புதன், 11 ஜூலை, 2012

ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகவே இல்லை…!மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும்

ஜபருல்லா ஆரம்பித்தார் :
அஸ்ஸலாமு அலைக்கும், எனக்கு தெரிஞ்சு ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகவே இல்லை…!
(“ஆய்…….. ஊய்ய்………., அடக்கு….., நிறுத்து… எறங்கு….., ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..உய்ய்ய்ய்ய்ய்ய்…”  –  கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் கத்த ஆரம்பித்துவிட்டனர்.)
சத்தம்போடாதீங்க, நான் உண்மையெ தான் சொல்றேன். ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகலை!
(”உட்காருயா, பேசாதே, காஃபிரு” -  மீண்டும் கத்திக்கொண்டு மேடையை நோக்கி வந்தனர் சிலர்.)
உடனே கூட்டத்தின் தலைவர் எழுந்து, ‘உட்காருங்கப்பா, ஒரு வார்த்தைக்கு எந்திரிச்சிட்டீங்க, உட்காரு, அவர் ஒரு சேதி சொல்லுவாரு உங்க கோவம் அடங்கிடும்; கடைசியிலெ பாரு; ரசூலுல்லா சொன்னாஹ என் பின்னாலெ வாங்கன்னு, எங்கே போறேன்னு சொன்னாஹலா? அந்த மாதிரி சொல்லிருக்காஹ, உட்காருங்க  …’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹஜ்ரத் c.v. அபுபக்கர் ஷா பாக்கவி எழுந்து ‘ஜஃபருல்லாஹ் அருமையான சிந்தனைவாதி அதுமாத்திரமல்ல அந்த சிந்தனை சரியானத் தடத்திலெ போகுதாங்கிறதை சொல்லிக்கொடுக்கிற ஒரு அருமையான குருவை வச்சிருக்கிறவங்க, அவர்கள் இப்படி சொல்வதென்றால் அருமையான ஒரு செய்தியை உங்களுக்கு கொடுப்பதற்காக. உங்களுடைய உள்ளங்களெல்லாம் கோபத்தாலெ இருந்தாலும் சரிதான் பாசத்தாலெ இருந்தாலும் சரிதான், உங்களுடைய மனத்தைத் திறக்கவேண்டும். திடீரென்று சொன்னால்தான் மனம் திறக்கும் உட்காருங்க’ என்று சொன்னதும் எல்லோரும் அமைதியாக அமர்ந்தனர்.
ஜபருல்லா தொடர்ந்தார் :
இதைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, ’என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்’டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல; அதுக்குப் ’இஸ்ரா’ன்னு பேரு. அங்கேர்ந்து ரசூலுல்லாஹ் மேலே போனாங்கன்னு சொன்னீங்கல்ல. அதுக்கு பேரு ’மெஹ்ராஜு’. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து ’இஸ்ரா’ போனாஹ, ’மெஹ்ராஜு’க்குப் போனாஹாங்குறதுலெ நமக்கு என்ன முன்மாதிரி இருக்கு? நாம போக முடியாதே !
என்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ்? குர்ஆன்லெ, கடுகடுன்னு பேசும்போதுகூட ’யா முஜம்மில்’ அப்டீன்னு அழைக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; ’சிராஜுல் முனீர்’ அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து…. அது மாத்திரமல்ல , ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான்.
நாம் ’அவாம்’. ரசூலுல்லாஹ் யாரு ?  நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நாம ’அவாமு’. ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான்? ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம்? அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ்,  என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ’ரசூல்’ என்கிற வார்த்தையெ போடும்போது – மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) , ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல.? என்னுடைய ’அப்தை’ (அப்து – அடிமை) என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ’ரசூல்’ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய ’அப்து’ என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும்  சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ’ஹக்’ வேறே ’ஹல்க்’ வேறே ; அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே  நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும்  ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத , அல்லாவை மட்டும் தெரிஞ்ச , அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டான். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.
அடுத்தது ’திர்மிதி’யிலெ இருந்தது ’புஹாரி’லெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாங்க,  அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாங்க, இருபதா கொறச்சாங்க,  மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாங்க, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாங்க அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ  உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ! அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க , இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்ஸலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் , கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ. அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை! இஹலுக்கு (ரசூலுக்கு)  சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா , ’உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்’ என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால்? அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு அர்த்தம்னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை, நுபுவத்தை முடிச்சுட்டான், குர்ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார்  என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ ஹதீஸிலெ. இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ , ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம்.
நான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க ? அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகல்லெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே! அந்த ஆயத்து பொய்யா போயிடுமே? அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க? அப்ப தொடர்ந்து ’பாங்கு’தானே இருக்கும்? வேறே என்ன நீங்க பண்ண முடியும்? அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது? தொழுதுக்கிட்டே இருந்தா….? அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாங்க. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ’ஷட்டிங்’ பஸ்ஸா – போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு? இப்படித்தான் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாங்க, அலுப்பு பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னாருண்டு!
(சிரிப்பொலி)
இதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நம்ம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இது இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அவங்க இப்படி பேசினாங்க, இவங்க இப்படி பேசினாங்க அப்டீன்னு.. ’இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்’ என்று மூசா(அலை) துஆ செஞ்சாங்க. அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம்? ’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ. என்ன அர்த்தம்? எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமளே recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே , மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க. அடுத்து இன்னொன்னு சொல்றேன்.. ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க , நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களா?ன்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, ’ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்’ அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போன பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல? ஒரு பயணத்துக்கு… சரி , நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே.. ஏன்  சொல்லலை, காரணம் என்ன? ’சிந்தியுங்கள்’ என்கிறான் அல்லாஹ்.
நான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை (இது) . ஹஜ்ஜுலே நடக்கிறது பூரா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம் ‘அலை’ஹிஸ்ஸலாத்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்… அங்கே நடக்கிறது பூரா…அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம்! அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ’ஜம் ஜம்’மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா? அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு ’இபாதத்’ செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைப்பிடித்தல்னு அர்த்தம், கீழ்ப்படிதல்ண்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ செய்ய சொன்னான்? சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு? சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது? மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு ’சஜ்தா’ செய்யிண்டான் அதுக்கு முன்னாடி ’சஜ்தா’ செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ? எனவே மனிதர்களுக்கு ’சஜ்தா’ என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் ’சஜ்தா’ செய்ய சொன்னான் அல்லாஹ்.  சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். ’நான் நெருப்பு ; இவரை மண்ணாலெ படைச்சிருக்கே; இவரையா ’சஜ்தா’ செய்யனும் நான்?’ என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது , முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தா பண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ ’சஜ்தா’ என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.
இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க? எந்த திக்கை வக்கிறீங்க? மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா? தெற்குலெ இல்லை? அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன…? சிலை வச்சா தப்பு , கட்டடம் வச்சா பண்ணலாமா? சிலை வச்சா இணை வைக்கிறது! கட்டடம்னா? அது அல்லாட இல்லம்னா இதெல்லாம் / பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா? அது சொந்த வூடு, இது வாடகை வீடா ? இல்லை ,  அடமானம் புடிச்சிருக்காரா அல்லா? அல்லா யாருக்கு ’சஜ்தா’ பண்ணச் சொன்னான்? ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ body இருக்குது, ஆதத்துடையது எங்கே இருக்கு? அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா? அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு? முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும்?  மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ்ப்படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்ப்படிகிறோம். ’சஜ்தா’ பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப்  பண்ணச்சொன்னானோ… இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை ’சஜ்தா’ பண்ணமாட்டேண்டு அவன் சொன்னான்ல , அதையே நீங்களும் சொன்னா? ஆதத்தை ’சஜ்தா’ பண்ணலை , அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்…. அல்லா மாத்திட்டானா இடத்தை? எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்ப்படிதல் அடிமைப் படுத்தல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க? யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை ’காஃபிர்’னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒண்ணு சொல்லவா? தொழும்போது ’நிய்யத்து’ சொல்றீங்களே , அதை சொல்லுங்க பார்ப்போம்! சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே! அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது? அல்லாவைத் தொழுறேண்டுல்ல சொல்லணும். அது என்ன அல்லாவுக்காக? your prayer is to him or  for him?  அதைச் சொல்லுங்க. அல்லாவைத் தொழுவுறீங்களா, அல்லாவுக்காகத் தொழுவுறீங்களா? இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா..? எதுலெ இருக்கான் அவன்? அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க..? நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா..? For Him or To Him? அதனாலெ அல்லா என்ன சொன்னான்… ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு – அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு – அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் – உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; ’லாயிலாஹ இல்லல்லாஹ்’ / கலிமா – உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான். இல்லாட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள்? ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ’ஃபர்ளு’லெ இருக்கு..? தொழுகை.  அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு – அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும்? யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வந்தா அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்?
இந்த செய்தி  பூரா அல்லாடதான்னு நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்க முடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம்.
அதனாலெ ’ஆதம்’ என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான்? மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே! தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..?அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..? நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது..
**
’ஹும்….. இதுக்கு மேலே நான் பேசணுமா? பாருங்க, ஒரு அருமையான தத்துவத்தை கொடுத்திருக்கிறார். அல்லாஹ் சொல்றான் . சிந்தியுங்கள் என்று.  யோசனை பண்ணிப் பாருங்கப்பா ‘ -   (முடிவுரையில்) c v அபுபக்கர் பாக்கவி.
**
 நன்றி : இஜட். ஜபருல்லா, ஹமீது ஜாஃபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக