அ.ராமசாமி
தொடங்கிய இடத்தில் முடிவதல்ல;வாழ்க்கை. ஒரு மழைத்துளியின் ஆசை பெருங்கடலின் பகுதியாக ஆவதில் இருக்கிறது. ஒரு மனிதப் பிறப்பின் வாழ்க்கை நிலையாமையின் இருப்பில் இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றாக இருந்தாலும், நிலைத்து நின்று விடும் ஆசையை ஒவ்வொரு மனிதனும் விட்டுவிடுவதில்லை. மனிதம் நிலையாமை என்பது தெரிந்ததால் தான் நிலையானது இறைமை என ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதுவாகி விட முயல்கிறது. ஆம் மனிதர்கள் கடவுளாகி விடுவதில் வாழ்க்கை முழுமை அடைவதாக நம்புகிறார்கள். அதற்காகவே அலைகிறார்கள்; தேடுகிறார்கள். அந்த முழுமை ஞானத்தில் இருக்கிறது என்கிறான் ஒருவன். ஒருவனுக்கு வீரத்தில் இருக்கிறதாகப் படுகிறது. மற்றொருவனுக்கோ செல்வத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. பெரும்பணக்காரனாக ஆவதும், பெரும்சாகசக் காரனாகக் காட்டிக் கொள்வதும், ஞானத்தின் உச்சத்தில் இருப்பதாகப் பாவித்துக் கொள்வதுமான வாழ்க்கையெல்லாம் பாவனைகள் தான் என்பதைக் கணியன் பூங்குன்றன் அந்தக் கவிதையின் ஒரு தெப்பத்தைக் காட்டிச் சொல்கிறான்.
மழை பெய்ததாலோ அல்லது ஊற்றுப் பெருக்காகவோ மலையிலிருந்து கிளம்பு நீரின் பயண நோக்கம் கடலை அடைவது என்பதை நீர் அறியுமா? என்று தெரியவில்லை. அறியாமலேயே தொடங்கும் நீரின் பயணம் ஓடையாக, தடாகமாக,அருவியாக, சிற்றாறாக, நதியாகப் பயணம் செய்கிறது. அதன் போக்கிலான பயணத்தை மனிதர்கள் குளமாகவும், ஏரியாகவும் அணையாகவும் மாற்றித் தடுத்து நிறுத்தவும் கூடும். என்றாலும் அதன் ஆசை என்னவோ கடலைச் சேர்வது என்பதில் தான் இருக்கிறது. அந்த நீர் அதற்காக மட்டுமே நிகழவில்லை; அதற்குள் கிடக்கும் தெப்பத்திற்காகவும் சேர்த்தே நிகழ்கிறது என நினைக்கிறான் பூங்குன்றன்.
நீருக்குள் விழும் ஒரு தெப்பத்தின் பயணமும் அந்த நீரின் பயணப்பாதையையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. திசைமாற்றப்படும் தெப்பத்தின் போக்கைப் போல மனித வாழ்க்கையின் பயணமும் பல நெருக்கடிகளால் திசை மாற்றம் அடையக் கூடியது. தனிமனித வாழ்க்கையில் அடுத்தவரின் பார்வைக்கு வராமல் - நடக்கும் திசைமாற்றங்களை முன் வைத்தே கணியன் பூங்குன்றன் தன் கவிதைப் பொருளை அமைத்துள்ளான். ஆகப் பெரிய காரியங்கள் எதனையும் செய்யாத சிறியோரை அவர்களின் சிறுமைக்காக இகழாமல் இருப்பது போலவே, சாகசங்கள் செய்தவர்கள் என்பதற்காகப் பெருமை பாராட்டுவதும் தேவையில்லை எனச் சொல்லும் அவன் சொல்லும் தொனியாலும் விதத்தாலும் அதனை பெரும் மனிதக் கூட்டத்திற்கே உரியதாக மாற்றியுள்ளான். யாதும் ஊரே; யாவரும் கேளிர் எனத் தொடங்கும் அந்த வரிகள் ஆகப் பெரும் பொதுமையை நோக்கிப் பேசும் சொற்கூட்டம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? என்ற ஐயம் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கணியன் பூங்குன்றனின் உள்ளார்ந்த நோக்கத்தை மொழிபெயர்ப்பில் வாசித்தவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள்; ஆனால் நேர் தமிழில் வாசித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்கிறார்கள்.
தனிமனிதர்களின் வாழ்க்கைப் பாதையைப் பற்றிப் பேசும் பூங்குன்றனின் இக்கவிதை ஒரு இனத்தின் இருப்பையும் அலைக்கழிப்பையும் கூடப் பேசும் கவிதையாக மாறியிருப்பதை நாம் உணர வேண்டும். சமூகத்தின் வழித்தடங்களை – ஒரு கூட்டத்தின் பாதையை – திசை மாற்றம் செய்வதில் போர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை பண்டைய வரலாற்று நிகழ்வுகள் காட்டியுள்ளன. உலக வரலாற்றில் போர்களால் திசை தடுமாறிப் பல இடங்களுக்குப் பரவிய கூட்டங்கள் பலவாகும். அலெக்ஸாண்டரையும் செங்கிஸ்கானையும் மாவீரர்களாக மட்டுமே போர்கள் காட்டியது என்பதை வரலாற்றுப் புத்தகங்களை மட்டும் வாசிப்பவர்கள் நம்பலாம். அவர்கள் நடத்திய போர்களுக்குப் பின் ஏற்பட்ட கலப்புகளும் சேர்மானங்களும் மனித குல வாழ்க்கையில் ஏற்படுத்திய அடையாளங்கள் பலவிதமானவை. சிலுவைப் போர்களும் இரண்டு உலக யுத்தங்களும் நபர்களை வீரர்களாகக் கட்டமைக்க நடந்த போர்கள் அல்ல. மனிதக் கூட்டத்தை இடம் சார்ந்து நிலைத்து நிற்க விடாமல் அலைக்கழிக்க நடந்த போர்கள் என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் நடந்த பல போர்களும் பின் விளைவுகளுமே பாரத தேசம் என்னும் அடையாளத்தை உருவாக்கும் பயணத்தைத் தொடங்கி வைத்தன.
கண் முன்னே சின்னஞ்சிறு நாடான இலங்கையில் நடந்த யுத்தம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்த உண்மையை உணர்த்தியுள்ளது. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு அதை உணர்த்தத் தவறி விட்டது என்றே தோன்றுகிறது. அந்த வகையில் தான் கணியன் பூங்குன்றனின் கவிதையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர மறுக்கிறார்கள் என்ற நினைப்பு தோன்றுகிறது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போராட்டங்கள் வெறும் போராட்டங்கள் என்ற வரையறைக்குள் அடங்கி விடக் கூடியன அல்ல. போராட்டங்கள் போர்களாகவும் நடந்தன. போர்கள் என்றாலே இடங்கள் பறிபோவதும், அவ்விடங்களில் வாழ்ந்தவர்கள் இடம் பெயர்ந்து வேற்றிடம் தேடிப் பயணம் செய்ய நேர்வதும் தவிர்க்க முடியாதவை. ஈழப் போராட்டத்திலும் யுத்தங்களிலும் அதுதான் நடந்தன. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது இயன்றவர்கள் வெளியேறி பூமிப் பந்தின் பல பாகங்களுக்கும் சென்றனர். யுத்தத்தின் காரணமாய் மரணத்துள் வாழ நேர்ந்தவர்கள் அகதிகளாய் அலைய நேரிட்டதையும் பதிவுகளாக்கித் தந்துள்ளார்கள். நிலைகொள்ளல் இன்றி நீரில் பட்ட தெப்பமாய் அலையும் மனிதர்களாய் இருப்பவர்களின் நிலை அறியாது தமிழ்நாட்டுத் தமிழர்கள், தனித்து வாழ்வதன் தாத்பரியங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நிலம், தமிழர்களுக்கு மட்டும் உரியது எனப் பேசுவதன் ஆபத்து தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட பேச்சா? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் அடையாளத்தை உருவாக்கும் மொழி, பண்பாடு, அறிவு ஆகியவற்றை உருவாக்கும் ஒரு நிலப்பரப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் அந்த நிலம் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் வாழும் பிரதேசமாக இருக்க வேண்டும் என வாதிடுவதன் ஆபத்துக்களை உணர வேண்டும்.
காவிரியாற்றில் நமது உரிமையைக் கோரிப் பெறுவதில் காட்டும் நமது அக்கறை அண்டை மாநில மக்களை எதிரிகளாகப் பாவித்துப் பகை வளர்க்கும் எல்லைக்குப் போய்விடக் கூடாது. முல்லைப் பெரியார் அணையைக் காரணமாக்கி இன்னொரு மாநில மக்களை மற்றவர்களாக நினைத்துப் போர்க்களத்தை உருவாக்கி விடக் கூடாது. தமிழ்த் தேசிய உணர்வு என்பது தமிழ் நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும், பண்பாட்டு அடையாள உருவாக்கங்களுக்காகவும் குரல் கொடுக்கும் உணர்வாக இருக்க வேண்டும். அவற்றை அடைய விடாமல் தடுக்கும் அதிகாரத்துவ சக்திகளை, அமைப்புகளை அடையாளங்காட்டும் முயற்சியில் வலிமையோடு செயல்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் அண்டை மாநில மக்களை வெறுக்கும் கூட்டமாகத் தமிழர்களை ஆக்கும் எத்தணிப்புகளைச் செய்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டிலிருந்து தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை அந்நியர்கள் எனச் சித்திரித்துப் பேசும் குரல்கள் அவ்வப்போது தலை தூக்கி வந்துள்ளன. தமிழைத் தாய்மொழியாக் கொள்ளாதவர்களால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடை பட்டுள்ளது என அந்தக் குரல்கள் வலியுறுத்துகின்றன. தமிழைத் தவிர வேறு மொழியை அறியாதவர்களைக் கூட அவர்களின் சில நூறாண்டுப் பூர்வீகத்தைத் தோண்டி எடுத்து அந்நியர்கள் என முத்திரை குத்துவதன் நோக்கம் தமிழர்களுக்கு நன்மை உண்டாக்க வேண்டும் என்பதாகப் படவில்லை. அருகருகே வாழ்ந்து தன்னிலை மறந்தவர்களின் மனத்திற்குள் கலவர பயத்தை உண்டாக்குவதின் மூலம் எதிரிகளைக் கட்டமைத்து வளர்ச்சியை முடக்கிப் போடவே இந்த வாதங்கள் பயன்படும். அது மட்டுமல்லாமல், இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அம்மாநிலங்களின் பெருநகரங்களில் மட்டுமல்லாமல், சிறுசிறு கிராமப் பகுதிகளிலும் வாழ நேர்ந்ததால் அதன் பூர்வகுடிகளாகவே ஆகி விட்ட தமிழர்களின் வாழ்க்கையையும் நெருக்கடிக்குள்ளாக்கும் ஆபத்து கொண்டது இந்த வாதங்கள். இந்த வாதங்கள் குறுகிய வாதங்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான இடப் பெயர்வுகளையும் நம் மனங்களில் நிழலாட விட்டு இக்குரல்களுக்குச் செவி மடுக்க வேண்டும்.
ஈழப் போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தங்கி விட்டார்கள். கனடாவிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் அடிப்படை உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுக் குடியேறிவிட்டார்கள். அவர்களை அந்நாடுகள் திருப்பி அனுப்பி விடும் என்ற ஆபத்தில்லாமல் உலக மனிதர்களாக ஆகி விட்டார்கள். இவர்களின் வாழ்க்கையையெல்லாம் பாதிக்கும் விதமான ஒன்றாகத் தமிழ் தேசிய உணர்வு வடிவம் கொண்டுவிடக் கூடாது என்பதைத் தமிழ்த் தேசிய வாதிகள் மனங்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தமிழர்களுக்கு மட்டும் உரியது எனப் பேசும் பேச்சுக்கள், ‘ இந்தியா இந்தியர்களின் நாடு’ எனப் பேசும் பாசிசக்குரலின் இன்னொரு வடிவம் தான். சகிப்பின் அடையாளமாகக் கருதப்படும் ஜனநாயக நாட்டில் மதச் சிறுபான்மையினரின் இருப்புக்காகப் பேசுவது நாகரிகத்தின் அடையாளம் என்றால், மொழிச் சிறுபான்மையினருக்காகப் பேசுவதும், அவர்களை ஏற்பதும் ஜனநாயகத்தின் – நாகரிகத்தின் அடையாளம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தமிழின் பெயரால் தமிழர்களின் மனம் குறுக்கப்படுவது கணியன் பூங்குன்றனின் கவிதையைத் தமிழர்கள் விரும்பித் தொலைத்து விடச் செய்யும் முயற்சியாகும்.
உலகக் கவிதைகள் தொகுப்பில் இடம் பெறத்தக்க கணியன் பூங்குன்றனின் கவிதையைக் காப்பாற்றுவது என்பது அதன் தாக்கத்தை – அதன் அர்த்த இருப்பைத் தமிழ்ச் சமூகம் தக்க வைப்பதில் தான் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக