வியாழன், 6 செப்டம்பர், 2012

தர்க்கத்தின் முடிவு மௌனம் என்றால், மௌனம் முடிவா ஆரம்பமா?

தானே தனக்குள்ளும் தன்னுடனும் பேசிக்கொள்வது பிரச்சினையில்லை. சில நேரங்களில் பயனுள்ளதாகவும் அமையும். இல்லாத ஒருவரிடம் பேசுவதாக நம்புவதும், இல்லாத நபர் நம்மிடம் பேசுவதாக நம்புவதும் நோய். இது மனச்சிதைவின் அடிப்படை அறிகுறி.
 இதனால் தான் நீ கடவுளிடம் பேசினால் அது பிராத்தனை, கடவுள் உன்னிடம் பேசினால் அது பிரமை (if you speak to god it is prayer, if god speaks to you it is hallucination) என்று சொல்லப்பட்டது. 
கடவுளை விடுவோம், தற்போதைக்கு, சக மனிதர்களிடம் பேசுவது என்ன? பிராத்தனையா, பகிர்தலா, பொருமலா பாசாங்கா? சக மனிதர்கள் பேசுவதைக் காதுகள் உள்வாங்கும் அளவு சிந்தனை உள்வாங்குகிறதா? அவர்கள் பேசாததைப் பேசியதாகவும், பேசியதைப் பேசாது விட்டதாகவும் நினைப்பது ஏன்? பெரும்பாலும் மனது தனக்கு விருப்பமானதை மட்டுமே அனுமதிப்பதால். இது அறிவின் சுயதணிக்கை அல்ல, ஆசையின் அச்சத்தின் பாதுகாப்புணர்வு.
பல விஷயங்களை நான் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், கோபமாக, வருத்தமாக, கேள்விகளாக... ஆனால் இவற்றில் என்னோடு நான் சந்தோஷமானவற்றைப் பேசிக்கொள்வது குறைவு. மகிழ எப்போதுமே மற்றவர் தேவை, வருத்தப்பட தனிமையே போதும். தனிமையே வருத்தமா என்பது இன்னொரு சிந்தனைத்தொடர். நான் என்னுடன் பேசிக்கொள்வதின் முக்கியமான சௌகரியம், நான் பேசுவதை நான் நிச்சயமாகக் கவனிப்பதுதான்.
வேறு யாரும் இல்லாததால்தான் நமக்குள்ளேயே பேசிக்கொள்கிறோமா? சில நேரங்களில் வேறொருவர் இருந்தாலும் நம்முடன் உரையாடிக் கொண்டிருந்தாலும் நாம் நமக்குள்ளே பேசிக்கொள்வோம். ஆனால் தொடர்ந்து சமூகத்தின் நாடகத்தில் பங்கேற்று வருவதால், முகத்தில் ஒரு புன்னகை ஓட்ட வைத்துக்கொண்டு உள்ளே எரிச்சலை நம்முடன் மட்டுமே பகிர்ந்து கொள்வோம். இந்த நடிப்பு அவசியம் என்பதால் இதை நாளும் செழுமையாக்கிக் கொள்வோம்.
நிஜத்திலேயே இதைச் செய்யும் நாம் மெய்நிகர் இணையத்தில் செய்ய மாட்டோமா! பிடிக்காத எத்தனை உரையாடல்களை, வேலை இருக்கிறது என்று தட்டி விடுகிறோம்! பிடித்த அத்தனை பேருடனும் நாம் ஒரு புன்னகைச் சின்னம் பரிமாறிக்கொள்கிறோம், அதில் எத்தனை வலியோ அவசரமோ வருத்தமோ இல்லாதவை? எத்தனை மனத்திலும் முகத்திலும் இல்லாமலேயே விரல்கள் தட்டி விடுபவை?
உங்களுக்குத் தெரிந்ததையே, நானும் இதுவரை சொல்லிக்கொண்டிருந்ததையே திரும்பவும் சொன்னால் நான் நல்லவன். என் மனத்தின் நிஜ உணர்வுகளை வார்த்த்தைகளாக்கினால், என்னிடம் முதலில் ஆச்சரியம், ஏமாற்றத்தினால் வருத்தம், தன்முகம் உரிக்கப்படுகிறதே என்று கோபம்..இதற்கெல்லாம் காரணம் நானும்தான் என்றாலும், மனம் அவ்வளவு சீக்கிரமா தன்னிடமே ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விடும்?
பிம்பத்தை நான் தேர்ந்தெடுத்து முனையலாம், அதை அங்கீகரிப்பதும் அப்படியே எதிர்பார்ப்பதும் யார்? நான் நடித்தவுடன் என்னைக் கைதட்டி ஊக்குவித்தது யார்? எது ஆரம்பம்? எது விளைவு?
ஒன்றிலிருந்துதான் இன்னொன்று வருகிறது என்பது நான் நம்ப விரும்பும் அறிவியல்.

ஒன்றும் அதனிடத்திலிருந்து வந்த இன்னொன்றும் ஒன்று போலத் தோன்றினாலும் வேறுவேறானவை தான், ஒன்று இன்னொன்றை உருவாக்கும்போது தன்னை இழப்பதில்லை என்று தத்துவம் சொல்கிறது. (பூர்ணமத வாக்கியம், ஈஸோபநிஷத்).

இவ்விரண்டில் எது மனத்தோடும் நடைமுறையோடும் ஒத்துவருகிறது? 
நான் முழுமை என்னிலிருந்து வந்தது என் எச்சம்தான் என்றால் நான் வந்தேனே அது முழுமையா நான் முழுமையா? 

தர்க்கத்தின் முடிவு மௌனம் என்றால், மௌனம் முடிவா ஆரம்பமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக