சனி, 11 ஆகஸ்ட், 2012

உபவாச நன்மை சொல்லுறேன்

உபவாச நன்மை சொல்லுறேன்
கேட்பீரே மாந்தரே
உயர் நோன்பு மாத பெருமையே
இதுவாகும் மாந்தரே

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்
ஓயாது எண்ணினான் மனதில் நோன்பையே நிதம்
பெரும் ஆனந்தம் கொண்டான் ரமழான் மாதம் வந்ததும்
தன் தாயை கட்டி தழுவிக் கொண்டு கெஞ்சினான் சனம்
மறவாது சஹரு நேரமதில் எழுப்ப வேண்டுமாய்
மன்றாடினானே நோன்பு நோற்க வேண்டும் என்றவன்

மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை
மறு நாளின் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான்
ஆதாரமின்றி வருந்துவதை கண்ட தாயவள்
அன்போடனைத்து ஆறுதலாய் சாற்றினாள் இதை
போதாத வயதில் நோன்புனக்கு கடமையல்லவே
பொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள்

வல்லோன் உரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதை
வையம் சிறக்க நமக்களித்த மாதம் அல்லவோ
சொல்வார்கள் நோன்பு நோற்பவர்க்கு சொர்க்கம் மீதிலே
சுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோ
கல்லோ உன் நெஞ்சு கூறும் தாயே கருணையில்லையா
கண்ணாலே எந்தன் ஆண்டவனை காண வேண்டுமே

அந்நாள் இரவு முழுதும் அவன் தூங்க வில்லையே
ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே
ஏண்ணம் போல் சஹரு நேரமது வந்த போதிலே
எழுந்தோடி நோன்பு வைத்து மனம் புரிப்பெய்தவே
ஆனாலும் அன்னை தந்தை கூடி அதட்டினார்களே
ஆகாது என்று சாதனையால் வம்பு பேசினான்

திருவான அஸரு என்னும் தொழுகை நேரம் நெருங்கவே
தண்ணீரின் தாகம் அதிகமாகி நாவரண்டதால்
பாரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியே
பாரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சையாகினான்
பிரியம் மிகுந்த செல்வன் உயிர் பிரிந்து சென்றதால்
போனாயே என்று கூவி அழுது புலம்பி வாடினாள்

இனிமை நிறைந்த பாங்கின் ஓசை செவியில் கேட்கவே
இறையோனை தொழுது வேண்டினார்கள் ஒன்று கூடியே
தனிமையில் அன்னை ஆண்டவன் பால் கைகளேந்தியே
தகுமோ இறைவா என்று துஆ கேட்டு புலம்பினாள்
இனி யாது செய்வேன் என்று அன்னை மனது நோகவே
இதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள்

தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும் போதிலே
தலைவாசலிலோர் சாதுமகான் வந்துமே நின்றார்
எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழை ஆதலால்
ஏதேனும் உணவு தந்துதவ இயலுமோ என்றார்
சிந்தை இரங்கி வீட்டிலன்று சமைத்திருந்ததை
சந்தோஷமாக தந்த போது சாது வினவினார்.

கவலை மிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்
கடவுள் கருணை உங்கள் மீதுண்டாகுக வென்றார்
சவமாகினானே எங்கள் ஒரே செல்வ பாலகன்
சாகா வரமே தருக உம்மால் ஆகுமோ வென்றார்
தேவா சிறுவன் நோன்பிருந்து உயிரை நீத்ததால்
தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழ செய்குவீர்

ஆயாசமாக வீனில் யாரும் வருந்திட வேண்டாம்
அடியேனுக்கந்த பையனை நீர் காட்டுவீரென்றார்
வாயாற வாழ்த்தி வாருமென்று உள்ளே அழைத்தார்
வந்தார் உடனே சாது  பையன் பக்தியைக்  கண்டார்
நீயே எழுவாய் என்று சாது கூறினாரதே
நிமிஷத்திலே எழுந்து சிறுவன் இறையை வணங்கினான்

ஆனந்த காட்சி இதனை கண்ட அன்னை தந்தையும்
அன்போடு சாதை தழுவிக் கொண்டு இறையை போற்றினார்
தீனோர்களே ரமழான் மாதம் மேன்மையானதே
துன்பங்கள் தீரும் இறைவனுக்கே நன்றி நவிலுவீர்
என்றும் பெறுவார் நோன்பிருந்தார் இறைவன் ஆசியை
எனக்கூறி மறைந்தாரே சாது உலக மாந்தரே

உலக மாந்தரே உலக மாந்தரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக