வெள்ளி, 26 டிசம்பர், 2014

மாற்று ஊடகத்தின் தொடக்கப்புள்ளி


இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 59 செக்கன்களும் தேவைப்படும்.

உங்களின் தெரிவுகளில் ஆதிக்கம் செய்ய எவற்றையெல்லாம் அனுமதிக்கிறீர்கள்?
இன்று காலை நண்பனொருவன், பகிர்ந்த காணொளியொன்றைக் காண நேர்ந்தது. அதைப் பார்த்த முடித்த மாத்திரத்தில் ஒரு சில விடயங்கள் எனது மனத்தில் தோன்றியது. அந்த விடயங்கள் தொடர்பாக நிறத்தில் பல தடவை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், அதை இன்னுமின்னும் பதிவு செய்ய வேண்டுமென்கின்ற ஆர்வத்தின் விளைவுதான் இந்தப் பதிவு.
பொதுவாக, வயது வந்தவர்கள் உலகைக் காண்பதும் அதேவேளை சிறுவர்கள் காணும் உலகமும் முற்றிலும் மாறுபட்டதாகும். இதுதான், உண்மை என்று தெரிந்த நிலையிலும், வயது வந்தவர்கள், தமது உலகமெனக் கற்பனை செய்து கொள்கின்ற விடயங்கள் பலவேளைகளில் அபத்தமாகவே இருக்கின்றன.
இதற்கு, இவ்வாறு உலகத்தைக் காண வேண்டுமென்ற தெரிவை அவர்கள் செய்தாலும், இந்தத் தெரிவை தேர்ந்தெடுப்பதில் பல புறச்சூழலின் நிலைகள் காரணமாக அமைகின்றன. அதில் முக்கியமானது, ஊடகமாகும்.
ஊடகம் என்பது, வானொலி, தொலைக்காட்சி, சினிமா என்பதோடு நின்றுவிடாது, சமூக ஊடகம் என்பதாகவும் இணையம் வாயிலாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இருப்பது வெளிப்படையானதே!
ஒரு சமூக அமைப்பின் மொத்த சிந்தனையை மாற்றியமைக்கின்ற ஆற்றலை ஊடகம் எப்போதும் கொண்டிருக்கிறது. இந்த ஊடகத்தின் சக்தியின் வலையில் சிக்கியே, சாமான்யன்களின் பல வாழ்க்கை பற்றியதான முடிவுகள் சாத்தியமாகிறது.
உண்ணும் உடையிலிருந்து, உடுக்கும் உடையிலிருந்து, வாழ்கின்ற வீடுவரை அனைத்திலும், ஊடகம் கொண்டுதருகின்ற சித்தரிப்பின் விளைவுகளே, உயர்வென பலரும் இங்கு நம்பிவிடுகின்றனர்.
தனது தோற்றத்தின் மொத்த தெரிவும் மெருகூட்டலும், ஊடகம் உபதேசிக்கின்ற விடயங்களை “அப்பி” விடுவதால் கிடைக்குமென்கின்ற அறிவு கற்பிதம் செய்யப்பட்டு, அவை பலரையும் தொடர்ச்சியாக ஆட்கொண்டும் வருகிறது.
ஆக, ஊடகங்கள் நெறியாள்கை செய்து, வணிகத்தின் தேவை கருதி உருவாக்கப்படும் அத்தனை விடயங்களும் ஔடதங்களாகப் பார்க்கப்பட்டு, தேனென நுகரப்படுகின்றன.
இந்த நுகர்தல் என்பது, வெறும் நுகர்தல் என்ற நிலையையும் தாண்டி, மாயை என்ற உலகங்களையும் உண்மையென நம்புகின்றதான நிலையை தோற்றிவிக்கிறது.
அது அப்படியும் நின்றுவிடுவதில்லை, ஊடகம் பற்றிய ஆதிக்கமேயில்லாத, தன் வாழ்வைக் ‘களித்துக்’ கொண்டிருக்கும் சகமனிதனுக்கும், இன்னொரு ஊடக ஆதிக்கம் கொண்ட சகமனிதனால், ஊடகம் தனக்குக் சொல்லித்தந்த விடயங்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. நம்பச் செய்யப்படுகிறது.
இங்கு ஊடகங்களையோ, அதன் வணிக நிலைச் செயற்பாடுகளையோ குறை சொல்ல முடியாது, அவைதான் அவற்றின் பணியாகவிருக்கின்றன. மாற்று ஊடகம் என்ற தேவை இருக்கிறது என்பதெல்லாம் இன்னொரு கட்ட விவாத நிலைப் பொருள்,
ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் ஆழச் சிந்தித்து, தனது ஆய்தலின் அடிப்படையில் அவன் பற்றிய, அவன் வாழ்கின்ற சூழல் பற்றிய, ஏன் அவனின் மொத்த வாழ்வு பற்றிய தீர்மானங்களை எடுக்கத் துணிகின்ற — முயல்கின்ற தருணமே, மாற்று ஊடகத்தின் தொடக்கப்புள்ளி.
ஒவ்வொரு தனிநபரின் ஆய்ந்தறிந்த எண்ணத்தின் சேர்க்கை என்பது, வணிகம் பற்றிய குறிக்கோளோடு திகழுகின்ற ஊடகச் சிந்தனைக்கான மாற்றுநிலை.
ஆக, இங்கு சொல்லப்பட வேண்டியதெல்லாம், ஊடகங்கள் தருகின்ற விடயங்களை நுகரக் கூடாது என்பது அல்ல. நுகரப்படுகின்ற அத்தனை விடயங்கள் பற்றியதான தனிநபர் ஆழ்நிலை விமரிசனங்களும் அதன் உண்மைத் தன்மை பற்றியதான ஆய்தலும், அந்த விடயங்கள் பற்றியதான தேடல்களும் இங்கு அதிகரிக்க வேண்டும் என்பதாகும்.
வயது வந்தவர்கள், சிறுவர்கள் என 50 பேர்களை அழைத்து, அவர்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்கப்பட்டது. “உங்களின் உடலின் ஒரு விடயத்தை நீங்கள் மாற்ற வேண்டுமென நினைத்தால், அது என்னவாகவிருக்கும்?” என்பதுதான் கேட்கப்பட்ட கேள்வி.
நான் மேலே சொன்னது போலவே, வயது வந்தவர்கள் அத்தனை பேர் வழங்கிய பதில்களும், அவர்கள் நாளாந்தம் வாசிக்கின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற ஊடகங்களால் உண்மையென கற்பிதம் செய்யப்பட்ட மாயையான விடயங்களால், ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தன. ஆனால், சிறுவர்களின் பதில்களோ, ஊடக ஆதிக்கம் அற்றதாய் வெளிப்படையாயிருந்தது.
இதுதான் அந்தக் காணொளி.
ஒவ்வொருவராலும், சிந்திக்க முடியுமென்ற உண்மை தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வருகின்றது. சிந்தனை என்ற குணம்தான் எமது, முக்கிய மனித பண்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், சிந்தனையை மழுங்கடித்து, சிந்தனை பற்றிய சூன்ய நிலைகளை வழங்கும் ஊடக வணிகம் அதனைச் சார்ந்த அரசியல் பற்றியெல்லாம் இன்னமும் கவனிக்கப்படாமல், அவை வேதங்களாக, “சிந்திக்கத் தெரிந்த மனிதர்களால்”, பார்க்கப்படுவது வேதனையளிக்கிறது.
மாற்று ஊடகம், மாற்று சினிமா, மாற்று எழுத்து, மாற்று சங்கீதம் என விரியும் அத்தனை இயல்புகளினதும், தொடக்கமென்பது தனிமனிதனின் ஆழ்ந்த சிந்தனையும் மனப்பாங்கு மாற்றமும் தான்.
சிந்தனையை மாற்றி ஆதிக்கம் செலுத்த வணிக நிலைச் சாதனங்கள் — ஊடகங்கள் , ஒவ்வொரு தனிநபரையும் இலக்கு வைத்து, அதில் வெற்றியும் காணும் போது, அந்த முனைப்புகள் பற்றிய பொதுவான அறிவைக் கூட தனிமனிதன் தவறவிட்டுக்கிடப்பது பொருந்தாது.
உங்கள் சிந்தனையில் மாற்றங்கள் தோன்ற, வழி செய்வது உங்கள் தெரிவுகள். நீங்கள் தெரிவுசெய்யப் போகிறீர்களா? அல்லது உங்களுக்காக ஊடகங்களை, தெரிந்து தர சொல்லப்போகிறீர்களா?
our thanks to..
— தாரிக் அஸீஸ் (உதய தாரகை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக