உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.
தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.
தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.
1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)
இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல் பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப்படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony) நமக்கு விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புக்கள், வெளியுறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறு பல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை அடுத்த பகுதியில் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக