சனி, 24 மே, 2014

குற்றத்துக்கு கடவுளா பொறுப்பு?





அந்த மாந்தோப்புக்குள் திருடன் ஒருவன் கள்ளத்தனமாக நுழைந்தான். மாமரத்தில் ஏறிய அவன் அதன் கிளையை வேகமாக உலுக்கினான். நிறைய பழங்கள் கீழே விழுந்தன. அந்தத் தோப்பின் உரிமையாளர் சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்தார். 

மரத்தில் இருந்த திருடனைப் பார்த்து, “டேய்! அயோக்கியப் பயலே! திருடும் எண்ணத்தில் வந்திருக்கிறாயே. இந்தத் தீய செயலுக்காக கடவுளின் முன் கூனிக் குறுகி நிற்க மாட்டாயா?” என்று கத்தினார் அவர்.

கடவுள் நம்பிக்கை உடைய அவரை ஏமாற்ற நினைத்தான் அந்தத் திருடன். அவரிடம் இவ்வாறு கூறினான் “ கடவுளின் வேலையாள் நான். கடவுளின் தோப்புக்குள் நுழைந்தேன். உண்பதற்காக கடவுள் இந்தப் பழங்களை எனக்குத் தந்தார். வேறொன்றுமில்லை அய்யா. தவறாக நினைக்கவேண்டாம் ” என்றான்.

அதற்குள் அந்த தோட்ட உரிமையாளரின் வேலையாட்கள் சிலர் அங்கே ஓடி வந்தனர். “அந்தத் திருடனைப் பிடித்து இந்த மரத்தில் கட்டு ” என்றார் அவர். வேலையாட்களும் அவனைப் பிடித்து மரத்தில் கட்டினார்கள்.

தடி ஒன்றை எடுத்த அவர் அவனை விளாசித் தள்ளினார். வலி தாங்க முடியாமல் அவன் “ அய்யா! என்னை இப்படி அடித்துக் கொடுமைப் படுத்துவதற்காக நீங்கள் கடவுளின் முன் நிற்க வேண்டும். தெரியுமா?” என்று அலறினான்.

“ இந்தத் தடி கடவுளுடையது. கடவுளின் வேலையாள்தான் நான். கடவுளின் ஆணைப்படியே இன்னொரு வேலையாளை அடிக்கிறேன். அடிக்கும் கையும் கடவுளுடையது. ஆதலால் இதில் தவறில்லை ” என்று சொல்லிக்கொண்டே திரும்பத் திரும்ப வெளுத்து வாங்கினார் அவர்.

கடைசியில் அந்தத் திருடன் “ அய்யா! குற்றத்திற்கு நானே பொறுப்பு. கடவுள் அல்ல. இனியும் என்னால் அடி தாங்க முடியாது. என்னை மன்னித்து விட்டு விடுங்கள் ” என்று கெஞ்சினான் அவன். அதன் பிறகே அவர் அவனது கட்டுகளை அவிழ்த்துவிடச் சொல்லி “ இனி இப்படிச் செய்யாதே” என்று அறிவுரை கூறி ஒரு கூடை நிறைய மாம்பழங்களை கொடுத்தும் அனுப்பினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக