புதன், 4 ஜூன், 2014

வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

வெற்றிகள் எம்மை எதிர்பார்த்த கணங்களிலும், எதிர்பாராத கணங்களிலும் நெருங்கி சினேகம் கொள்வதுண்டு. இந்த இரு நிலையிலும் நாம் உணர்ந்து கொள்ளும், வெளிப்படுத்தும் உணர்வு பொதுவாகவே ஒன்றானது தான் என எண்ணத் தோன்றுகிறது.
ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வை நேற்றிரவு நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, விருதுகளை வெற்றி கொண்டு அதைப் பெற்றுக் கொண்ட பின் திரைப்பட பிரபல்யங்கள் ஆற்றிய உரையும், அவர்களின் உணர்ச்சியும் இருக்கிறதே, அது அவர்களின் தொழிலையும், நடிப்பையும் தாண்டியவொன்று.
“ஆஸ்கார் கிடைத்தவுடன், மேடையில் மயக்கம் போட்டு யாராவது விழுந்திருக்கிறார்களா? முதலாவதாக விழுவது நானாகவோ இருக்கலாம்” என்று நடுங்கிய குரலுடனும், உடலுடனும் தோன்றிய Penelope Cruz ஐ கண்டவுடன், என் கண்களில் கண்ணீர் ஆறு உருவாக்கம் பெற முனைவதை உணர்ந்தேன்.
அந்த மேடையை நோக்கி பார்த்திருந்தவர்களின் கண்களும் கலங்கிவிடுவதை தொலைக்காட்சியின் திரை காட்டிக் கொண்டிருந்தது. வெற்றி பெறலாமென்று தெரிந்தவர்களே, வெற்றி பெறும் கணத்தில் உணர்வுகளின் மூலம் பிரமிக்கச் செய்வது மிக உன்னதமான கட்டங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாதவைகள்.
ஆறாவது தடைவையாக ஆஸ்கார் விருதுகளுக்காக பிரேரிக்கப்பட்ட நாம் யாவரும் அறிந்த டைட்டானிக் நாயகி, Kate Winslet தனது வெற்றியைக் கேள்விப்பட்டதும் கொண்ட உணர்வுப் பகிர்வுள்ளதே மெய் சிலிர்க்கச் செய்தது.
தனது எட்டு வயதில் குளியலறைக் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு Shampoo போத்தலொன்றை கையில் வைத்துக் கொண்டு, ஆஸ்கார் விருதினைப் பெறுவதாய் கற்பனை செய்து ஒத்திகை பார்த்துக் கொண்ட நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது, வாழ்க்கையில் பல விடயங்களை அடைவதற்காக நாம் எமது மனதினுள்ளும், யாரும் காணாத இடங்களிலும் ஒத்திகை பார்த்துக் கொள்ளும் ஆனந்த உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் கண் முன் கொண்டுவந்தார்.
Winslet பேசிய பேச்சிலிருந்த சொற்களை விட, ஒலிவாங்கி மூலம் வெளிப்பட்ட அவர் மூச்சுகளே அதிகம் என்பேன். தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், சொல்லுக்கு சொல் இரு தடைவை மூச்சு வாங்கிக் கொண்டு பேசிய போது, உணர்வுகளிடம் நடிக்க முடியாமல் தோற்றுப்போன, ஆஸ்கார் விருது பெற்ற அழகிய நடிகையைக் கண்டு வியந்தேன். உணர்வுகள் ஆழமானது, சுவாசிக்கப்பட வேண்டியது.
oscar_rahman
நம்மவர், என் இசை நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் மேடையில் தோன்றி Hollywood Kodak theatre இல் “எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்று தமிழில் உச்சரித்த போது, என்னை நானே தொட்டுக் கொண்டு அது உண்மையாகவே நடக்கின்றதென உறுதி செய்து கொண்டேன்.

ரஹ்மான் சொன்ன இந்த, “All my life I had a choice of hate and love. I chose love and I’m here.” என்பது வாழ்க்கையில் நாம் செய்கின்ற தெரிவுகள் தான் எமது கனவுகளைக் கூட தீர்மானித்து நனவாக்க வழி சமைக்கிறதென புரிந்து கொள்ள முடிந்தது.
நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வும் எனக்கு வெறுமனே திரைப்பட ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வாகத் தோன்றவில்லை. அது வாழ்க்கையின் பாடங்களைச் சொல்லும் உணர்வுகளின் பாசறையாகவே எனக்குத் தோன்றியது.
வாழ்க்கையை புரிந்து கொள்ள இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்த திருப்தி என் மனதில் ஏற்பட்டது. உணர்வுகள் யாவும் எப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவை அவ்வாறே உணரப்படவும் வேண்டும்.
நன்றி 

- உதய தாரகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக