திங்கள், 5 ஆகஸ்ட், 2013

அகரம் தமிழுக்கு சிகரம்..!

அகரம் தமிழுக்கு சிகரம்..! 

திசைகளெங்கும் துலங்கும் நட்சத்திரங்களை வாரியெடுத்து செய்த பூமாலையொன்றை,நீங்கள் எதிர்பாராத நேரத்தில்,உங்கள் கழுத்தில் விழச் செய்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்..?

அழைப்பு மணியோசை கேட்டு திறந்த கதவின் முன்,களங்கமில்லாத முழுநிலவை கைக்கு அடக்கமாய் யாரேனும் தந்தால்,அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்..?

அப்படித்தான்.., எனக்கொரு புத்தகம் கிடைத்தது.

நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது.! ஆனால்,அந்தப் புத்தகத்தை கொண்டுவந்த கூரியர் சேவையின் பணியாளரை,அவர் திகைத்து,திணறித் தடுமாறி விழிக்க, விழிக்க..எதையும் பொருட்படுத்தாமல் நான் கட்டிக் கொண்டேன்.

புத்தகத்தில் என்ன இருக்கும்..? என்றே தெரியாத நிலையிலும்,முன்னதாகவே இவ்வளவு மகிழ்ச்சி உனக்கு தேவையா..?” என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்..அதில் உங்களைப் பொறுத்தவரை நான் குற்றம் காணவும் மாட்டேன்.

வெகுநாட்களாகத் திட்டமிட்டு.., திட்டமிட்டு.., முடிவில் அந்த முயற்சி வெற்றி பெற்றதற்காகவே நான் முதலில் பெரிதும் மகிழ்ந்தேன்.
அந்தப்புத்தகத்தின் பெயர் “மீண்டும் அகரம்.!”

அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் என்ன இருக்கவேண்டும்.?அது எப்படி இருக்க வேண்டும்.? இதுவரை வெளிவந்த ஜனரஞ்சகமான புத்தகங்கள் எல்லாவற்றிலுமிருந்து எப்படி மாறுபட வேண்டும்..? என பகிர்ந்து கொள்ளப்பட்டவை அனைத்தும் பூரணத்துவம் பெற்றிருந்தது.

சுருக்கமாகச் சொல்வதென்றால்,ஒரு வாசகனை,வாசிப்பு தளத்திற்கு நெருக்கமாக இட்டுச் செல்வது மட்டுமே,ஒரு இதழின் கடமையாக முடிந்துவிடக்கூடாது. அவனையும் ஒரு படைப்பாளியாக மாற்றுவதில்,அதன் மூலம் அவனையும் ஒரு சமூகப் போராளியாக மாற்றுவதில்தான் அந்த இதழின் வெற்றி அடங்கியுள்ளது.

படைப்பாளி என்பவன் கவிதை,கதை,நாவல், என எழுத்துத்துறை சார்ந்து மட்டுமல்ல,இதனை வாசிப்பவன் ஒரு நாடகத்திற்கான கருவைத் திரட்ட வேண்டும், ஒரு குறும்படம் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்,வரலாறுகள் குறித்து மீள்பார்வை கொள்ளவேண்டும். சமூக மாற்றங்கள்,நிகழ்கால அரசியல் பொருளாதார நிலைகள்,அவை கலை,இலக்கியத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்த தெளிவுகள், வரையறைகள் குறித்தும்,சாமானிய மனிதனும் சாதனையாளர்களாக மாறிய விடாமுயற்சிகளைக் குறித்தும்,அந்த வெற்றிகளை சாத்தியமாக்கிய உழைப்பின் மகத்துவத்தைப் புரிந்து,தெரிந்து கொள்ளவேண்டும்..,

மொத்தத்தில்,வாசிப்பவனுக்கு,அதுவரை இருந்த “தன் நிலையை”,ஒருபடியேனும் “முன்னிலைக்கு” எடுத்துச் செல்வதில்,பெரும்பங்காற்றிட இந்த இதழ் வழிகாட்ட வேண்டும்..,என்றே “மீண்டும் அகரம்” இதழ் தொடங்கும் ஆரம்பகால முயற்சிகளின் போதே திட்டமிடப்பட்டு விட்டது.அதன்படி, அதனை சாத்தியமாக்கும் முயற்சியில்,பேராசிரியர் க.பஞ்சாங்கம்,முனைவர்கள்.பா.ரவிக்குமார்,
வெங்கடசுப்பு நாயகர், புதுவை சீனுதமிழ்மணி, திரு.அரியநாச்சி ஆகியோரை முன்னிலைப் படுத்தி திரு.அமிர்த கணேசன் எனும் நமது தோழர்.அகன் நிறுவனராய் இருந்து “மீண்டும் அகரம்” இதழை வெற்றிகரமாக வெளிக் கொண்டுவந்துள்ளனர்.

சமூக முன்னேற்றத்திற்காக,எழுத்தின் வாயிலாக ஆற்றிடும் பணிகளை முன்னிறுத்தி,தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் தாண்டி,இந்த சமூகத்தை முன்னேற்றும் விதமாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட படைப்பாளிகளை,தொடர்ந்து அர்ப்பணித்துக் கொள்ளத்துடிக்கும் படைப்பாளிகளை “மீண்டும் அகரம் இதழ்” நமக்கு அடையாளப்படுத்துகிறது.
அவ்வாறே அமைந்திருக்கும் இந்த முதல் இதழில்,உலக அளவில் வெளியான கவிதை தொகுப்புகளில்,இடம்பெற்ற கவிதைகளை எழுதிய கவிஞர் மீனாட்சியின் நேர்காணல்..,மரபின் ஆதிக்கம் பாறையாய் அழுத்தும் இந்த சமூகத்தில்,ஒரு பெண்ணாய் பிறந்துவிட்டதால், எதிர்கொண்ட நெருக்கடிகளை தீவிர மனோபாவம் கொண்டவராய் எதிர்த்து போராடி,வெற்றி பெற்ற அனுபவங்களுடன் விரிந்திருக்கிறது.

உணவு குறித்த கலாச்சாரப் பார்வையைப் பற்றி அலசும்,“ழாக் தெரிதா”வுடனான உரையாடல்களாக ஒரு மொழிபெயர்ப்பு நேர்காணலும்,

மகாபாரதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களில்,தனக்குப் பிடித்த கதாபாத்திரமாக ஒரு கீரிப்பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும்,அதன் முக்கியத்துவத்தை சுவாரஸ்யமான தகவல்களுடன் விளக்கிச் செல்லும் “கதைசொல்லி” அய்யா முதுபெரும் எழுத்தாளர் கி.ரா.வின் ஒருநேர்காணலும், வாசிப்பவருக்கு புது அனுபவங்கள்.!

மேலும்,அடர்த்தியான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகளின் வாசகர்களுக்காக பஞ்சபாண்டவர் ரதங்கள் குறித்த மேலதிகத் தகவல்களை விளக்கும் முனைவர் சா.பாலுசாமி,
பிரெஞ்சு இலக்கியத்தின் வளர்ச்சி குறித்து நீதியரசர் தாவீதுஅன்னுசாமி,
மொழியாக்கமும்,மொழிக் கொலையும் என்ற தலைப்பில் ராஜ்ஜா,
“பிரெஞ்சுப் புதினங்கள் இன்று”-நாகரத்தினம் கிருஷ்ணா,
இலங்கையில் அழிந்துவரும் அடையாளங்கள்-பதுளை கலைஞானக்குமார்,-சாட்சாத் நம்ம கலையேதான்- ஆகியோரின் கட்டுரைகள் அமைந்துள்ளன.

சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களும், கவிதைகளில் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றி பெற்றவர்களுமான மூத்த கவிஞர்கள் மா.லெ.தங்கப்பா, ஈரோடு தமிழன்பன், மற்றும் பா.ரவிக்குமார்,தி.அமிர்தகணேசன்-தோழர்.அகன்-மனுஷி,ஏ.சக்திகுமார் ஆகியோரின் கவிதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும்,பிறமொழிகளில் வெளிவந்த மிகச்சிறப்பான கதைகள்,கவிதைகளும்,அழகான தமிழ் மொழி பெயர்ப்புகளோடு இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.

மொத்தத்தில்,இதுவரை வாசித்த எத்தனையோ இதழ்களில் கண்ட மனநிறைவைக் காட்டிலும், ”மீண்டும் அகரம் இதழ்” நம்மை புதிய, நிறைவான அனுபவத்திற்கு உள்ளாக்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனை அனுபவித்து வாசிப்பவர்கள்,வாசித்து முடித்தவுடன்,தங்கள் மனதில் மேலோங்கும் உணர்வுகளை,நிச்சயமாக படைப்பின் ஏதோவொரு தளத்தில் பதிவுசெய்வர் என்பதே எனது அனுபவமாக இருந்தது.இது வாசிக்கும் அனைவருக்கும் வாய்க்கும் என்பதிலும் சந்தேகமில்லை.!

ஒரு அருமையான துவக்கமாக,இத்தனை சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு துலங்கும் இந்த இதழ் விரைவில்,”காலாண்டிதழ்” என்பதிலிருந்து வார இதழாக மாறிவிடவேண்டும் என்பதே எனது விருப்பமாகவும் இருக்கிறது.
----------------------------
-தகவலுக்காக -“மீண்டும் அகரம்”-இதழ் வேண்டுவோர் மீண்டும் அகரம், எண்.9.நான்காம் தளம்,பொன் அன்பாலயா அடுக்ககம், கொட்டுப்பாளையம்,இலாசுப்பேட்டை,
புதுச்சேரி-605008 என்ற முகவரியில் -அல்லது
94433 06007 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக