மைக்கேல் ஹெச். ஹார்ட், வானியற்பியல் நிபுனர், அவருடைய முதல் புத்தகத்தில்(The 100: A Ranking of the Most Influential Persons in History) இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள்.
அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.
இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.
படிப்படுயாக, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.
இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.
இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.
அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.
அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤ம்) ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.
கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.
ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன.
முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)
ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.
அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும்.
குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.
வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை.
எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.
ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.
இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக