சனி, 8 செப்டம்பர், 2012

கவலை பற்றியதான கவலைகள்

மனிதனின் இருப்பின் அழகியலாகத்தான் கவலையைக் காண வேண்டியுள்ளது. கவலைகளின் வகைகள் பலவாறாக விரிந்து சென்றாலும், மனிதன் கவலைப்படுகின்ற நிலைக்குள் எப்போதோ ஒரு தடவை வந்துவிடுகிறான். மீள்கிறான். மீண்டும் வருகின்றான்.
இப்படியே கவலைகளும் சக்கரமாய் சுழல்கின்றன.
மனிதன், கவலையே இல்லாமலிருக்க அவன் மூளைக் கலங்களில் பாதிப்பு ஏற்பட்ட புத்திசுவாதினமற்றவனாக இருக்க வேண்டுமென விஞ்ஞானம் சொல்கின்றது.

ஆக, மனிதனை — இயல்பான மனிதனாக அடையாளப்படுத்தி நிற்பது அவனோடு ஒட்டிக் கொள்ளும் கவலைகளும் தான்.
கவலைகளுக்கு வரலாறுகள் இருப்பது போன்று, வரலாறுகள் தான் பல நேரங்களில் கவலைக்கு ஆதாரமாகியும் விடுகின்றது.
நடந்த விடயமொன்றைப் பற்றி ஒருவன் அடைந்து கொள்கின்ற கவலையின் உச்சம் தான் — கவலைக்கே முகவரி தருகிறது. நடக்கப் போவது பற்றியதான கவலைகளுக்கு வேறு பெயர்களும் உண்டு. அதனால், நடந்தவைகளின் மொத்த வடிவம் கவலைகளின் பெரும் பகுதியை தனக்குள் தக்க வைத்துக் கொண்டுள்ளதென்ற முடிவுக்கு வரலாம்.
கவலைகளை எமக்குள் நாம் அனுபவித்துக் கொள்வதில் கற்பனைத்திறனின் பங்கு அளப்பரியது.
ஒரு பொருளை நீங்கள் நேற்று வாங்குவிட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். மூன்று தினங்கள் கழித்து உங்கள் நண்பன் அதே பொருளை குறைந்த விலையில் வாங்கியதாக சொல்கிறார். இதைக் கேட்ட கணத்தில் உங்களின் கற்பனைத் திறன், “ஓரிடண்டு நாள் பொறுத்திருந்து இதை வாங்கியிருக்கலாமே!” — “நிறையப் பணத்தைக் கொடுத்து வாங்கிவிட்டோமே!” என்றவாறான பல கோணங்களில் அமைந்த கவலைகளை அது மனதில் நடத்தும்.
இதே பொருளை, இன்னொரு நண்பன் ஒரு மாதங்களுக்கு பின்னர், குறைந்த விலையில் வாங்கிவிட்டதாக நீங்கள் அறிந்தாலும், நீங்கள் கொள்கின்ற கவலையின் அளவு, “கொஞ்சம் பொறுத்திருந்தால் நிறைய சேமித்திருக்கலாம்” என்ற மூன்று நாள் கதையில் தான் மொத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கும்.
இதுவொரு சின்ன உதாரணம் தான். கவலைகளின் பரப்பு — விசாலமானது. ஆழம் — சங்கீரணமானது என்பதை ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு தனி மனிதனும் உணரும் வகையில் வாழ்க்கை பல சம்பவங்களையும் அதனோடான கவலைகளையும் அவனுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு ஒப்பிடும் நிலையிலுள்ள சந்தர்ப்பமும் கற்பனைத் திறனும் கலந்து கொண்டால், கவலைக்கான களம் தோன்றிவிடுகிறது.
ஆனால், மனிதனாக இருப்பதனால் நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும். இவ்வாறு தோன்றும் கவலைகளைப் போக்கிவிட மனிதனின் எண்ணத்தில் ஓடுகின்ற நிலைகள் மீளும் தகவுடையன.
“அதை அப்படிச் செய்திருக்கலாமே!” — “இப்படிச் செய்திருந்தால் அது அப்படியாக வந்திருக்குமே!” — “எப்படித்தான் நான் இப்படியொரு முடிவெடுத்தேனோ?” — “எனக்கே நான் அடிக்கனும் போல இருக்கு” என்ற சுய உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் கவலை போக்கும் படலங்கள் மீள மீள உருவாகிக் கொள்கின்றன.
கவலைகள் மறைந்து போக, மறந்து போக மனிதனெடுக்கின்ற பல முன்னெடுப்புகள் கவலைகளை நித்தமும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கான ஆதாரமாகி விடுவதை அவன் உணர்ந்து கொள்வதில்லை.
கவலையை மனிதன் அழகியலாகப் பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது.
உலகில் கவலையில்லாத இயல்பான மனிதர்கள் எவரும் இல்லை. ஒவ்வொரு கணமும் கவலையோடு தான் ஒவ்வொரு வினாடியும் விரிகிறது. ஆனால், இப்படி விரியும் கவலையை எப்படி எமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம்?
“எல்லோருக்கும் தானே கவலையுண்டு. எனக்கு மட்டுமில்லையே!” என்று எண்ணி அகத்திலும் முகத்திலும் புன்னகை சேர்க்கலாம்.
கவலைகளை மனத்தில் கொண்டுவருவதில் கற்பனைத்திறனின் பங்கு அதிகமென்பதால், கவலை தரும் கற்பனைத் திறன் கொண்டு, கலைகள் செய்யலாம். கவலைகளை கலைகளாக பரிவர்த்தனை செய்த கலைஞர்களின் வரலாறு உலகம் பூராக விரிந்து கிடக்கிறது.
கனவுகள் இருந்தால் இலக்குகள் இருந்தால் அவற்றை அடைகின்ற பாதையில் ஏற்படும் தடங்கல்களுக்கு நீங்கள் கட்டாயம் வலியை உணர வேண்டும்.
கவலையே இல்லாமல் வாழ்வது வாழ்க்கையே அல்ல. ஆனால், “கவலைகள் எனக்கு இருக்கே!” என்று உங்களை நீங்களே வெறுப்பது எப்படி வாழ்வின் அழகியலாக முடியும்?
எல்லோரும் தான் தடங்கல்களைச் சந்திக்கின்றனர். அந்தத் தடங்கல்கள் பல வேளைகளில் எமது தீர்மானங்களின் வருவிளைவுகளாக இருக்கின்றன. கவலைகளின் ஆதாரங்களாயும் தொடர்கின்றன. அந்தத் தீர்மானங்களை எடுத்தத்திற்காக உங்களை நீங்களே மன்னிக்க பழக வேண்டியுள்ளது. மன்னிப்பு என்பது தனிமனிதன் நிலையில் தான் கட்டாயம் தேவைப்படுகிறது.
“நாம் கொள்கின்ற கவலைகள் — நாம் பிழை செய்துவிட்டோம் எனச் சொல்வதற்காக வருவதல்ல, நாம் இன்னும் அதை விட அற்புதமாக செயலாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளோம் என ஞாபகமூட்டவே வருகிறது”

Our Thanks to............
உதய தாரகை
By
Nallur osman
கவலை பற்றியதான கவலைகள்

1 கருத்து:

  1. அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.

    பதிலளிநீக்கு