வியாழன், 12 பிப்ரவரி, 2015

மண்படாத வாழ்க்கை! -


 

வெ.இறையன்பு

மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் வாழ்கிற வாழ்வே 'சொகுசான' வாழ்வென்று நாம் சொல்லிக்கொள்கிறோம்.

காலில் மண்படாமல், சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வது தான் பாதுகாப்பான வாழ்வென்று நினைத்துக் கொள்கிறோம்.

நம் தட்பவெப்பம், நம் மரபுக் கூறுகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. வெயில் கொளுத்துகிற ஊரில், தாகம் அதிகமெடுக்கும். தண்ணீர் குடிக்கும் தேவை அதிகரிக்கும். உள்ளே போகிற நீர் பெரும்பாலும் வியர்வையாக வெளிவருவதுதான் உடலுக்கு நல்லது. குளிர்சாதன வசதி கொண்டு, வியர்வையைத் தடுத்தால் சிறுநீரகம் அதிகம் உழைக்க, அவை பழுதடைந்துவிடும்.

இயற்கையுடன் இயைந்து வாழ்கிற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை, செறிவான நெறி. மழையில் ஒரு முறையேனும் நனைந்தால்தான் அதன் சுகத்தை உணரமுடியும். வானமே 'ஷவராக' மாற, நம் உடலில் தெளிக்கும் சாரல் ஒரு நிமிடம் நம் இருத்தலையே கரைத்துவிடும் தன்மை பெற்றது. அது ஏறத்தாழ 'மெய்ஞானம்' கிடைத்த அனுபவமாகிவிடும்.

அப்படி நனைந்தால் காய்ச்சல் வருமே என்று கவலைப்படும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முடிதிருத்தகத்தில் சிகையலங்காரத்திற்கு முன்பு தெளிக்கப்படும் நீருக்கே பயப்படுவார்கள். மழையில் நனைவதால் அப்படிக் காய்ச்சல் வந்தால் வரட்டுமே! உயிரா போய்விடப் போகிறது!

மகிழ்ச்சியுடன் செய்கிற எதுவுமே உடல் உபாதையை விளைவிக்காது என்பதே உண்மை. நல்ல வெயிலில் வியர்வை வழிந்தோடும் வரை விளையாடும்போது நம் மனமும், உடலும் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன.

சில நாட்கள் செருப்புப் போடாமல் நடந்து, பூமியின் குறுகுறுப்பை உணர வேண்டும். மாதத்தில் ஒரு நாளாவது மலைச்சாரலில் நடந்து போக நேரிட்டால், நம் உடலின் உண்மையான பலத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

உடல் அளப்பரிய சக்தியுடையது. நல்ல உழைப்புக்குப் பின் ஏற்படுகிற தூக்கமே சொர்க்கம் என்பதை வியர்வையை அனுபவித்தவர்களால் உணரமுடியும்.

இயற்கையின் சக்திகள் அனைத்துமே நமக்கு சகாயமானவை. அவற்றை விநோதமாகக் கருத கருதத்தான் நமக்கு உண்டாகிற நோய்களின் அளவும் அதிகரித்துவிட்டன.

மண்ணில் அழுக்குப் படியாத கால்கள் அவற்றின் படைப்பு நோக்கத்தையே இழந்து விட்டதாகவே கருதமுடியும்.

மண்ணை மதிப்பவர்கள், காற்றை நேசிப்பவர்கள், மழையை விரும்புபவர்கள் அவற்றிடமிருந்து ஓடி ஒளிவதில்லை, மாறாக அவற்றைத் தேடி அலைவதுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக