வெள்ளி, 6 ஜூன், 2014

பிரபஞ்சமே நீதான்

எதிர்காலம் என்பது ஒரு எண்ணக்கரு மாத்திரம். அது எங்கும் இல்லை. அப்படி எதுவும் இல்லை. யாரும் எதிர்காலத்தைக் கண்டதாய் வரலாறும் இல்லை.
இல்லாத ஒன்று பற்றியதான உன் ஆயத்தங்கள் பலவேளைகளில் புதிரையும் இன்னும் சில வேளைகளில், கேள்விகளையும் தோற்றுவிக்கிறது.
நாளை என்பது நம் கையில் இல்லை என்பது நாமறிந்த உண்மைதான். நாளை என்பது இல்லை என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோமா?
this-is-now
இன்று என்பது மட்டுந்தான் உண்மையானது. நாளை என்பது கூட, இன்று ஆன போதுதான், அது உண்மையாகிறது. ஆக, நாளையும் இன்றாகுகையில் தான் உயிர்ப்புக் கொள்கிறது.
இந்தப் பொழுதுதான் மிக உண்மையானது. இதுதான் தருணம். என்ன செய்யப் போகிறாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
உன் எண்ணத்தில் நாளை என்பது ஒன்றில்லை என்பதை உணர்ந்தாலும், இன்று என்பது மட்டுந்தான், குறிப்பாக இந்தப் பொழுதுதான் உண்மையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நேற்று என்பதும் இனி வராது என்பதை நீ அறிந்தாலும், நாளை என்பதும் இனி வராது என்பதையும் நீ புரிய வேண்டும். இன்று மட்டுந்தான் இருக்கும் என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும், தொடர்ச்சியாக நீ நாளைக்கான ஆயத்தங்களைச் செய்யப் போய், இன்றைய இனிமையைத் தொலைத்து விடுகிறாய். இந்தக் கணம் தான் உண்மை என்பது பற்றிய புரிதலை, நாளை என்கின்ற மாயை, ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருக்கிறது.
நேரம் என்பது இப்போது தான். இது தான் நேரம்.
சிதறிக் கிடக்கும் உன் கூறுகளை, ஒருமிக்கச் சேர்த்துக் கொண்டு, உன்னை நீ ஒன்றாகக் காண்கின்ற நிலை தோன்றும் போதுதான், உனக்கு முகவரி கிடைக்கிறது. அந்த நிலை, இந்தக் கணத்தில் தான் சாத்தியம். இதுதான் அதற்கான நேரம்.
நீ என்பது பிரிதொரு விடயமன்று. பிரபஞ்சமே நீதான். உன்னை, பிரபஞ்சத்தோடு ஒருமித்துக் கொள்ள வேண்டும். அதற்கும் இதுதான் நேரம்.
இந்தக் கணம் தான் உண்மை. இந்தக் கணம் பற்றிய புரிதல் இல்லாவிட்டால், எங்கேயும் போக முடியாது.
“NOW-HERE or NO-WHERE — தெரிவு உன் கையில் தான்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.
நன்றி:
- உதய தாரகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக