வியாழன், 8 மே, 2014

மாயா இன மக்களும் உலக அழிவும்-11

கிரிகோரியன் நாட்காட்டி, தை மாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரை 365 நாட்களையும்,  நான்காவது வருடம் 'லீப் வருடம்' என்னும் பெயரில் 366 நாட்களையும் கொண்டிருக்கும். இது போலவே மாயன்களும் தமக்கென தனியாக நாட்காட்டியைக் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தமக்கென ஒரு நாட்காட்டியை அல்ல, மூன்று நாட்காட்டிகளை உருவாக்கி வைத்திருந்தனர். அவை மூன்றும் வெவ்வேறு அடிப்படையகளில், வித்தியாசமாக அமைக்கப்பட்டவை.
'ஷோல்டுன்' (Choltun), 'ஷோல் அப்' (Chol’ab’), 'ஷோல் கிஜ்' (Chol q’ij) என்னும் மூன்றும்தான் மாயன்களிடம் இருந்த நாட்காட்டிகள். இதில் 'ஷோல்டுன்' என்னும் முதல் நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியாகும். இது நீண்ட 'காலக் கணக்கைக்' (Long count) கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி. அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
'ஷோல் அப்'  என்னும் இரண்டாவது நாட்காட்டி, எமது கிரிகோரியன் நாட்காட்டி போல, சூரியனைப் பூமி சுற்றும் சூரிய நாட்காட்டியாகும். இது 365 நாட்களைக் கொண்டது. ஷோல்க் 'இஜ் என்னும் மூன்றாவது நாட்காட்டி 260 நாட்களைக் கொண்ட நாட்காட்டி.
நாம் முதலில் 'ஷோல் அப்' நாட்காட்டி பற்றிப் பார்க்கலாம். இந்த நாட்காட்டி மொத்தமாக 19 மாதங்களைக் கொண்டது. அதில் 18 மாதங்கள், ஒவ்வொன்றும் 20 நாட்களைக் கொண்டவை. மொத்தமாக 18x 20 = 360  நாட்கள் வருகிறது. கடைசியாக வரும் 19 வது மாதம் 5 நாட்களைக் கொண்டது. மொத்தமாக 365 நாட்கள். மாயன்களின் முதல் மாதத்தின் பெயர் 'பொப்' (Pop) என்றும், கடைசி மாதம் 'வேயெப்' (Weyeb) என்றும் அழைக்கப்படுகிறது. அது போல, மாதம் தொடங்கும் முதல் நாள் 0 (பூச்சியம்) என்றும், மாதம் முடிவடையும் நாள் 19 என்றும் அழைக்கப்பட்டது. கடைசி மாதமான 'வேயெப்' மாதத்தின் முதல் நாள் 0 எனவும், கடைசி நாள் 4 எனவும் குறிக்கப்படுகிறது.
மாயன்களின் புது வருடம் 'பொப் 0' (Pop 0) என்ற நாளில் ஆரம்பிக்கிறது. இது எமது தற்கால நாட்காட்டியின் சித்திரை மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் மாறி மாறி வரும். கடைசி மாதமான 'வேயெப்' மாதம், மாயன்களின் சிறப்பான மாதம் ஆகும். கடவுளுக்கென அர்ப்பனிக்கப்பட்ட 5 நாட்களைக் கொண்ட மாதம் அது. கடவுளை வணங்கி கொண்டாடும் மாதமாக இது அமைகிறது. கிரிகோரியன் உருவாக்கிய நாட்காட்டியின் கடைசி ஐந்து நாட்களின் முன்னர் கிருஸ்து பிறந்தார் என்பதற்கும், அதாவது மார்கழி மாதம் 25ம் திகதி கிருஸ்து பிறந்தார் என்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என நீங்கள் நினைத்தால், அப்படி நினைப்பதற்கு நான் பொறுப்பல்ல.




 மாயன்களிடம் மொத்தமாக மூன்று நாட்காட்டிகள் இருந்தன என்று கடந்த பதிவில் பார்த்தோம்.  மாயன்களிடம் இருந்த மூன்று நாட்காட்டிகளில், ஒன்று 365 நாட்களைக் கொண்டது. இரண்டாவது 260 நாட்களைக் கொண்டது.  ஆனால் இவை இரண்டுமே குறுகிய காலக் கணக்கைக் கொண்ட நாட்காட்டிகள். மாயன்கள் மிகப் பெரிய சுற்றைக் கொண்ட ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவைக் கொண்டு உருவாக்கபட்டது அது. அதை  'நீண்ட கால அளவு நாட்காட்டி' (Long Count Periods) என்றைழைக்கின்றனர் தற்கால ஆராய்ச்சியாளர்கள். இது ஷோல்டுன் (Choltun) என்று மாயன்களால் பெயரிடப்பட்டது. 
 
படத்தில் காணப்படுவதுதான் மாயன்களின் 260 நாட்களைக் கொண்ட 'ஷோல்க் இஜ்' (Cholq ij) என்னும் பெயருடைய நாட்காட்டி.  ஒன்றுடன் ஒன்று இணைந்த இரண்டு சக்கரங்கள் முறையே 13 பிரிவுகளையும், 20 பிரிவுகளையும் கொண்டது. இந்த இரண்டு சக்கரங்களும் முழுமையாகச் சுற்றும் போது,  13X20=260 நாட்கள் முடிவடைந்திருக்கும்.
  இதே போல, 365 நாட்களைக் கொண்ட,  பெரிய சக்கரமுள்ள இன்னுமொரு 'ஷோல் அப்' (Chol’ab’) என்னும் இரண்டாவது நாட்காட்டியும் மாயனிடம் உண்டு.  ஆனால் மாயன்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. இந்த மூன்று சக்கரங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து முழுமையாகச் சுற்றிவரக் கூடிய இன்னுமொரு நாட்காட்டியையும் உருவாக்கினார்கள். மாயனின் அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு தெரியப்படுத்தியது 'ஷோல்டுன்' (Choltun) என்னும்  இந்த நாட்காட்டிதான். 
 
இந்தப் படத்தில் உள்ளது போன்ற சில வட்ட வடிவமான சுற்றும் அச்சுகள் மாயன்களால் தயார் செய்யப்பட்டது. சிறிய அச்சைச் சுழற்றுவதன் மூலம் மற்றைய அச்சுகளும் சுழல்வது போல அது அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் சுழற்சியின் மூலம் அந்த அச்சுகள் ஐந்து நிலைகளைச் மாறி மாறிச் சுட்டிக் காட்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் ஐந்து நிலைகளும ஐந்து எண்களை குறிக்கும்.  அந்த நாட்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கும். மிகப் பெரிய அச்சு தனது ஒரு சுற்றைப் பூர்த்தியாக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது, மீண்டும்  13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் எடுக்கிறது. 
அதாவது  ஆரம்ப நாளான 0, 0, 0, 0, 0 இல் ஆரம்பித்து, இறுதி நாளான 13, 0, 0, 0, 0 நாளை அடைய 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் திகதியான 0, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நவீன நாட்காட்டியின்படி,  கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து  ஆரம்பமாகிறது.  அது போல, முடிவடையும் திகதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதய நவீன நாட்காட்டியின்படி, கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது. 
 மாயன் பற்றிய பல விசயங்களை, மிகவும் விளக்கமாக சொல்லாமல், நான் மேலோட்டமாகத்தான் சொல்லி வருகிறேன். காரணம் அதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு அயர்ச்சியை அது தோற்றுவிக்கலாம். அதனால், மாயன்களின் பெயர்கள், அவர்கள் பயன்படுத்திய பெயர்கள் ஆகியவற்றை தவிர்த்தே இந்தத் தொடரை எழுதி வருகிறேன். ஆனால் எல்லாவற்றையும் அப்படி விட்டுவிட்டுப் போய்விட முடியாது. சில தெளிவான விளக்கம்தான் இனி வர வேண்டியவற்றிற்கு முழுமையான அறிவைக் கொண்டு வரும் என்பதால், சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும். இப்போ, கொஞ்சம் கவனத்தை அங்கே இங்கே பாய விடாமல் கூர்மைப்படுத்தி இதை வாசியுங்கள். 
 
மாயன் நாட்காட்டியின் 0, 0, 0, 0, 0 ஆரம்பநாள் 0, 0, 0, 0, 0   4 Ahau என்றுதான் இருக்கும். இதில் வரும் 'ஆகவ்' (Ahau) என்பதன் அர்த்தம் கடவுள் என்பதாகும். அத்துடன், 4 Ahau என்பதில் கடவுள் பூமியை உருவாக்கினார் என்பதே மாயன் முடிவு. இதன்படி, மாயன் நாட்காட்டியின் அச்சுக்கள் சுற்றும் போது, வரிசையாக கீழே தந்தபடி 1,0,0,0,0 பின்னர் 2,0,0,0,0 பின்னர் 3,0,0,0,0 …….. இப்படி நாட்காட்டி மாறிக் கொண்டே வரும். பதின்மூன்றாவது சுற்றின் பின்னர் 13,0,0,0,0 என்பதில் நாட்காட்டி வரும் போது சரியாக 4 Ahau மீண்டும் வருகிறது. இந்த நாள்தான் 22.12.2012. 
என்ன புரிகிறதா……….? சரி, புரியாவிட்டால் அப்படியே கீழே இந்த அட்டவணையைப் பாருங்கள்………!  
0.0.0.0.0. 4 Ahau 8 Cumku
  1.0.0.0.0. 3 Ahau 13 Ch´en
  2.0.0.0.0. 2 Ahau 3 Uayeb
  3.0.0.0.0. 1 Ahau 8 Yax
  4.0.0.0.0. 13 Ahau 13 Pop
  5.0.0.0.0. 12 Ahau 3 Zac
  6.0.0.0.0. 11 Ahau 8 Uo
  7.0.0.0.0. 10 Ahau 18 Sac
  8.0.0.0.0. 9 Ahau 3 Zip
  9.0.0.0.0. 8 Ahau 13 Ceh
  10.0.0.0.0. 7 Ahau 18 Zip
  11.0.0.0.0. 6 Ahau 8 Mac
  12.0.0.0.0. 5 Ahau 13 Zotz´
  13.0.0.0.0. 4 Ahau 3 Kankin
  இதுவும் புரியவில்லையா……….? பரவாயில்லை இதை அப்படியே சிறிது விட்டுவிட்டு, ஒரு தேனீர் அருந்திவிட்டு, இந்த அட்டவணையைக் கவனியுங்கள். மாயனின் மொழியின் படி நாட்கள், மாதங்கள்,  வருடங்களுக்கான பெயர்களுடன் சில விளக்கங்கள் தருகிறேன் புரிகிறதா பாருங்கள்.
    1 நாள் = 1 கின் (Kin)                              (1x1)                     1 day
  20 கின் = 1 வினால் (Winal)                     (20x1)                 20 days
  18 வினால் = 1 டுன் (Tun)                         (18x1)               360 days
  20 டுன் = 1 காடுன் (Katun)                      (20x1)             7200 days
  20 காடுன் = 1 பக்டுன் (baktun)                (20x1)        144,000 days
  13 பக்டுன்= 1 முழுச் சுற்று ( great Cycle) (13x1)      1,872,000 days
   இங்கு 'கின்' என்பது நாளையும், 'வினால்' என்பது மாதத்தையும், 'டுன்' என்பது வருடத்தையும் குறிக்கும் சொற்கள். 'காடுன்', 'பாக்டுன்' என்பன அதற்கும் மேலே! 
 1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள். 
இப்படி 5125 வருடங்கள் எடுப்பதை, மாயன்கள் ஒரு முழுச் சுற்று என்கின்றனர். இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5x5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும் (Doomsday).
   இதுவரை நான்கு முழுச் சுற்றுகள் முடிவடைந்து விட்டதாகவும், இப்போது ஐந்தாவது கடைசிச் சுற்று நடந்து கொண்டிருக்கிறதாகவும் மாயன்கள் சொல்லி இருக்கிறார்கள் (இது ஓரளவுக்கு இந்துக்களின் யுகங்களுக்கு பொருந்துவதாக இருக்கிறது). இதை இன்னும் ஆழமாகச் சொல்வதானால், ஐந்தாவது சுற்றின் முதல் நாள், கி.மு. 3114ம் ஆண்டு ஆவணி மாதம் 11ம் திகதி (11.08.3114 கி.மு) அன்று ஆரம்பித்து, 5125 வருடங்கள் கழித்து 21ம் திகதி மார்கழி மாதம் 2012ம் ஆண்டு (21.12.2012) அன்று, கிட்டத்தட்ட 26000 வருசங்களைப் சுற்றிப் பூர்த்தி செய்கிறது பூமி. அதாவது, இந்த நாளே உலகம் அழியும் எனப் பலர் நம்பும் இறுதி நாளாகும். 
இதுவரை மாயன் சொல்லியவற்றைப் பார்த்தோம். இதை எல்லாம் ஒரு அறிவியல் விளக்கம் இல்லாமல் எம்மால் எப்படி நம்ப முடியும்? எங்கோ, எப்போதோ பிறந்த, யாரோ சொன்னதை நம்பி உலகம் அழியும் எனப் பயம் கொள்ள, பகுத்தறிவு அற்றவர்களா நாம்? எனவே நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.
   இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!
  சில காலங்களின் முன் 'ஹபிள்' (Hubble) என்னும் தொலை நோக்கிக் கருவியை 'நாசா' (NASA) வின்வெளிக்கு அனுப்பியது. அது வான்வெளியில் ஒரு 'செயற்கைக் கோள்' (Satellite) போல, பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வின்வெளியை அவதானித்ததில் எங்கள் நவீன வானவியல் அறிவு பன்மடங்கு அதிகரித்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக