சனி, 28 மார்ச், 2015

அன்பின் இழைகளால் பின்னப்படுவது.


மன்னிப்பு எனும் வார்த்தை மனிதகுலத்துக்கே உரிய மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில்தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால்தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது.

ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும் போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது.

ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்துவிட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும்.

மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை.

மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். 'எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்' என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத்தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு மனதையே வெற்றி கொள்ளும். இதைத்தான் மகாத்மா சொன்னார், 'மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.'

நீங்கள் ஒரு நபரைப் பார்த்துக் கத்தியால் குத்தினால் அவருக்குக் காயம் ஏற்படும். ஆனால் ஒரு நபர் மீது கோபமாய் இருக்கிறீர்களென்றால் அவருக்கு எதுவும் நேராது. மாறாக அந்தக் கோபம் உங்களுக்குத்தான் கெடுதல் உண்டாக்கும். நீங்கள் யார் மீது கோபமாய் இருக்கிறீர்களோ அவர் இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே மன்னிப்பு என்பது முதலில் உங்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல செயல் என்பதை உணருங்கள்.

பல வேளைகளில் தவறிழைக்கும் நபர்கள் தவறை உணர்ந்து தட்டுத் தடுமாறி மன்னிப்புக் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நிபந்தனையற்று மன்னியுங்கள். 'சே... இதுல மன்னிப்பு கேக்க என்ன இருக்கு' என்பது போன்ற வார்த்தைகள் நட்பையும், உறவையும் பலமடங்கு இறுக்கமாக்கும்.

சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுங்கள். அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுங்கள். மன்னிப்புக் கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது உயர்ந்த நிலை!

இன்றைய மனித உறவின் பலவீனங்கள் பலவேளைகளில் திடுக்கிட வைக்கின்றன. பெற்றோரை மன்னிக்க மறுக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் மீது வெறுப்பு வளர்க்கும் பெற்றோர், அரிவாளுடன் அலையும் சகோதரர்கள், வன்மத்துடன் திரியும் தம்பதியர்!

இவை எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி மன்னிப்பு என்பதை உணர்கிறீர்களா?

தவறே செய்யாத மனிதர்கள் இருந்தால், அவர்கள் மன்னிப்பு வழங்கத் தேவையில்லை. நாம் தவறும் இயல்புடையவர்கள் எனும் உணர்வு நமக்கு இருந்தால் மன்னிப்பு வழங்க மறுப்பதில் அர்த்தமில்லை!

மன்னிப்புக் கேட்கும் போதும் அடுத்தவரைக் குற்றம் சாட்டும் மனநிலையுடனோ, பழி போடும் மனநிலையுடனோ, ரொம்பவே தற்காப்பு மனநிலையுடனோ பேசாதீர்கள். 'செய்தது தவறு... வருந்துகிறேன்...' எனும் நேர்மையுடன் பேசுங்கள். உடனடியாக மன்னிப்புக் கிடைக்கவில்லையேல் பதட்டப்படாதீர்கள். சில ஈகோ பார்ட்டிகள் மன்னிப்பு வழங்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மனதில் இருத்துங்கள்.

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. 'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக