ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

"தாத்தா... என்ன படிக்கிறீங்க? எனக்கு பரீட்சை இருக்கு... அதனாலே நான் படிக்கிறேன். நீங்கள் ஏன் படிக்கிறீங்க?" என்றபடியே வந்தான் பாபு.

"வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இங்கிலாந்தில் வாழ்ந்த லியானர்ட் வெல் பற்றி படித்தேன். எவ்வளவு ஆழமான சிந்தனை அவருக்கு" என்று பாபுவின் ஆவலை தூண்டினார் தாத்தா.

"அவரை பற்றி சொல்லுங்க தாத்தா" என்று நச்சரித்தான் பாபு.

"மக்கள் நடமாட்டமே இல்லாத பாதை, இருட்டுவேளை... கையில் பணத்துடன் குதிரை மீது பயணம் செய்து கொண்டிருந்தார் லியானர்ட் வெல். அப்போது 'நில்' என்று அவரை மிரட்டியபடி எதிரே வந்து துப்பாக்கியை காட்டினான் ஒரு முகமூடி கொள்ளையன்.

"எடு பணத்தை" என்று மிரட்டினான்.

பணத்தை கொடுத்த பிறகும், "ம்... மரியாதையாக குதிரையை என்னிடம் ஒப்படைத்துவிடு" என்று மேலும் மிரட்டினான். அதன்படியே நடந்துகொண்டார் வெல்.

வெற்றிக்களிப்புடன் குதிரை மீது ஏறி புறப்பட தயாரான முகமூடி கொள்ளையனை நிறுத்தி, "உனக்கு வெட்கமாக இல்லையா? உழைத்து உண்ணாமல் திருட்டு தொழில் செய்கிறாயே இது பாவம் இல்லையா?" என்று கம்பீரமாக குரலை உயர்த்தி கேட்டார் வெல். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன், "டேய், நீ மானம் அற்றவன். உயிருக்கு பயந்து பணத்தையும் குதிரையையும் என்னிடம் கொடுத்த கோழை" என்று கேலி பேசினான்.

லியனார்ட் வெல் உறுதியுடன் "மூடனே, நாளை கடவுளின் கேள்விக்கு நீ என்ன பதில் சொல்வாய்? திருடுவது பாவம் என்ற பைபிள் நெறியை நீ அறியாதவனா? இறைவனின் தண்டனைக்கு ஏன் உள்ளாகிறாய்?" என்று கேட்டார்.

அவரது உறுதி மற்றும் தெளிவான பேச்சால் கொள்ளைக்காரன் ஆச்சர்யம் அடைந்தாலும் தப்பிக்கும் நோக்கத்தில் "மேலே பேசாதே... பேசினால் சுட்டுவிடுவேன். சாக பயந்து பணத்தையும், குதிரையையும் கொடுத்த கோழை நீ. எனக்கு புத்தி சொல்கிறாயா?" என்று உறுமினான்.

"போயும் போயும் பணத்துக்காகவோ குதிரைக்காகவோ நான் சாக விரும்பவில்லை. அவற்றை சம்பாதிக்க என்னால் முடியும். இப்போதும் நான் சாவதற்கு தயார். கடவுளுக்கு விரோதமான இழி செயலான திருட்டினால் உனக்கு பாவம் வரும். அந்த பாவத்திலிருந்து உன்னை தடுப்பதால் மரணம் வந்தாலும் அந்த மரணம் ஏற்கத்தக்கது. சுடு என்னை" என்றபடி குதிரைக்கு முன்னே நின்று மார்பை திறந்து காட்டினார் வெல்.

திகைத்துப் போன கொள்ளையன் சற்று தடுமாறினான். இறுதியில் குதிரையில் இருந்து இறங்கி லியானார்ட் வெல்'ஐ தழுவிக் கொண்டு, "பாவத்திலிருந்து என்னை மீட்டுவிட்டாய். அதற்கு நன்றிக் கடனாக திருட்டு தொழிலை விட்டுவிடுகிறேன்" என்று கண்ணீர் விட்டான்" என கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

"தாத்தா, ஆத்திச்சூடியில் இது பற்றி என்ன சொல்லியிருக்கு?" என்றான் பாபு.

"தீயோர்க்கு அஞ்சேல்" என்றார் தாத்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக