ஞாயிறு, 17 மே, 2015

தேனீக்கள் .ரீங்காரம் 4

தேன் கூட்டின் அமைப்பு
"ஆயிரம் தச்சர்கள் கூடி உருவாக்கும் மண்டபம்", என்று தமிழில் சொல்லப்படும் உவமைக்கு உரியவை தேனீக்கள் கட்டும் கூடாகும். தேனின் கூடு வேலைக்காரத் தேனின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றன. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அருகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்தியாகக் பார்க்க ரசனையை அளிக்கக் கூடிய முறையிலே கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அருகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்புடன் விளங்குகின்றன. பொறியியல் அறிந்த ஈக்கள் போலும்!

இராணித் தேனீயின் லார்வா அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாயிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேனின் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறை சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ஈக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. மனிதர்களோ ஒரு தலைமைக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய தேனீக்களிடம் பாடம் படிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம். என் கடமை பணி செய்து கிடப்பதே! என்பதே இவற்றின் தாரக மந்திரம் ஆகும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான ஈக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்களால் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில என்ஸைம்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இனப்பெருக்கம்
லார்வாக்களுக்கு ஒரு நாளைக்கு 1200 முறைகளுக்கு மேல் உணவளிக்கப்படுகின்றது.

இராணித் தேனீயின் மூலம் அறைக் கூடுகளில் அறைக்கு ஒன்று வீதம் இடப்படும் முட்டைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு பொறித்து லார்வாக்கள் வெளிவருகின்றன. இராணித்  தேனீக்கென்று வித்தியாசமான வடிவில் நிலகடலை வடிவத்தில் கூடு கட்டப்படுகின்றன. லார்வா நிலையில் அவற்றிற்கு வேலைக்காரத் தேனீக்களினால் ஒருநாளைக்கு 1200 முறைக்கு மேல் உணவு அளிக்கப்படுகின்றது. தங்களது சுய நலத்திற்கல்லாமல் தங்கள் காலனியின் நலனையே கருத்தில் கொண்டு புதிய சந்ததிகளை உருவாக்க வெறித்தனமாக செயல்படும் இந்த செயல் உண்மையில் சிந்திக்கத் தக்க விஷயமாகும். முதல் இரண்டு நாட்களுக்கு வேலைக்கார லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி என்னும் உயர் தர புரத உணவு அளிக்கப்படுகின்றது. இது வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. அதன் பிறகு மகரந்தத் தூள் மற்றும் தேன் ஆகியவை உணவாக அளிக்கப் படுகின்றது. ஆனால் இராணித் தேனீயின் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி மாத்திரமே உணவாக முழு வளர்சி அடையும் வரை அளிக்கப்படுகின்றது. இத்தகைய வேற்றுமை லார்வா பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தகைய உயர் தர உணவு தொடர்ந்து கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. அதன் பிறகு லார்வா முழு வளர்சி நிலையை அடைகின்றது. பின் அறை கூட்டின் மேல் பகுதி மெழுகினால் சீல் வைக்கப்பட்டு மூடப்படுகிறது. அதன் பிறகு அவை PuPa என்னும் கூட்டுப் புழு நிலையை அடைந்து பிறகு முழு வளர்ச்சி அடைந்த நிலையில் அறைக் கூட்டின் மேல் பகுதியை உடைத்து வெளி வருக்கின்றன.


இராணித் தேனீ முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் ஆகின்றன. பொதுவாக எல்லா நாட்களிலும் சில நூறு அறைகளிலாவது லார்வா நிலையில் உள்ளவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக