந்து பார்த்ததில் அந்த சிலை உண்மையாக 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்தது. இந்த தேவாலயம் 1992ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட போது, இந்த விண்வெளிப் பயணியின் சிலை ஒரு போத்துக்கேய சிற்பியால் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அது உண்மையாக 800 வருடப் பழமை வாய்ந்ததல்ல.
இதுவரை மாயாக்கள் வாழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் சுற்றித் திரிந்த நாம் இனி அவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது நல்லது. இனி தொடர்ச்சியாக மாயாக்களின் மர்மங்களுக்குள் நாம் பிரயாணம் செய்யலாம் வாருங்கள்........!
மாயன் இனத்தவர்கள் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பமே மாயனின் அதி உச்சக்கட்ட மர்மத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் அவற்றிற்கு உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 'என்னடா, இந்த நபர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரே' என்று நினைக்கலாம். நான் சொல்லப் போகும் விசயம், மாயன் இனத்தின் சரித்திரத்தின் மைல் கல்லாக அமைந்த ஒன்று. உங்களை அதிர வைக்கப் போகும் விசயமும் இதுதான். உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களும், அறிவியலாளர்களும் இதுவரை உலகத்தில் நடைபெற்ற அனைத்து மர்மங்களின் முடிச்சுகளையும் தங்களால் இயன்ற அளவிற்கு அவிழ்த்துக் கொண்டே சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கூடத் தோற்ற ஒரு இடம் உண்டென்றால், அது இப்போது நான் சொல்லப் போகும் விசயத்தில்தான்.
அப்படி என்னதான் அந்த விசயம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? சொல்கிறேன்......!
மாயன் இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ஆராய்ச்சிக்கென வந்தவர் ஒருவரின் கண்ணில் தற்செயலாகத் தடுப்பட்ட பொருளொன்று, அதைக் கண்டெடுத்தவரை மலைக்க வைத்தது. அந்தப் பொருள் ஒரு மண்டை ஓடு…….!
"அடச் சே…..! ஒரு மண்டை ஓட்டுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாய்?" என்றுதானே கேட்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். முழுவதும் சொல்லிவிடுகிறேன். ஒரு சாதாரண மண்டை ஓட்டுக்காகவா நான் இவ்வளவு பேசுவேன்.
அது ஒரு சாதாரன மண்டை ஓடே அல்ல......! அது ஒரு 'கிறிஸ்டல்' மண்டை ஓடு.
ஆம்! 'கிறிஸ்டல்' (Crystal) என்று சொல்லப்படும் மிகவும் பலம் வாய்ந்த கண்ணாடி போன்ற ஒரு முலப் பொருளினால் உருவாக்கப்பட்ட மண்டை ஓடு அது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக