செவ்வாய், 3 ஜூன், 2014

மாயா இன மக்களும் உலக அழிவும்-15

நாஸா அனுப்பிய IRAS தொலை நோக்கிக் கருவி, எமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அருகே, பூமியை விட மிகப் பெரிதாக ஒரு கோளைக் கண்டு பிடித்தது. இதுவரை இப்படிப் பல கோள்கள் விண்வெளியில் கண்டு விஞ்ஞானிகளால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், இந்தக் கோள் ஒரு விசேசமானதாகக் காணப்பட்டது. காரணம் இந்தக் கோள் நகர்ந்து வரும் பாதை சூரியக் குடும்பத்தை நோக்கியதாகவும், குறிப்பாக பூமியை நோக்கிய நகர்வாகவும் இருந்ததுதான்.
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோ, நட்சத்திரத்தையோ, நட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றன. காரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை  அவற்றை, ஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும். அப்படி இருக்கும் போது, IRAS என்னும் நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவி கண்டு பிடித்த அந்தக் கோள், எப்படிச் சூரியனை நோக்கி நகர முடியும் எனப் பார்த்த போது கிடைத்தது ஒரு ஆச்சரியமான பதில்.
பிளானெட் X என்னும் அந்தக் கோள் சூரியனின் ஈர்ப்பு விசையில், சூரியனையே சுற்றி வருகின்றது என்பதும், சூரியனைச் சுற்றிவரும் ஒன்பதாவது கோளாக அது இருக்கிறது என்பதும்தான் ஆச்சரியப்படத் தக்க அந்த விசயம் (புளூட்டோவை கோள் என்று எடுத்துக் கொள்ளவில்லை). இப்படி ஒரு கோள் சூரியனைச் சுற்றுகிறது என்ற சந்தேகம் ஏற்கனவே விஞ்ஞானிகளுக்கு இருந்திருக்கிறது. ஆனாலும் அதற்கு ஆதாரம் இல்லாமலே இருந்தது. IRAS இன் வின்வெளிப் பயணத்தின் பின்னர் அந்தச் சந்தேகம் சற்றே விலகத் தொடங்கியது. பிளானெட் X என்பது சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுவது போல இல்லாமல், வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் சுற்றுவதை படத்திலிருந்து நீங்கள் அவதானிக்கலாம். இதற்கும் காரணம் உண்டு.
 
எமது அண்ட வெளியில் இருக்கும் அநேகமான நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்களாகவே (Binary Stars)  இருக்கின்றன. இப்படி இருக்கும் இரட்டை நட்சத்திரங்கள், தம்மைச் சுற்றிக் கொள்ள தமகக்கெனக் கோள்களைத் தனித்தனியே கொண்டிருந்தாலும், அவை இரண்டையும் சேர்ந்து பொதுவாகச் சுற்றும் கோள்களையும் கொண்டிருக்கும். சில இரட்டை நட்சத்திரங்கள், தாமே ஒன்றை ஒன்றும் சுற்றிக் கொள்ளும். எமது சூரியனுக்கு அடுத்ததாக, அண்மையில்  இருக்கும் நட்சத்திரமான 'அல்பா சென்டாரி  (Alpha Centauri) என்னும் நட்சத்திரம் கூட முன்னர் ஒரு நட்சத்திரம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால் அது அல்பா சென்டாரி a, அல்பா சென்டாரி b (Alpha Centauri A, Alpha Centauri B) என்று இரட்டை நட்சத்திரங்கள் அருகருகே இருந்ததால் ஒரே நட்சத்திரம் போல இருந்தது. 
இந்த அல்பா சென்டாரி போல, எங்கள் சூரியனுக்கும் இன்னுமொரு இரட்டைச் சூரியன் உண்டு என்றும், அவை இரண்டையும் சுற்றும் ஒரு கோளாகத்தான் இந்த பிளானெட் X இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் (இங்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது). இதன்படி பிளானெட் X மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுகிறது.
இன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன், பிளானெட் X என்னும் கோள், பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AU தூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012 இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் X இருக்கும். அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம்.
இப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது எமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை. ஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல. ஆனாலும் நாஸா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது. எவ்வளவு காரணம் கேட்டாலும், நாஸா "அப்படி ஒரு கோளை நாங்கள் கண்டு பிடிக்கவே இல்லை" என்றும், "குளிர்சாதனக் கருவி பழுதடைந்ததால்தான் IRAS ஐ கீழே இறக்கினோம்" என்றும் அடம் பிடிக்கும் குழந்தை போலச் சொல்லிக் கொண்டு வருகிறது. இந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்று, அமெரிக்கப் பத்திரிகைகளான 'நியூயோர்க் டைம்ஸ்' (New York Times), வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ஆகியன கூட வெளிப்படையாகப் போட்டுடைத்தன.
நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளுக்கு ஆராய்ச்சியாளர்கள் 'பிளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயர் கொடுத்தாலும், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பதேமியாவில் (Mesopotamia) வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு 'நிபிரு' (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர். மொசப்பதேமியா என்பது ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே அமைந்திருந்த ஒரு பண்டைய நிலப்பகுதியாகும். அவர்கள் நிபிரு பற்றி என்ன சொன்னார்கள் என்று விளக்குவதற்கு, நான் எங்கள் மாயன்களின் கடவுளான 'குக்கிள்கான்' (Kukilcan) என்பவரிடம் அழைத்துச் சென்று உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். இதுவரை மாயன்கள் இங்கு எங்குமே சம்மந்தப்படாமல் இருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போ அமைகிறது.
 மாயன்களின் கடவுள்களில் ஒருவர்தான் குக்கிள்கான். இவர் மனித வளர்ச்சிக்கும், கலாச்சாரத்துக்கும் கடவுளாக மாயன்களால் வணங்கப்படுகிறார். மாயன்களின் மிகப் பெரிய இராச்சியமாக அமைந்த யூகட்டானில் (Yucatan) இல் உள்ள 'சிஷேன் இட்ஷா' (Chichen Idza) என்னுமிடத்தில், குக்கிள்கானுக்கென்றே ஒரு மிகப் பெரிய பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமிட் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லியிருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக