சனி, 13 அக்டோபர், 2012

இறையருள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது

வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள்.
வெயிலும் கடுங்கோடையும் வந்தால் பின்னாலேயே மழையும் குளிருமாக ஒரு பருவம் வரக் காத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் வேதனையையும், உள்ள வேதனைகளையும் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நம்முடைய உடல் உள்ள அமைப்புகள் ஏற்றுக்கொள்ளும் சக்தி உடையதாக இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை.
வாழ்க்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களுடன் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.
இறைவனை உங்கள் தோழனாகக் கருதுங்கள். அவனுடைய சோதனைகளை விளையாட்டாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும் மனப்பக்குவமும் கிடைக்க இதுவே சிறந்த வழி.

உங்கள் அந்தராத்மாவை கண்டுபிடிப்பது அவசியம். அதன்மூலம் இவ்வுலகில் தெய்வீக வாழ்க்கையை நிலைநாட்டமுடியும். சுகபோகம், திருப்தி, சிற்றின்பம் இவற்றை விலக்குங்கள். கொளுந்துவிட்டு எரியும் நெருப்பாக இருங்கள். ஏற்படுகிற யாவும் நமது முன்னேற்றத்திற்கு உதவுவதற்காகவே என்று எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கட்டும்.

மனக்கிளர்ச்சி, பரபரப்பு, கலகம் இவற்றை தவிர்த்துவிடுங்கள். எல்லா சூழ்நிலைகளிலும் பூரண அமைதியுடன் இருங்கள். அடுத்தவர்களிடம் காணப்படும் குறைகளை மாற்றக்கூடிய சக்தி உங்களிடம் இருந்தாலன்றி யாரையும் குறை சொல்லாதீர்கள்.

நீங்கள் முன்வைத்திருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்ணும் உணவு மகத்தான காரியங்களை செய்வதற்கு தேவையான சக்தியை உங்களுக்கு அளிப்பதாக இருக்க வேண்டும்.
சொற்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மிக இன்றியமையாதவைகளை மட்டுமே பேசவேண்டும். உள்ள உறுதி உங்கள் ஜீவனின் இயக்கங்களை முற்றிலும் ஆட்கொள்ளட்டும்.

நீங்கள் என்றென்றும் இருந்திருக்கிறீர்கள். என்றென்றும் இருப்பீர்கள். வெளி உருவங்கள் அழியும். அவ்வுருவங்கள் உங்கள் உண்மையான ஜீவனுக்கு வெறும் உடைகள் போன்றவையே. உங்கள் வாழ்விற்கு நீங்களே தலைவர். உறுதியுடனும், பெருமிதத்துடனும் உங்கள் பாதையில் நடைபோடுங்கள்.

அகந்தையை விடுங்கள். பாரத அன்னையின் தகுதிவாய்ந்த குழந்தையாக இருங்கள். இறைவனின் அருளில் அசையாத நம்பிக்கை வையுங்கள். எப்போதும்
மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் உடையவராக இருங்கள்.
பக்தி ஒருபோதும் நம்மைக் கைவிடுவதுஇல்லை. இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைக்கும் போது தான் மனம் வலிமை பெறுகிறது.
துன்பம் நேருமானால் இறைவன் அளித்த வரமாகக் கருது. அது அப்படியே வரமாக மாறிவிடும்.
இறையருள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நேர்மையுடன் இருக்கும்போதே நம்மால் அதை உணர முடியும்.
கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனையும் செய்யாதே. நிகழ்காலம் ஒன்றே முக்கியமானது.
விழிப்புடன் இருந்தால் காலம் சிறிதும் விரயமாவதுஇல்லை. ஆண்டுக்கணக்காகச் செய்யும் பணியைக் கூட மாதக்கணக்கில் செய்து விட முடியும். விழிப்புடன் இருப்பவன் குறிக்கோளை நோக்கி விரைவாக முன்னேறுகிறான்.
இறைபக்தியும், நம்பிக்கையும் மட்டும் தான் உனக்குக் கிடைக்கும் உண்மையான உதவி. அது தான் உண்மையான மகிழ்ச்சியும் கூட.

Thanks
Nallur osman



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக