வியாழன், 15 மே, 2014

மாயா இன மக்களும் உலக அழிவும்-12



இந்த 'ஹபிள்' மூலம் பலப் பல வானியல் உண்மைகளை நாம் கண்டறிந்தோம். அப்படிக் கண்டு பிடித்த விசயங்களில் சிலவற்றை,  மாயனுடன் சரி பார்த்ததில்தான், ஆராய்ச்சியாளர்களை வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கே இவர்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுமோ என்ற பயமும் கூடவே தொற்றிக் கொண்டது. 
 நாங்கள் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி (Fan) போன்ற அமைப்பில் இருக்கிறது.  அத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் (Wings) உண்டு. அந்த சிறகுகளில் ஒன்றின் நடுவே எமது சூரியக் குடும்பம் இருக்கிறது. 

பால்வெளி மண்டலம் கோடிக் கணக்கான நட்சத்திரங்களைத் தன்னுள் உள்ளடக்கி வெண்மையாக, ஒரு பாய் போல, தட்டையாகக்  கிடையாகப் பரவியிருக்கிறது. 
 
எங்கள் சூரியன், தனது கோள்களுடன், இந்தப் பால்வெளி மண்டலத்தில் ஒரு வட்டப் பாதையில் அசைந்து கொண்டு இருக்கிறது. அந்த அசைவு பால்வெளி மண்டலத்திற்கு செங்குத்தான திசையில் அமைந்திருக்கிறது. தயவு செய்து நான் இப்போ சொல்லி வருவதை மிக நிதானமாகக் கவனியுங்கள். இது கொஞ்சம் வானியல் கலந்ததாக இருப்பதால், விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். இது விளங்காத பட்சத்தில், யாரிடமாவது கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். . 
ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச் சுற்றுகிறது. எங்கள் பால் வெளி மண்டலமும் அப்படித்தான் சுற்றுகிறது. ஆனால் எங்கள் சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே, மேசையில் இருக்கும் மின்விசிறி (Table fan) போல, பால்வெளி மண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது. என்னால் முடிந்த அளவுக்கு இதை படமாக வரைந்திருக்கிறேன். புரிகிறதா எனப் பாருங்கள். 


 
எங்கள் பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள். 
 
எங்கள் சூரியன் தனது வட்டப் பாதையில் செங்குத்தாக சுற்றும் போது, பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் ஒரு குறித்த காலத்தின் பின்னர் சந்திக்கிறது. இனி நான் சொல்லப் போவதுதான் மிக முக்கியமான ஒன்று.  எங்கள் சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம் என்ன தெரியுமா……..? 26,000 வருடங்கள். 
 அதாவது சூரியன், பால் வெளி மண்டலத்தில் தனது நகர்வின் போது, இருந்த இடத்திற்கு, ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் வருவதற்கு 26,000 வருடங்கள் எடுக்கிறது. 26,000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படிச் சுற்றி, மத்திய ரேகையைச் சந்திக்கிறது. இம்முறை அந்த அச்சை நமது சூரியன் எப்போது சந்திக்கப் போகிறது தெரியுமா...? 2012ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் திகதி. 
 
அதாவது மாயன்களின் நாட்களிகளின் மொத்தச் சுற்றுகளுக்கு எடுக்கும் 26000 வருடங்களும், பால்வெளி மண்டலத்தின் அச்சை அடையும் காலமான 21.12.2012 என்பதும் அச்சு அசலாக எப்படிப் பொருந்துகிறது? 
இத்துடன் ஆச்சரியம் தீர்ந்து விடவில்லை. இன்னும் ஒரு ஆச்சரியமும் இதில் உண்டு. 
 சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) போன்ற இடம் இருக்கிறதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் ஈர்ப்பு விசையினால் சூரியக் குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு அல்லது ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படும் ஆபத்து உண்டு என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 
 


ஏதாவது ஒரு காலத்தில் இப்படிச் சூரியன் மத்திய ரேகையைத் தொடும் போது, கருப்புப் பள்ளத்தின்  ஈர்ப்பு விசை அதை இழுக்கலாம்.  ஒரு முறை நடக்காவிட்டாலும்,  ஏதாவது 26,000 வருசங்களுக்கு ஒரு முறை அப்படி நடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு கொண்டனர். இப்படி ஒரு அறிவியல் சாத்தியங்களை சொல்லிவிடக் கூடிய ஒரு இனம் இருக்குமென்றால், நிச்சயம் அந்த இனத்தை மதித்தே தீர வேண்டும். 
 
சரி......! இது மட்டும்தான் மாயனின் 26000 வருசக் கணிப்புப் பற்றிய ஆச்சரியம் என்று நீங்கள் நினைத்தால், மாயன்கள் பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். இது மட்டும் இல்லை……! இன்னுமொன்றும் உண்டு. அது, இதைவிட ஆச்சரியமானது. மாயனையே தலையில் வைத்துக் கொள்ளலாம் போல நினைக்க வைக்கும் ஒன்று.




உலக அழிவு பற்றிப் பேச ஆரம்பித்த இந்தக் கணத்தில், உலக அழிவு பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை நான் உங்களுக்கு கொடுக்க வேண்டும். உலகம் அழியும் என்று நான் சொல்வதாக பலர் நினைக்கின்றனர். சிலர் நான் எழுதுவதில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து, உலகம் அழியும் என்று தீவிரமாக நம்பி, கொஞ்சம் பயம், கொஞ்சம் பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். சரியாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாது. ஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன்  உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது.
கடந்த தொடரில், 2012 டிசம்பர் 21ம் திகதி சூரியன், பால்வெளி மண்டலத்தின் (Milky way) மத்திய கோட்டை (Equator) அடைகிறது என்றும், கரும் பள்ளம் என்று அழைக்கப்படும் Dark rift ஐ அண்மிக்கிறது என்றும், இந்த நிகழ்வுகள் 26000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வுகள் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் நான் சொல்லாமல் விட்டது ஒன்றும் உண்டு. அது என்ன தெரியுமா? பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும், எங்கள் பூமியும், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டினூடாக, ஒரே நேர்கோட்டில்  (Alignment) வரிசையாக வருகின்றன. இந்த ஆச்சரியகரமான நிகழ்வு 21.12.2012 இல் மிகச் சரியாக நடைபெறுகிறது.
இது மட்டுமல்ல 26000 வருடங்களின் ஆச்சரியங்கள். இன்னுமொன்றும் உண்டு. அதுபற்றி இப்போது  பார்க்கலாம்.
சின்ன வயதில் நீங்கள் பம்பரம் சுற்றி விளையாடியிருக்கிறீர்களா? அநேகமாக அந்தப் பாக்கியத்தைத் தவறவிட்டவர்கள் சினிமாவிலாவது பம்பரத்தின் பயன்களைப் பார்த்திருப்பீர்கள். பம்பரம் ஒன்றைச் சுழல விட்டால், அது தன்னைத் தானே மிகவும் வேகமாகச் சுற்றும் அல்லவா? அப்போது பம்பரத்தில் நடைபெறும்  வேறு ஒரு செயலையும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள். அதாவது பம்பரம் சுற்றும் போது, பூமியில் தொட்டுக் கொண்டிருக்கும் கூரான பகுதி ஓரிடத்தில் நிற்க, மேற்பகுதி தலையை ஆட்டியபடியே சுற்றும். அப்படித் தலையாட்டும் பம்பரத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அதைச் சரியாகக் கவனித்திருப்பீர்கள் என்றால், அந்தத் தலையாட்டல், ஒரு கிடையான வட்டப் பாதையிலேயே இருக்கும்.

நாம் வாழும் பூமியும் 23.5 பாகையில் (degrees) சாய்ந்திருக்கும் விதமாக, ஒரு அச்சில் பம்பரம் போலச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும் பூமியும் ஒரு தலையாட்டலுடன்தான் சுற்றுகிறது. இந்தத் தலையாட்டலை  'பிரிசெஸன்' (Precession) என்கிறார்கள்.

எங்கள் பூமி, பம்பரம் போல மிக வேகமாகத் தலையாட்டாமல், மிக மிக மெதுவாக அந்தத் தலையாட்டலைச் செய்கிறது. பூமியின் வடபகுதி, தனது அச்சில் ஒரு இடத்தில் ஆரம்பித்து, வட்டப் பாதையில் இந்தத் தலையாட்டலைச் செய்து, மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு வருகிறது. அந்தத் தலையாட்டும் வட்டத்துக்கு எடுக்கும் காலம் எவ்வளவு தெரியுமா? 26000 வருடங்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
 
இந்த 'பிரிசெஸன்' (Precession) பூச்சியப் புள்ளியில் ஆரம்பித்து, 360 பாகையினூடாகச் சுற்றி மீண்டும் பூச்சியப் புள்ளியை அடைய, 26000 வருடங்கள் எடுக்கிறது. அதாவது ஒரு பாகை நகர, 72 வருடங்கள் எடுக்கிறது. அவ்வளவு மெதுவான தலையாட்டல்.
 "இந்தப் பிரிசெஸனில் அப்படி என்னதான் முக்கியம் இருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம். மிகச் சரியாக 21.12.2012 அன்று, பூமி தனது பிரிசெஸனின் முழுச் சுற்றை முடித்துப் பூச்சியத்துக்கு வருகிறது என்பதுதான் இங்கு விசேசம். இந்த பூச்சிய நிலையை 'போலாரிஸ்' (Polaris) அல்லது 'போல் ஸ்டார்' (Pole Star) என்கிறார்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக