- எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
- பிரிவு: கவிதைகள்
பதறியெழுந்த ஓர் இரவின்
நிசிப்பொழுதிலிருந்து ஆரம்பமானது
அந்த குழந்தைளின் நித்திரைகளுக்கான நிர்மூலம்
ஆராரோக்களும் ஆரிராரோக்களும்
நாவுகள் கிழிந்து தொங்கின
தொட்டிலும் கட்டிலும் கொள்ளிகளாகி
குழந்தைகளின் சதைகளை சிதையூட்டத் தொடங்கின
பீரோக்களில் அடைத்து
பரணிகளில் முடக்கி
ஆழக்குழிகளில் அமிழ்த்து
துடித்துத்தான் போனார்கள் அம்மாக்கள்
குழந்தைகளின் உயிரையேனும் சேமித்து விட
அம்புலிமாமா சொன்ன
குழந்தைகளைத் தூக்கிச் சென்ற
ராட்சஸர்களின் நிழல் கதைகளிலெல்லாம்
நிஜங்கள் தரிக்கத் தொடங்கின
அடுக்கப்பட்ட தீக்குச்சிகளாய்
குழந்தைகளின் பிணங்கள்
இல்லாத நாவுகளில் கூவிக்கிடந்தார்கள்
ஓடுங்கள்
ஓடுங்கள்
நீங்கள் நாங்களாக வேண்டாம்
உங்கள் உயிரைத் தேடுங்கள்
உங்கள் உடைமைகளைத் தேடுங்கள்
உங்கள் உணர்வுகளைத் தேடுங்கள்
நீதத்தை வேண்டாம்
பற்றியெறிந்த கனல் தீர ஒருவன்
குழந்தைகளைச் சேகரிக்கத் தொடங்கினான்
கொஞ்சம் தடித்திருந்த ஒரு குழந்தையின் உடலில்
மெலிந்ததொரு வேறு குழந்தையின் கைகள்
பொருத்தமானதாக இல்லை
தொடை வரை அறுபட்டுக்கிடந்த ஒரு பிண்டத்திற்குரிய
காலைத் தேடிக்கொண்டிருந்தான் ஒருவன்.
தலை சிதைந்த நிலையில்
யாரெனத் தெரியப்படாமல் ஒரு குழந்தை
எக்குழந்தையும் தன்னுடையதாக இருக்கக்கூடாதென
சடல வரிசைகளின் ஒவ்வொரு முகத்தையும்
திறந்து மூடிக்கொண்டிருக்கிறாள் ஒரு தாய்
குழந்தைகள் அப்பளமாகிக் கிடந்தார்கள்
மாமிசத் துண்டுகளாகிக் கிடந்தார்கள்
ஒரு கொடிய நரகின் துஷ்டர்களாகிக் கிடந்தார்கள்
எந்த இடத்திலும் அவர்கள் குழந்தைகளாக இல்லை
குழந்தைகள் சுமக்கும் பொம்மைகளாகக் கூட இல்லை
தான் கடந்துவிட்ட எத்தனையோ நிகழ்வுகளோடொன்றாய்
உலகம் கடந்து கொண்டிருந்தது
தத்தமது குழந்தைகளின் உச்சி முகர்ந்தபடி
சானலை மாற்றிக்கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக