சனி, 3 மே, 2014

மேகங்கள் பொழியும் உயிர் மழை

உயிரி (பாக்டீரியா) மேகங்கள் பொழியும் உயிர் மழை

Post image for உயிரி (பாக்டீரியா) மேகங்கள்  பொழியும் உயிர் மழை
அல்குர்ஆன்குர்ஆன் வழியில் அறிவியல்……….
அல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்திலுள்ள நமது பூமிக்கு உள்ள தனிச் சிறப்பே பல்லுயிர்கள் வாழும் உயிர்க் கோளாமாக இருப்பதுதான். இவ்வுயிரினங்களுக்கு ஆதாரமாய் நீர் நிறைந்து நீலப்பந்தாக பூமி காட்சிதருகிறது. ஒவ்வொரு உயிர்களும் நீரிலிருந்தே படைக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுவதை நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிறது. உயிர்களுக்கு ஆதாரமான நீர் பூமிக்கு மட்டும் சொந்தமல்ல. ஏனெனில் வானம் பூமி படைப்பதற்கு முன்பே அல்லாஹ் நீரைப் படைத்து விட்டான். எனவேதான் நீரானது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.
“ ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான்.அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை.(பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி). நூல்: புஹாரி.3191.
பைபிளின் ஆரம்ப வசனங்களும் இக்கருத்தையே கூறுகின்றன.
“ தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். “ -ஆதியாகமம்-1:2
இந்து மத புராணங்களும், வைகுண்டத்தில் திருப்பாற்க் கடலில் மகா விஷ்ணு பள்ளிகொண்டிருப்பதாக கூறுகிறது.
பூமிக்கு நீர் வந்தது எப்படி? பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.அனைத்து அறிவியலார்களும் ஏற்றுக்கொண்ட கருத்து, பூமிக்கு நீர் வெளிக்கோள்களிளிருந்தே வந்திருக்கவேண்டும் என்பதே.நவீன தொலைநோக்கி மற்றும் செயற்கைக் கோள்களின் ஆய்வின்படி, நட்சத்திரங்களுக்கு இடையிலும், மற்றும் வால் நட்சத்திரம், ஆஸ்டிராய்ட் பனிப்பாறைகள் மற்றும் பிற கோள்களில் மிகப்பெரும் கடற்பரப்பு நீர் உள்ளதாக அறிவிக்கின்றன. சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் 1500 கி மீ நீளமும் 7 கி மீ அகலமும் கொண்ட மிகப்பெரிய ஆறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
நூஹ் (அலை) காலத்தில் நடந்த பெரு வெள்ள பேரழிவின் போது நீரானது மலை உச்சிக்கு மேல் உயர்ந்தது. இப்பெருவெள்ள நீர் மேகத்திலிருந்து வரவில்லை. வானத்திற்கு மேல் விண்வெளியில் இருந்து வந்தது என்றே அறியமுடிகிறது.
“ வானத்தின் வாயில்களை திறந்து விட்டு தாரை தாரையாக மழை கொட்டும்படி நாம் செய்தோம்.” -அல்குர்ஆன் குர்ஆன்.54:11.
இன்று நாம் பெரும், மழை எப்படி பொழிகிறது?
நவீன அறிவியல் கூறுவதை சுருக்கமாக பார்ப்போம். “சூரியன் பூமியை சூடாக்குகிறது. பூமி வாங்கிய வெப்பத்தை வைத்துக்கொள்ளாமல் பதிலுக்கு வேறு அலை அகலத்தில் வெப்பத்தை திருப்பி அனுப்பி அதன் அருகே உள்ள காற்றைச் சூடாக்குகிறது, சூட்டினால் தன் அடர்த்தி குறைவதால், ஒரு மிதவைத் தன்மை (Buoyancy) ஏற்பட்டு பூவியீர்ப்பு திசைக்கு எதிர்த்திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்பசலனம் (Convection) என்பர்.
புல்தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை இப்படி மாறுபடுவதால், பூமியின் மேற்பரப்பு ஒரே சூட்டில் இருப்பதில்லை.ஆகவே காற்றும் வெவ்வேறு உஷ்ணத்தில் சூடாக்கப்பட்டு,பயான்ஸி (மிதவை) விசை வேறு படுவதால் காற்றின் வேகம் மாறுபட்டு மேலே செல்லும். இப்படி மேலே குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கிறது. இதனால் காற்றில் இருக்கும் நீராவியும் குளிர்ந்து அங்கிருக்கும் தூசி,துகள்களின் மீது மைய(ல்)ம் கொண்டு திரண்டு பரவி மேகமாய் மிதக்கிறது. இவை மென்மேலும் குளிர்ந்து கனமானபின்பு மழையாகப் பொழிகிறது.”
பேராசிரியர்.அருண் நரசிம்மன், ஐஐடி-சென்னை. www.ommachi.net
அல்குர்ஆன் குர்ஆன் கூறும் அருள் மழை.
அல்குர்ஆன் குர்ஆனில் மழை பொழியும் நிகழ்வை அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.
1.“அல்லாஹ்தான் காற்றை அனுப்பி வைக்கின்றான்.அது மேகத்தை ஓட்டுகிறது.அவன் விரும்பியவாறு அதனை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பி விடுகின்றான்.அதிலிருந்து மழை பொழிவதை நீங்கள் காண்கிறீர்கள்.” –அல்குர்ஆன் குர்ஆன்.30:48
2.“கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கின்றோம்.-
-அல்குர்ஆன்குர்ஆன்.78:14.
3.”(மழையை) சுமந்த பளுவான மேகங்களையும் அவனே கிளப்புகிறான்.”
-அல்குர்ஆன் குர்ஆன்.13:12.
4.”அவன்தான் அவனுடைய அருள் மழைக்கு(முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களை சுமந்த பின்னர், அதனை நாம் இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச்சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம்.” -அல்குர்ஆன் குர்ஆன்.7:57. இவ்வசனங்களை ஒட்டியே அறிவியல் விளக்கங்கள் செல்லுகின்றன. ஆனாலும் ஒரு சில வசனங்கள் மழை பொழியும் நிகழ்வில் உயிர்கள் இணைந்து கருக்கொள்வதாக கூறுவதும் சிந்திக்கவேண்டிய ஒன்று.
சூல் கொண்ட மேகம்.
“(பல பாகங்களிலும் சிதறிக்கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றின்மேல் ஒன்றாக நிச்சயமாக அல்லாஹ்தான் அடுக்குகின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர் அந்த மேகங்களின் மத்தியில் இருந்து மழையை பொழியச் செய்வதையும் நீங்கள் காண்கிறீர்கள்.” -அல்குர்ஆன் குர்ஆன்.24:43
மேகம் கருக்கொள்ளும்படியான காற்றுகளையும் நாமே அனுப்பி வைக்கின்றோம்.அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கின்றோம். –அல்குர்ஆன் குர்ஆன்.15:22.
மேற்கண்ட வசனங்களில் “மேகங்களை ஒன்று சேர்த்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி”…மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கின்றோம்.”என்று அல்லாஹ் கூறுகின்றான்.
கருவுறுதல் (Fertilization) என்பது இரண்டு ஆண்,பெண் பாலின உயிரினங்கள் சேர்ந்தால் மட்டுமே நடைபெறக்கூடியது. இச்சொல்லுக்கு அரபி மூலத்தில் Lawaqih ( to impregnate or Fertilize.) என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வசனத்திற்கு விளக்கம் அளித்த நபித்தோழர்கள் இப்ன் மஸ்வூத்(ரலி),மற்றும் இப்ன் அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுவது,
மேகத்தில் காற்றுகள் இணைந்து மேகங்களை கருக்கொள்ளச் செய்து அதிலிருந்து மழை பொழிகிறது. எப்படி கர்ப்பமுற்று பிரசவித்த ஒட்டகம் பால் சொரிவது போல், காற்றால் கர்ப்பமுற்ற மேகங்கள் சூல் கொண்டு மழை பொழிவிக்கிறது.
உபைத் பின் உமைர் அல்குர்ஆன் லைதீ அவர்கள் கூடுதல் விளக்கமாக கூறுவது,
பூமியில் சுழலும் காற்றை அல்லாஹ் அனுப்புகிறான்.அவைகள் மேலே சென்று மேகங்களை ஒன்று சேர்த்து கருக்கொண்டு மழை பொழிவிக்கிறது. இதுபோல் மகரந்தங்களை சுமந்த காற்று தாவரங்களின் பூக்களில் சேர்ந்து மகரந்த சேர்க்கை (Anemophily) செய்து கருக்கொள்ளச் செய்கிறது.
மேலே உள்ள வசனத்தில் காற்றுகள் என்று பன்மையில் கூறுகின்றான். உயிர் உள்ள காற்றுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கருக்கொள்ளும் போது ஆக்கப்பூர்வமான மழை கிடைக்கிறது. ஆனால் கருவுற முடியாத ஒற்றை மலட்டுக்(Barren wind) காற்றினால் அழிவுதான் நேரும் என்பதையும் அல்குர்ஆன் கூறுகிறது.
“நெருப்புடன் கூடிய புயல்காற்று (Tornado) அடித்து அதனை எரித்துவிட்டது.”
“ஆது” எனும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு)அவர்கள் மீது நாம் நாசமானதொரு காற்றை அனுப்பிய சமயத்தில் அது பட்டதையெல்லாம் தூசியாக்கிப் பறக்கடிக்காமல் விடவில்லை.” -அல்குர்ஆன் .2:226,51:41.
(கார்மேகத்தை கண்டபோது அவர்கள்) “இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம் தான்” என்று கூறினார்கள்.(அதற்கு அவர்களை நோக்கி) இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று (Tornado) இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.”என்று கூறப்பட்டது. –அல்குர்ஆன் .46:2
காற்றிலுள்ள உயிர் தூசு,துகள்கள் மேகத்தில் ஒன்று கூடி கருக்கொள்ளுகின்றன எனும் அல்குர்ஆன் கூற்றை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் உண்மைப்படுத்தி உள்ளன.
உயிரினம் உருவாக்கும் மழை பொழிவு ( Bio Precipitations )
1978 ல் அமெரிக்காவின் மாண்டனோ மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் சாண்ட் என்னும் ஆய்வாளர் சிறு விமானத்தில் மேகங்களுக்கு இடையில் பறந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தார். அம்மேகங்களில் pseudomonas syringae என்னும் பாக்டீரியாக்கள் தங்கி கருக்கொண்டு மழை பொழிவிப்பதாக ( Bio Precipitation ) அறிவித்தார். இப்பாக்டீரியாக்கள் தாவரங்கள் மற்றும் உலகெங்கும் உள்ளன. இவைகள் காற்றுக்களினால் உயரே தூக்கிச் செல்லப்பட்டு மேகங்களில் இணைந்து கருக்கொண்டு மழையை பொழிவிக்கின்றன.
இது சம்பந்தமாக விக்கிபீடியா தரும் தகவலைப் பார்ப்போம்.
உயிரிகளால் பொழிவு ( Bio Precipitation) என்பது மழையை உண்டு பண்ணச் செய்யும் பாக்டீரியாக்களைப் பற்றியதாகும். வானிலையில் மழை பொழிவென்பது வளி மண்டல நீராவி குளிர்ந்து நிலத்தை அடையும் நிகழ்வாகும்.இவ்வாறு விண்ணில் உண்டாகும் மேகங்கள் மழை மற்றும் பனிப்பொழிவிற்குத் தேவையாகும். இதற்கு தூசுகள் இதர வளிகள் உருவாக உதவுகின்றன. ஆயினும் இவை இல்லா, ஒரு உயிர்ப்பொருள் பனிக்கரு உருவாக காரணமாக அமையும் நிகழ்வையே உயிர் மழைப்பொழிவு என்கிறோம்.
தனிமங்களும் உப்புகளும் கார்மேகங்களில் நிறைந்து காணப்படுகின்றன. இவையும் பனிக்கரு உருவாவதில் பெரிதும் துணை புரிகின்றன. ஆயினும் வளி மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சைகள், மற்றும் சிறு பாசிகளே மேகம் உருவாதலில் கருவாக செயல் படுகின்றன. இவ்வாறு தட்ப வெப்ப சூழல் சம நிலையில் வளியில் உலவும் நுண்ணுயிர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.http://ta.wikipedia.org/s/iao
இம்மாதத்திய நியூ சயின்டிஸ்ட் இதழில் (NEW SCIENTIST-12 Jan-2013. P.14 ) ஒரு ஆய்வு செய்தி வெளியானது.
அமெரிக்கா அட்லாண்டாவில் உள்ள, ஜார்ஜியா அறிவியல் ஆய்வுக்கழகத்தை சேர்ந்த குழுவினர், நியூ மெக்சிக்கோவில் மையம் கொண்டிருந்த புயலை ஆய்வு செய்தனர். புயல் மேகங்களிலிருந்து சேகரித்த சாம்பிள்களில் உயிருள்ள நுண்ணுயிரிகள் (Microbes) இருந்தன. மண்ணிலிருந்து காற்றினால் தூக்கிச் செல்லப்பட்ட உயிரிகள் மேகங்களில் ஒன்று சேர்ந்து சூல் கொண்டு மழையை பொழிவிப்பதாக அறிவித்தனர். தங்களது ஆய்வை American geophysical union கூட்டத்தில் கடந்த டிசம்பரில் சமர்பித்துள்ளனர்.
ஆலங்கட்டி (பனிக்கட்டி) உருவாக்கும் நுண்ணுயிரிகள்.
கடந்த ஜூன் 2010 ல் அமெரிக்கா மாண்டனோ நகரில் பொழிந்த ஆலங்கட்டி மழையில், சுமார் 2 அங்குலம் விட்டமுடைய பனிக்கட்டிகள் விழுந்தன. இவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது, பனிக்கட்டியின் உட்புற கருவில் ( Embryo ) பாக்டீரியாக்கள் தங்கி பனிக்கட்டியை உருவாக்குவதாக அறிந்தனர். இப்பாக்டீரியாக்கள் ( Ice Nucleators ) உருவாக்கும் ஆலங்கட்டி பனிமழை பயிர்த் தாவரங்களில் பட்டு சேதமாக்குகிறது.அமெரிக்காவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் பயிர் இழப்பு ஏற்படுவதாக கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வையும் அல்குர்ஆன் குர்ஆன் விவரிக்கிறது.
“அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டியையும் பொழியச்செய்கின்றான். அதனை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கின்றான். அவன் நாடியவர்களை விட்டும் தடுத்துக்கொள்கிறான்.” -அல்குர்ஆன் .24:43.
“ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகி) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்து விட்டது.” –அல்குர்ஆன் .3:117.
ஐஸ் நியூக்ளியேட்டர் பாக்டீரியாக்கள், தக்காளி, பீன்ஸ், நெல், சோளம், புகையிலை போன்ற தாவரங்களின் இலைகளில் தங்கி வளரும். பயிர்களுக்கு நேரடியாக எந்த தீங்கும் இவை செய்வதில்லை. இவை வெளியிடும் புரதமானது நீர்த் துளியை பனிக்கட்டியாக மாற்றி தாவரத்தின் செல்களை அழித்துவிடும்.
பொதுவாக எல்லா புரதங்களும் (Protein) நீருடன் வினை புரியும். குறிப்பாக இரண்டு புரதங்கள், நீர் ஐஸ் ஆவதில் தொடர்புடையவை. உறைபனி தடுப்பு புரதம். (AFP-Antifreeze Protein), மற்றொன்று உறைபனி ஆக்கும் புரதம்,(Ice Nucleating Protein-INA) இந்த AFP புரதமானது நீரின் மூலக்கூறுகள் பனிக்கட்டியாகாமல் தடுக்கக்கூடியது. ஆனால் INA புரதம் இதற்கு நேர் மாறாக நீரின் மூலக்கூறுகளை வெப்ப நிலையை உயர்த்தி பனிக்கட்டியாக உறையச் செய்யும்.
நீரில் பொதுவாக காற்றிலுள்ள தூசு, துகள், மற்றும் தாதுக்கள் கலந்திருக்கும் நிலையில் அதன் உறை நிலை பூஜ்யம் டிகிரி செல்சியர்ஸ். ஆனால் தூய்மையான (Super cooled) நீரின் உறைநிலை மைனஸ் – 40 டிகிரி செல்சியர்ஸ் ஆகும். தாவரங்களின் இலையில் படிந்திருக்கும் தூய்மையான நீர்த்துளி பனிக்கட்டியாக உறைவதில்லை.
ஆனால் P.Syringae- Ice Nucleating பாக்டீரியா தனது INA புரதத்தை சுரந்து வெப்ப நிலையை உயர்த்தி மைனஸ் -2 to -5 டிகிரி நிலையில் நீர் மூலக்கூறுகளை பனிக்கட்டியாக உறையச்செய்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்த பாக்டீரியாக்களே காற்றின் மூலம் மேலே எடுத்துச்செல்லப்பட்டு மேகங்களில் தங்கி கருக்கொண்டு மழையாகப் பொழிகிறது.
“மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கின்றோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கின்றோம்.” -அல்குர்ஆன் .15:22.
ஆக, பாக்டீரியா உயிரிகள் மேகத்தில் கருக்கொண்டு மழை பொழியும் நிகழ்ச்சியை அல்குர்ஆன் அன்று கூறியதை இன்று அறிவியல் மெய்ப்பித்துள்ளது. இந்த வசனத்திற்கான விளக்கத்தையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபித்தோழர்கள் சுரக்கும் ஒட்டகப்பாலோடு ஒப்பிட்டு கூறிவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
உயிருள்ள பாக்டீரியாக்கள் மூலம் அல்லாஹ் உயிரற்ற மழையை இறக்குகின்றான். உயிரற்ற மழையிலிருந்து உயிருள்ள தாவர வர்க்கங்களை பூமியில் வெளிப்படுத்துகின்றான்.
“அவனே இறந்தவைகளிளிருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே உயிருள்ளவைகளிலிருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே இறந்த பூமியையும் செழிப்பாக்குகின்றான்.” -அல்குர்ஆன் .30:19.
எஸ்.ஹலரத் அலி. ஜித்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக