1.ஒரு டாக்டர் கொல்லப்பட்டார்..என்ன பெரிய விஷயம்? பலரும் கொல்லப்படுகிறார்கள், டாக்டர்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு?
2.கொல்லப்பட்டது ஒரு பெண்.. என்ன பெண்கள் கொல்லப்படுவதில்லையா?
3.அவர் தந்த சிகிச்சை பயனளிக்காமல் நோயாளி இறந்தததால் அவர் கொல்லப்பட்டார்.. பின்னே என்ன..இந்த டாக்டர்களெலாம் திமிர் பிடிச்சி திரியறாங்க..போட்டா தான் புத்தி வரும். அவங்க ஆளை கொன்னுட்டாங்களாம் அதுக்கு ‘அடையாள’ பணிநிறுத்தம் பண்றான்களாம்..டேய், நீங்க வேலை செய்யலேன்னா ஜனங்க சாவாங்களே, அறிவில்லே, பொறுப்பில்லே, பொறுக்கிகளா! எவ்வளோ காசு சம்பாதிக்கிறீங்க....ஏழைங்க வயித்திலே அடிக்காதீங்கடா...
மேல் குறிப்பிட்ட மாதிரிதான் சென்ற வாரம் கொல்லப்பட்ட டாக்டர் சாவு பற்றி இணையத்தில் மிகுந்த தொணதொணப்பு. விஷயம் தெரிந்தவர் தெரியாதவர் என்று இணையத்தில் எதுவும் கிடையாதே எல்லாரும் எச்சில் துப்பினார்கள், எதிர்த்தார்கள், விவாதித்தார்கள், விளக்கினார்கள் விமர்சித்தார்கள். சீக்கிரமே ஒரு தொலைகாட்சியில் நடந்தது என்ன என்று தெரியாமலேயே பேசிவிட்டு மாமனுக்கும் மச்சினிக்கும் ஃபோன் போட்டு ”இன்னைக்கு டிவிலெ வரேன்” என்றும் சிலாகித்துக் கொள்வார்கள். அவர்கள் பாவம், தாம் என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்று தெரியாதவர்கள் என்பதால் பரமபிதாவும் மன்னித்து விடுவார். ஆனால் அறிவாளிகளாகத் தம்மை அடையாளப் படுத்திகொண்டவர்களும் இந்த கோஷத்தில் இணைந்தார்கள், `கொலவெறி` பாட்டை ரசித்தே ஆக வேண்டும் என்பது போல.
புனைக்கப்பட்ட போலி புது காந்தி போலல்லாமல், இது வெறும் ஊடக விளையாட்டாக இருக்கவில்லை. மக்களில் ‘சாது’ என்று கருதப்பட்டவர்களும் கொதித்தார்கள். கொலைக்காக அல்ல, கொன்றது என்ன பெரிய தப்பு என்று! பேரறிவாளனுக்கு மரண தண்டனை கூடாது என்று கூக்குரலிட்டவர்கள் கூட, செத்த டாக்டர் என்ன பெரிய வெங்காயமா என்று மட்டும் தான் கேட்கவில்லை; ”தப்பு பண்ணினா அதனாலெ கொன்னுட்டாங்க..என்னப்பா பெரிய மேட்டர்” என்றும் நேரடியாகக் கேட்கவில்லை, என்ன இருந்தாலும் அறிவாளிகள் அல்லவா?
ஏன் இந்த கொலைவெறிஏன் இந்த கொலைவெறி? மருத்துவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் அதீத வெளிப்பாட்டினால்தான். இந்நிலை ஏன் உருவானது?
மருத்துவர்களுக்கு ஒரு போலி ஒளிவட்டம் புனையப்பட்டுள்ளது, அதை அகற்றுவது சமூகக்கடமை என்றெல்லாம் யாரும் துள்ளி வந்து கொதிக்கவில்லை. “என்னாங்கடா காசுமேல காசு சம்பாதிச்சுட்டு, சும்மா ஸ்ட்ரைக் பண்றீங்க?” எனும் தொனியில்தான் பலரின் கோபம். மருத்துவர்களை விடவும் அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு ஏன் இந்த ஆத்திரம்? எங்கேயோ மாதம் லட்சம் ரூபாய் வாங்குபவனைவிடவும், பொது மக்கள், சில ஆயிரங்கள் மட்டுமே சம்பாதிக்கும் மருத்துவனுக்குக் கூடுதல் மரியாதை கொடுப்பதால்தான் (கொடுத்ததால்தான்). இது ஏன் நடந்தது?
ஒரு கட்டத்தில், மருத்துவர்களிடம் அக்கறை இருந்தது, தொழில் நேர்மையும் தொழில் பக்தியும் இருந்தது. வசூலித்த கட்டணத்தை விடவும் நோயாளி குணமடைந்ததில் திருப்தியும் பெருமிதமும் நிறைவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் மருத்துவம் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் அவரவர்க்கு ஒரு பெருமையும் அர்ப்பணிப்பும் இருந்தது. இன்று போல காசு தந்தால்தான் சிகிச்சை எனும் மருத்துவர்களும் அப்போதில்லை, காசு கொடுத்தால் செய்தியாக்கும் ஊடகக்காரர்களும் அப்போது இல்லை, இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் வெகு சிலர். அவர்களும் வெளியில் அப்படிச் சம்பாதிப்பதை வைத்து அலட்டிக்கொள்ள முடியாத ஒரு சமூக முடக்கத்தில் இருந்தார்கள். இன்று பணமும் அதன் வழி பகட்டுமே கௌரவம் என்றும், நேர்மை பிழைக்கத் தெரியாதவனின் பிதற்றல் என்று ஆகி விட்டது, எல்லா துறைகளிலும். இதற்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு?
1980களில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் துவங்கின, அதே காலகட்டத்தில் தான் வணிகநிறுவனமாக்கப்பட்ட தனியார் ஆடம்பர மருத்துவமனைகளும் தோன்றின. விரைவில் இவை விளம்பரம் என்பதைத் தவறான நெறி என்று கருதிய மருத்துவத்துறையின் அணுகுமுறையை மாற்றின. படித்தால் மட்டுமே மருத்துவக்கல்வி சாத்தியம் எனும் நிலை மாறி பணமிருந்தால் போதும் மதிப்பெண்கள் இல்லாமலேயே டாக்டர் ஆகலாம் எனும் நிலை வந்தது. ஆரம்பத்தில் அப்படிப்பட்ட டாக்டர் பட்டம் வரதட்சிணைக்காகவும், விசிட்டிங் கார்டுக்காகவுமே அவசியம் என்றிருந்தது. அப்படி பட்டம் வாங்கியவர்கள் சிகிச்சை செய்து சம்பாதிக்கும் அவசியம் இல்லாதவர்கள் மட்டுமல்ல, அவர்கள் ‘அல்ப-பரதேசி-பன்னாடைகளை’ எல்லாம் தொட்டுப் பார்த்துப் பேசிப்பழகவும் விருப்பம் இல்லாதவர்கள். காலப்போக்கில் மிட்டா மிராசு போதாது, பரம்பரை சொத்தும் தலைமுறை தாண்டி நிலைக்காது என்றவுடன், வாங்கிய பட்டமும் வைத்திருக்கும் சொத்தும் முதலீடாக வியாபார மருத்துவ மையங்கள் உருவாயின. தான் படிக்காவிட்டாலும் படித்தவர்களைப் பணியில் அமர்த்திக்கொண்டு வியாபாரம் செய்பவர்களும் உருவானார்கள்.
20 வருடங்களில் ஆடம்பரமும் அதை வெளிப்படுத்திய விளம்பரங்களும் இவர்களிடம் செல்வதே ஒரு கௌரவம் என்று ஆனது, இவர்களால் தான் சரியான சிகிச்சை தர முடியும் எனும் மாயையும் மக்களிடம் பரப்பப்பட்டது.
அரசு மருத்துவமனைகள் சரியில்லை எனும் எண்ணம் விதைத்து வளர்க்கப்பட்டது. கழுத்தில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்று பிறகு பெருவெற்றியும் பெற்ற எம்ஜியார் கூட கடைசியில் அங்கே சிகிச்சைக்குப் போகவில்லை, தனியார் வர்த்தக மருத்துவமனைக்கே கொண்டு செல்லப்பட்டார். முன்பு அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தந்த நிபுணர்கள் பணி ஓய்வு பெற்றதும் இதே தனியார் மருத்துவ நிறுவனங்கள் அவர்களை அதிக சம்பளத்திற்கு தங்கள் மருத்துவமனையில் நியமித்துக்கொண்டன. மக்களும் இங்கே போனால் தான் சிறந்த சிகிச்சை என்று நினைக்க ஆரம்பித்தார்கள். சிகிச்சைக்கு பத்து ரூபாய் வாங்குபவனைவிடவும் நூறு ரூபாய் வாங்குபவன் விஷயம் தெரிந்தவன் எனும் மடமை பரவ ஆரம்பித்தது. மெல்ல `குடும்ப டாக்டர்` என்று சுக-துக்கங்கள் அனைத்திலும் அங்கமாய் இருந்த ஒரு சமூகப் பிரஜை ஒதுக்கப்பட, அடுத்த தலைமுறை மருத்துவர்கள் அனைவரும் மனத்தளவில் மாற ஆரம்பித்தார்கள்.
மாற்றம் தவிர்க்கவியலாததுதான், இயல்பாய் அமைந்தால் மட்டுமே நிர்ப்பந்தமாய் திணிக்கப்பட்டால் அல்ல. விளம்பர வியாபாரமாய் மருத்துவம் மாறியது இயல்பாய் அல்ல, வணிக நோக்கம் மட்டுமே கொண்ட சில தந்திர வியாபாரிகளால், அதற்கு இந்தியாவின் அரசியல் நிலைப்பாடும் மெல்ல உலகமயமாகி, வர்த்தகமயமாகி உதவியது. தொலைகாட்சி வீட்டுள் ஆக்ரமித்தது.
இதற்கும் இன்று மருத்துவர்கள் மீது மக்கள் கோபமாய் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? மக்களுக்கு லேசில் கோபம் வராது. ஏமாற்றப்பட்டாலும் அதை விதி எனும் கலாச்சார மூடநம்பிக்கையில் ஒதுக்கி அடுத்த காரியம் பார்ப்பவர்கள் நம் மக்கள். இவர்கள் மருத்துவர்கள் மீது இவ்வளவு கோபம் ஏன் கொண்டார்கள்? எளிதாய் நிறைய `அறிவாளிகள்` சொல்லும் பதில், “மருத்துவர்கள் காசு சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள், மக்கள் மீது அன்பும் கருணையும் அக்கறையும் இல்லாதவர்களாகி விட்டார்கள்” என்பதே. இது கொஞ்சம் உண்மை. (உண்மை கொஞ்சமாய் இருக்காது, முழுதாய் இருக்கும் அல்லது பொய்யாகிவிடும் எனும் தர்க்கம் மீறி பார்ப்போம்). சிலர் அப்படி என்று பலர் சொல்கிறார்கள், பலர் இப்படித்தான் என்று சிலர் சொல்கிறார்கள், எல்லா மருத்துவர்களும் இப்படித்தான் என்று எல்லாரும் சொல்வதில்லை. அந்தச் சில (அவர்களே ஒப்புக்கொள்ளும்) “நல்ல, நேர்மையான, நெறிவழி நடக்கும்” மருத்துவர்களை விடவும், பணமே பிரதானமாக தொழில் செய்யும் சில மருத்துவ வியாபாரிகளை மனத்தில் முன்னிறுத்தியே மக்கள் கொதிக்கிறார்கள். இந்த வியாபாரிகள் முன்னிலை வகிக்க யார் காரணம்? அவர்களிடம் பலர் ஏமாந்தார்கள் எனில் அது யார் தவறு?
ஒரு நோயுற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்குத் தெரியப்போவது (சுயநினைவு இருந்தால்) டாக்டர் நர்ஸ் எல்லாம் தன்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்களா என்பது மட்டுமே. ஆனால் அவருடன் அங்கே தங்கியிருக்கும் உறவினர்க்கும், விசாரித்துப்போக ஆப்பிளும் ஹார்லிக்ஸும் வாங்கி வரும் உற்றாருக்கும் தெரிவது, அந்த மருத்துவமனை அவர்களுக்கு செய்து வைத்திருக்கும் வசதிகள் தான். ”கவர்மெண்ட் ஆஸ்பத்ரியா..சீச்சி டர்ட்டி” என்பதும் இவர்களது முகச்சுளிப்புதான். ஆமாம். அரசு மருத்துவமனைகள் பளிச்சென்று இருப்பதில்லை, அங்கே ‘காண்டீன்’ கூடச் சரியாக இருக்காது..ஏன்? யாரால்? நோயாளி குப்பை போடும் நிலையில் இல்லை, டாக்டர்களும் நர்ஸ்களும் தங்கள் இடத்திலேயே குப்பை போடுவதில்லை, வருபவர்கள் தான் ப்ளாஸ்டிக் பாட்டில்களையும், ஆப்பிள் சுற்றிய பைகளையும், பையில் வைத்திருக்கும் குப்பைகளையும் அங்கே வீசி விட்டுச் செல்கிறார்கள்.
சரி சமூகப் ப்ரக்ஞையுள்ள சம்பாதிக்க முடிந்த அறிவுஜீவிகள் ஏன் இதை ஒரு கடமையாக, பணியாக எடுத்து சுத்தம் செய்ய முன்வரவில்லை? இதை ஒரு சமூகக்கடமை என்று இது வரை எந்த சாமியாரும் சொல்லவில்லை, எந்த செய்தியாளரும் முன்னிறுத்தவில்லை என்பதாலா, அல்லது இப்படி ஒரு வேலை செய்தால் அதற்கு விளம்பரமும் ஊடக கவன ஈர்ப்பும் கிடைக்காது என்பதாலா? இன்று அந்த மருத்துவர் கொலையை வைத்துக் கொண்டு மருத்துவத்துறை மீது சேற்றை பூசும் எத்தனை பேர் அங்கே சென்றிருப்பார்கள். குப்பைகளுக்கப்பால் அங்கே பணியாற்றும் மருத்துவர்களின் சிரமங்களைப் பார்த்திருப்பார்கள்?
இது மட்டுமல்ல,கொலை செய்யப்பட்ட டாக்டர் சிகிச்சை அளிக்கும்போது இறந்த பெண்ணுக்கு என்ன பாதிப்பு என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ‘ரமணா’ படம் மாதிரி என்று உளறுவோரில் எத்தனை பேருக்கு, அப்படிப்பட்ட பாதிப்புக்கு பல பாட்டில்கள் ரத்தம் தேவை என்று தெரியும்? அப்படி தேவைப்படும் பாட்டில்களில் ஒரு பாதியாவது இந்த திடீர் சமூகவிமர்சகர்களில் ரத்த தானம் செய்திருப்பார்கள்? என்னவோ பழிக்குப் பழி கொலைக்குக் கொலை என்பது போல ஒதுக்கும் எத்தனை பேருக்கு அது என்னதான் பாதிப்பு என்று தெரிந்து கொள்ள அக்கறை? அன்று அறுவை சிகிச்சை முயன்றிருக்காவிட்டாலும் அந்தப் பெண் அடுத்த சில மணி நேரங்களில் இறந்திருப்பார் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? எவ்வளவு பேருக்குத் தெரிந்து கொள்ள அக்கறை? பொதுமக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை எனில் எதற்கு இந்த மருத்துவர்கள் மீதான கோபம்? சில ஊடகங்கள் இதை மருத்துவரின் குற்றமாகத் திரித்து செய்தி வெளியிட்டதால்தான்.
அப்படி வெளியான செய்தி குறித்து உண்மை நிலையை விளக்க மருத்துவர்கள் முயலும் போது வந்த எதிர்ப்பு தான் வினோதமானது. ”நீங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றது தப்பு.” என்றார்கள். நடந்தது ஒன்றும் பெரிய போராட்டமோ மக்களை (சிலர் உளறுவது போல) சாகடிக்கும் வகையான வேலை நிறுத்தமோ அல்ல. பேருந்து, ஆட்டோ ஸ்ட்ரைக் என்பதில் பாதிக்கப்பட்ட அளவு கூட பொது மக்கள் இதில் பாதிப்படையவில்லை. அவசர சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் பிரசவங்களும் தடையின்றி நடந்தன. காய்ச்சல் வயிற்றுவலி... என்று வருபவர்கள் அன்றைக்கு அவதிக்குள்ளானார்கள், உயிர் எதுவும் போகவில்லை, உயிருக்குப் போராடும் எவரும் திருப்பி அனுப்பப் படவில்லை. இது திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டாலும் ..என்ன இருந்தாலும் நீங்க ஸ்ட்ரைக் பண்ணக்கூடாது என்றார்கள். ஏன்? அநீதி அநியாயம் தமக்கு நடக்கிறது என்று நினைப்பவர் அதைக் கண்டித்து அடையாள அளவில் கூட எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாதா? “உயிர் காப்பவர் நீங்கள்...நீங்கள் பணி நிறுத்தம் செய்யக்கூடாது” என்பவர்களும், ஓர் உயிர் அநியாயமாய் பறிக்கப்பட்டதற்கு எவ்வித வருத்தமும் கண்டனமும் தெரிவிக்காமல் மருத்துவர்கள் இப்போதெல்லாம் சரியில்லை என்றே முழங்கியது ஏன்?
கோபப்பட்ட மக்களும் யார்? மருத்துவர் வேலை நிறுத்தம் நடைபெற முயன்ற அன்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்னிடம், “பாவங்க அந்தம்மா ஆபரேஷன் பண்ணுச்சாம்… பொம்பள செத்துடுச்சாம்... அதுக்கு டாக்டரை வெட்டிட்டானாம்” என்று வருத்தப்பட்டார். நான் டாக்டர் என்பதால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் இணையத்தில்.... மெத்தப் படித்தவர்கள் எப்படி எழுதினார்கள்?
புரிகிறது. இப்படிக் கோபப்பட்ட அனைவரும் ஆடம்பர வர்த்தக மருத்துவ மனைகளில் பணத்தையும் இழந்து பலனும் காணாதவர்கள். இது அவர்களின் நியாயமான கோபம் எனில், எது நியாயம்?
சுமார் பத்தாண்டுகளாக பணப் புழக்கம் அதிகரித்ததாம்...
அண்ணாச்சி கடையில் அக்கவுண்டு வைத்து அடுத்த மாதம், பத்து நாள்ல தந்துடறேன் என்று மேலும் பொருள் வாங்கியவர்கள் பணம் சேர்ந்ததும் எங்கே போனார்கள்? பளபளக்கும் அங்காடிகளுக்கு, அண்ணாச்சி கடை க்ஷீணித்தது.. “இட்ஸ் ஈசி ஹியர்டா” என்று கடனட்டை தேய்த்து வாங்கியவர்களால் அண்ணாச்சி கடைகள் மட்டுமல்ல அக்கறையோடு சமூகத்தில் அங்கமான பல்வேறு துறையினரும்... மெகானிக் முதல் மருத்துவன் வரை... ஒதுக்கப்பட்டார்கள். அந்நியமான ஒருவனிடம் சம்பளம் வாங்குவதாலோ என்னவோ அருகாமையில் உள்ளவர்களைக் கூட அந்நியமாக்கிக் கொண்டார்கள். அப்புறம்... டீக்கடையில் வாட் ஷிட் என்று கோபித்துவிட்டு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் ஆறிய காஃபியை குடித்து நடித்தார்கள். காஃபி ஆறினாலும், கொடுத்த காசுக்கு வைத்தியம் நடக்காவிட்டாலும், ஆடம்பரமான வியாபாரிகளிடம் இவர்கள் கோபித்ததே இல்லை. இவர்களுக்குத்தான் இப்போது “டார்மீக ஆங்கர்”
மருத்துவத்துறை மட்டும் ரொம்ப யோக்கியம் என்று சொல்லவில்லை. கமிஷன் வாங்க பரிசோதனை செய்வது, தேவையில்லாமல் மருந்து எழுதி அதையும் தன் சொந்தக் கடையிலேயே விற்பது, நடந்து வருபவனை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மூன்று நாளாவது படுக்க வைத்து பணம் சம்பாதிப்பது, என்று தம்மைத் தாமே கொச்சைப்படுத்திக்கொண்டனர் சிலர். படிப்புக்கு மட்டுமல்லாமல் ‘பாஸ்’ ஆவதற்கும் பணம் போதும் எனும் திமிரில் சிலர். இவர்கள் சம்பாதித்தார்கள், பணத்தை மட்டுமல்ல, மக்களின் வெறுப்பையும்.
இன்று காந்தீய வழியில் மெழுகுவத்தி கொளுத்தும் பகுதி நேரப் புரட்சியாளர்களெல்லாம் திமிருடன் பேசும் அளவு மருத்துவத்துறை தாழ்ந்து விட்டது என்றால்... மருத்துவர்களும் காரணம். தம்மிடையே ஒற்றுமை இல்லாத கூட்டம் இது தான். இதனால் தான் “ஸ்ட்ரைக்” எனும் சுண்ணாம்பெல்லாம் மருத்துவர்களால் வேகவைக்க முடியவில்லை. அப்படி ஒப்புக்கு பண்ணிய வெத்து போராட்டத்தினால் தான் வெட்டிகளெல்லாம் எகிறி குதிக்கும் நிலை. ஹ்ம்ம்ம்..இனி?
நாளையே நாடு திருந்தும் எனும் ஹஸாரேத்தனம் என்னிடம் இல்லாததால்… வெதும்பி, விம்மி என் பராசக்தியிடம் கேட்கிறேன். என் மக்களுக்கு புத்தி கொடு, அல்லது அவர்களது கீழ்மையையாவது என் கண்களில் படாது மறைத்திடு!
நன்றி : டாக்டர் ருத்ரன்
ப்ரியமுடன்
நல்லூர் உஸ்மான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக