புதன், 8 ஆகஸ்ட், 2012

மாற்றாந்தாய்

மன்னிப்புன்னு கேக்ககூட
எனக்கிங்க தகுதி இல்ல...!!

ஐயா! முத்துசாமி..
நீதான் என் குலசாமி..
நான் விழுந்து கும்பிட,
எங்கே உன் கால காமி..!
நீ என்னய ஆத்தா-னு அழைச்சிருக்கே...
அதுக்கே உன்ன அறைஞ்சிருக்கேன்..!
மூத்தவ பெத்தவனே..
மாற்றாந்தாய் நான் உனக்கு..,
உன் ஆத்தா இருக்கையிலே - உன்
அப்பன் என்ன சேத்துக்கிட்டான் ..!!
அந்த மவராசி செத்தபின்னே,
இந்த வீட்ட எனக்கு எழுதி வச்சான்..
உன்ன பெத்தவ செத்துபோயி
ஏழெட்டு வருசமாச்சி..
இடைப்பட்ட வருசத்துல - நான்
உனக்கு வெந்த சோத்த போடலியே.!
களி கிண்டி கொடுத்திருக்கேன்..
கண் கசங்காம தின்னிருக்கே..!
பழைய சோத்த போட்டிருக்கேன்,
பணிவாத்தான் இருந்திருக்கே..!!
உன் வயசுலத்தான்
என் வயித்து புள்ள இருக்கான்..
அவனைத்தான் பொத்தி பொத்தி வளத்திருந்தேன் ,
ராசாத்தி ராசாவா நெனைச்சிருந்தேன்..
மூத்தவ தான் பெத்ததுன்னு - உன்ன
கடுகு போல பொறிஞ்சிருக்கேன்...
கருமிளகாவா எரிஞ்சிருக்கேன்..!
அனாதையா நெனச்சிருக்கேன் - ஒரு
ஆத்தாவா பாத்ததில்ல...!!
ஆடு மாடு மேய்க்கச்சொல்லி
காடு கழனி அனுப்பிருக்கேன்..
விறகு பொறுக்கி வரச்சொல்லி
மலையேத்தி விட்டுருக்கேன்...!
இவ்வளவும் செஞ்ச பின்னும்
பள்ளிக்கூடம் போய்வருவ..!!
இந்த வருஷம் நிறுத்திரலாம்,
இந்த வருஷம் நிறுத்திரலாம்னு
எப்போதும் நெனச்சிருக்கேன்..
பத்தாம் கிளாஸ் பரிட்சையில
நீ பள்ளியில முதலுன்னு
வாத்தி வந்து சொல்லி போக..,
படிக்கத்தான் வெப்போம்னு - உன்
அப்பன் வந்து சண்ட போட்டான்..!
அவனையுந்தன் சரிக்கட்டி
உன் மேற்படிப்ப நிறுத்தி வச்சேன்..!!
நான் பெத்த என் புள்ளைய..
பட்டணம் போயி படிக்கவச்சேன்..!
படிப்பத்தான் முடிச்ச புள்ள
பாவியாத்தான் திரும்ப வந்தான்..!
பிஞ்சியிலே பழுத்திருக்கான்
குடி கஞ்சா பழகிருக்கான்..
குடிக்கத்தான் காசு கேட்டு
குத்துவிளக்க வித்துபுட்டான்..!
இவன் போக்க என்ன சொல்ல
சரிக்கட்ட வேணுமின்னு,
இன்னைக்கு நான் கேக்கயிலே..
அம்மிக்கல்ல தூக்கியாந்து - என்
மண்டையிலே போட்டுபுட்டான்..
ரத்தம் போயி வாசலிலே..
குத்துயிரா கெடந்திருந்தேன்..
சித்தம் கலங்கி போயிருந்தேன்..!
வண்டி வச்சி நீதானே..
கட்டு போட கூட்டிவந்த..
ரத்தம் அதிகம் போச்சுதுன்னு
மருத்துவச்சி சொல்லி போக
நான் தாரேன் ரத்தமின்னு
நீதானே முன்ன வந்த...
மவராசி பெத்தவனே..!
நீதாண்டா என் புள்ள.!!
மன்னிப்புன்னு கேக்ககூட
எனக்கிங்க தகுதி இல்ல...!!
ஐயா முத்துசாமி,
நீதான் என் குலசாமி!!
நான் விழுந்து கும்பிடனும்,
எங்கே உன் காலக்காமி...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக