..............ருத்ரா...........
அணு உலை வேண்டாம் என்று
ஆரவாரம் செய்வோரே!
ஆட்டு மந்தைகள் கூட
செவி அசைக்கும்
அங்கு ஏதோ நடக்குதென்று!
கொம்பை ஆட்டி ஆட்டி
கேள்விகள் கேட்கும்!
புதிய அறிவின் தீனி தேடும்
தீயின் தெறிப்பு அதன்
கண்களில் தெரியும்.
உங்கள் நுண் மாண் நுழைபுலம்
எங்கே போனது?
மண் மாண் புனைந்த
பாவைகளா நீங்கள்?
அரக்கர்கள் அமைத்த
அரக்கு மாளிகையா
அணு உலைக்கூடம்?
அணுவை பிளக்கும்
அழகிய கற்பனை
அவ்வை பிராட்டி
அன்றே சொன்னார்!
"அணுவைத்துளைத்தேழ் கடலை புகட்டி
குறுக தரித்த குறள்" என்று
வள்ளுவனுக்கு புகழ்
மாலை சூட்டினாள்.
விஞ்ஞானம் கையில் இருக்க இந்த
அஞ்ஞானக்கூச்சல்கள்
எதற்கு இங்கே?
எரிகற்கள் அதோ
பூமியை நோக்கி
வருகின்றனவே.
அய்யோ!
என்ன செய்வது
குப்புறப்படுத்து
குய்யோ முறையோ
என்று
ஓலங்கள் இட்டால்
ஓடிடுமா "பேரிடர்".
விஞ்ஞானிகளோ
அணு ஆற்றல் கொண்ட
ஏவுகணை கொண்டு
அவ்விண்கற்களை
பொடி பொடியாக்க
திட்டம் போடுகின்றார்.
துல்லியமாய் கணக்குகள் இட்டு
சுனாமிகளின்
சுழல்பந்து வீச்சுகளையும்
"பேட்" செய்யும்
அணுவின் நுண்விசை
ஆயிரம் உண்டு.
சி இ ஆர் என் எனும்
அணு விசைக்கூடத்தில்
ஒளியின் வேகத்தையும்
விஞ்சிய வேகம் ஒன்று
இருக்கும் பிரம்ம ரகசியத்தை
உடைத்துப்பார்த்தனர்.
பிரபஞ்சத்தை துளைப்போடும்
பிரம்மாண்ட முயற்சி இது.
ரேடியக்கசிவு ஆபத்துகளை
தடுக்கும் காவல் அரண்களும்
நம் கையில்
உண்டு. உண்டு.உண்டு
பத்திரமாய் உண்டு.
தினம் தினம்
நம் மீது துப்புகிறானே
கொடு வெப்பத்தை
சூரியன்
அது கோடி கோடி
கூடங்குளங்கள் அல்லவா?
ஒரு குட்டி சூரியனை
நம் தோட்டத்து தொட்டியில்
நம் ஆற்றல் வளம்பெற
நம் ஆக்கம் நலம் பெற
நட்டு வைத்துள்ளோம்
கூடங்குளத்தில்.
தெனாலிராமன் வளர்த்த பூனையாக
நம் ஆற்றல் ஊற்று எனும்
பாலை குடிக்க அஞ்சும்
"பரமார்த்த சீடர்களே"
உங்கள் குருக்கள்
மக்கிப்போன சகாப்தங்களுக்கு
உங்களை
இழுத்துக்கொண்டு ஓடும்
பாமரத்தனத்துக்கு வீசும்
சாமரங்கள் போதும் இனி.
நீங்கள்
சாய்ந்த மரங்களும்
இடிந்த கரைகளும் அல்ல இனி.
சோம்பல் முறித்தது போதும்.
சோதனைகளை சாதனைகள் ஆக்கும்
அறிவியல் அருகில் இருக்க
அழிவியல் போதிக்கும்
அறியாமைச் சுழியில் அகப்படாமல்
ஆவேசத்தோடு
எழுந்து வாருங்கள்.
விஞ்ஞானிகள் எழுப்பிய
மலைப்பிரசங்கம் இது.
உங்களுக்கான ஜீவ அப்பம்
இன்னும் வளமாய்
செழித்துக் கொழிக்க வந்த
கூடமே இது.
கூடா நட்புகளில்
கூடாத கனவுகளில்
புதையுண்டு போய்விடாதீர்கள்.
இருபத்திஒன்றாம் நூற்றாண்டின்
ரத்த ஓட்டமே மின்சாரம் தான்.
இருளில் "பிணம் தழீயற்று"
என்று வள்ளுவர் சொன்னார்.
அது போல்
விஞ்ஞானத்தை வீசி எறிந்து விட்ட
அறியாமையில்
பொருளாதார வளர்ச்சி என்பது
இருட்டை பிசைந்து தின்ன
முயல்வதற்கு சமம்.
அடுப்பாங்கரைகளில்
பூனைகள் தூங்கியது போதும்...இனி
அணு உலைகளே..நம்
அடுப்பு உலைகள்.
=================================================ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக