ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வரலாறு புகட்டும் பாடம்


  அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி).


படிப்பினைகள்





உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
islamic warrior
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.
ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.
நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.
என்ன அது?
நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.
அவன்  கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.

இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.

“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?
“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.
ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.
இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.

வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.

சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.

சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.

இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.
எவ்வாறு ?
சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.
குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.
எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.
தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.
இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.
சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?
“நிச்சயமாக இல்லை”
நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.
“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !
கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.
கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று  எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.
இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு  அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.
வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.
உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.
இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……வஸ்ஸலாம்
நட்புடன்
நல்லூர் உஸ்மான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக