வெள்ளி, 21 மார்ச், 2014

யுத்தங்கள் உனக்காக காத்துக்கொண்டிருக்கின்றன





வெடிக்காத எரிமலையெல்லாம்
சரித்திரங்கள் ஆவதில்லை
துடிக்காத வீரனெல்லாம்
சகாப்தங்கள் ஆவதில்லை

படுக்கைக்கு கீழே
உன் இலட்சியங்களை
புதைத்துவிட்டு
சீற மறந்த நாகமாய்
சிரித்துக்கொண்டிக்கிற
என் இளவலே எழுந்திரு!

பாயைச் சுருட்டிப் போடு
பயத்தையும்தான்

தாலாட்டு கேட்டுக் கேட்டு
தூங்கியதெல்லாம் போதும்
பூபாளம் பாடு

காதலிக்கு கடிதம்
எழுதி எழுதியே
களைத்துப் போனவனே
இங்கே
யுத்தங்கள் உனக்காக 
காத்துக்கொண்டிருக்கின்றன

ஒருத்திக்காக 
உன் வாழ்வை
தொலைத்துவிடாதே

ஒருகோடி பெண்கள்
உனக்காக 
காத்துக்கொண்டிருக்கிறார்கள்

நீ வீட்டுக்குருவி அல்ல
தேசக்கழுகு

தங்கைகளும் தாய்களும்
தவித்துக்கொண்டிருக்கையில்
காம நாடகம்
உனக்கெதற்கு

உன் 
அகக்கண் திற
ஆயிரம் காட்சிகள் தரிசிப்பாய்

சாப்பிட்டுவிட்டு
செரிக்கப் போராடும் 
ஒரு கூட்டம்

சாப்பிட சோறுகேட்டு
போராடும்
மறுகூட்டம்

வேலை கேட்கும்
ஒரு கூட்டம்
மானம் கேட்கும்
மறு கூட்டம்

உன்னை விட்டால் யாருண்டு
ஏழ்மைப் பசிதீர்க்க
உன்னைத்தான் தேடுகிறான்
உலக ஏழை

புதிய புரட்சிப் போராட்டம்
இங்க தவம் செய்துகொண்டிருக்கிறது
உனக்காக

சிறு கூண்டுக்குள்
ஒடுங்கியவனே
உன் சிறகுகளில் உள்ளது
சூரியக் குஞ்சுகள் என்பதை
நீ அறியமாட்டாய்

பறக்கவிடு 
அனைத்தையும்
பிரபஞ்சம் அதிரட்டும்

கடைசியாக...
நீ அழைக்கப்படுகிறாய்
வரலாற்றில் இடம்பெற அல்ல
புது வரலாறு எழுத...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக