உஷார் – பெண்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் மூன்றாவது கண்!
உஷார் – பெண்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் மூன்றாவது கண்!
‘பிளம்பிங், எலெக்ட்ரிகல், கேபிள் என்று வேலை பார்க்கும் இளைஞர்கள் சிலர், பல வீடுகளின் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா, செல்போன் கேமரா போன்றவற்றை பொருத்தி பெண்களைப் படம் எடுத்து, அவற்றை சி.டி போட்டு பலருக்கும் விற்பனை செய்திருக்கிறார்கள், ப்ளூ டூத் மூலமாக அந்த படங்களை ஷேர் செய்திருக்கிறார்கள்…’
டெக்னாலஜி, எந்தளவுக்கு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதை… பலத்த அதிர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை உறைய வைத்திருக்கிறது… மதுரை அருகேயுள்ள அந்த சிறு நகரத்தில் (ஊர் மற்றும் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன) நடந்திருக்கும் இந்தச் சம்பவம்!
”இது, வெளியில் தெரிந்தது. இதுபோல் பல சம்பவங்கள் வெளியில் தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன” என்று அதிர்ச்சிக்கூட்டி ஆரம்பித்த ‘எவிடென்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், ”சம்பவம் நடந்திருப்பது… கிராமமும் நகரமும் கலந்த ஒரு ஊரில்தான். எல்லா ஊர்களையும்போல, பிளம்பிங்… எலெக்ட்ரிக்கல், கேபிள் என்று வேலை பார்க்கும் இளைஞர்கள், அந்த ஊரில் உள்ள வீடுகளில் உரிமையோடு நுழைவார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுதான்… இப்படியரு அநியாயத்தை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்… வீட்டுக்கு பின்புறத்தில் நான்கு பக்கமும் தென்னந்தட்டி மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் ‘பாத்ரூம்’களில்தான் குளிக்க வேண்டும், உடை மாற்ற வேண்டும். விஷமக்கார இளைஞர்கள் சிலர், அந்த தட்டிக்கு இடையில் கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளனர். அதேபோல, படுக்கை அறைகளிலும் கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர். அவற்றையெல்லாம் எம்.எம்.எஸ், ப்ளூ டூத், மெமரி கார்டு என்று தங்களுக்குள் பகிர்ந்தது மட்டுமல்லாது, சி.டி. போட்டு விற்பனையும் செய்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த அநியாயம்… சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், தன்னுடைய செல்போனில் ‘படம்’ பார்த்துக் கொண்டிருந்தது ஊரார் கண்களில் சிக்கியது. போலீஸ் வரை போனால் ஊர்ப் பெண்களின் மானம் பறிபோகும் என்று பதறிய ஊர்க்காரர்கள், எல்லா இளைஞர்களின் மெமரி கார்டுகளையும் பறிமுதல் செய்து எரித்திருக்கிறார்கள்” என்று சொன்ன கதிர்…
”இது, எங்கோ… யாருக்கோ… நடந்த சம்பவமில்லை. எங்கும் நடந்துகொண்டிருக்கும் கொடுமையே. கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், யார் வேண்டுமானாலும் இதில் சிக்கக்கூடும்” என்று நிதர்சனம் சொல்லி, எச்சரிக்கை தந்தார்.
‘நடிகைகள் தங்கும் பிரமாண்ட ஹோட்டல்களின் அறைகள், புதுமண ஜோடிகள் தங்கும் டூரிஸ்ட் ஸ்பாட் விடுதி அறைகள், ஜவுளிக் கடைகளின் டிரெஸ்ஸிங் ரூம்கள்… இங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் பதுங்கி இருக்கலாம்… ஜாக்கிரதை’ என்று ஏற்கெனவே ஏகப்பட்ட எச்சரிக்கைகளும்… ஒரு சில உண்மைச் சம்பவங்களும் நம்மை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வீடு தேடி இப்படிஒரு வில்லங்கம் என்றால்..?
இதுபற்றி சென்னையைச் சேர்ந்த ‘சன் துப்பறியும் நிறுவனத்’தின் இயக்குநர் வரதராஜனிடம் பேசியபோது, ”நீங்கள் சொல்றத கேட்கவே நடுக்கமா இருக்கு” என்று வருத்தத்துடன் ஆரம்பித்தவர்,
”சீனாவுல இருந்து ‘ஸ்பை பாத்ரூம் கேமரா’ங்கிற பேர்ல, டூத் பிரஷ், பாத்ரூம் க்ளீனிங் பிரஷ், சோப் பாக்ஸ்ல எல்லாம் வைக்கிற மாதிரி விதவிதமான கேமரா மார்க்கெட்ல குவியுது. விலை அதிகம்கிறதால, இதை உபயோகப்படுத்தறவங்க பொருளாதார பலம் உள்ள ஹைடெக் ஆசாமிகளாத்தான் இருக்கணும். நீங்க சொல்ற சம்பவத்துல… மொபைல் கேமராவை வெச்சுதான் படமெடுத்திருக்கணும். இப்போ ஹைடெக், காம்பாக்டு மொபைல்கள் வந்துட்டதால, அதை பாத்ரூம்ல வைக்குறதும் ஈஸி, எடுத்த காட்சிகளை ப்ளூ டூத், சி.டினு பகிர்ந்துக்கறதும் சுலபம்” என்றவர், இதிலிருந்து தப்பிக்க உஷார் டிப்ஸ்களையும் தந்தார்.
”பெண்கள்தான் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சிலிண்டர் பாய், தண்ணீர் கேன் கொண்டு வருபவர், கேபிள்காரர்னு எந்த நபர் நம்ம வீட்டுக்கு வந்தாலும்… அலர்ட்டா இருக்கணும். அவர் வேலை முடிச்சுப் போறவரைக்கும் கண்காணிச்சுட்டே இருந்து அனுப்பி வைக்கணும். அவங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் பொம்மை, நைட் லேம்ப், வால் கிளாக்னு வீட்டில் இருக்குற பொருள் ஏதாவது இடம் மாறியிருந்தா… அதை செக் பண்ணணும்.
அநாவசியமா யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கணும். அதேசமயம், வில்லன்கள் வீட்டுக்கு வெளியே இருந்துதான் வரணும்ங்கிறது இல்லை. சமீபத்தில் எங்ககிட்ட வந்த ஒரு அம்மா, தான் தினமும் குளிக்கப் போகும்போது உள்ளுணர்வுக்கு ஏதோ உறுத்தலா இருக்குனு சொன்னார். அவர் குளியலறைக்குப் போற நேரம் தினமும் மொபைல் கேமராவை ஜன்னல்ல பொருத்தினது, அவரோட மருமகன்னு நாங்க கண்டுபிடிச்சு சொன்னப்போ… கூனிக் குறுகிப் போனார்.
இப்படி சொந்தக்காரங்க… நண்பர்கள்னு பல ரூபத்துலயும் ஆபத்து காத்திருக்கு. அதேபோல, வயசானவங்க இந்தத் தப்பெல்லாம் பண்ண மாட்டாங்கனு நாம நினைச்சா… அதுவும் தப்பு. வயசையே கருவியா பயன்படுத்திக்கிட்டு தாராளமா தப்பு பண்றவங்களும் இருக்காங்க. அதனால, தங்களோட பாதுகாப்பு வளையத்தை இந்த டெக்னாலஜி யுகத்துல பெண்கள் ரொம்பவே பலப்படுத்தறது மூலமாதான் அவங்கள காப்பாத்திக்க முடியும்’’ என்று நிதர்சனத்தை புரிய வைத்தார் வரதராஜன்.
மதுரை மாவட்ட எஸ்.பி-யான பாலகிருஷ்ணனிடம் பேசியபோது, ”இப்படியரு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை. விஷயம் வெளியில் தெரிந்ததுமே பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால்… பயந்துபோன ஊர்க்காரர்கள் புகார் தரத்தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், ஈவ் டீசிங் புகார் தரப்பட்டிருப்பதால், அந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவான ஒரு நபரை தேடி வருகிறோம். முழுமையான புகார் தரப்படும்பட்சத்தில் கண்டிப்பாக கடும் நடவடிக்கை உண்டு” என்று சொன்னவர்,
”உங்கள் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்து அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும். பெயரை வெளியிட விருப்பம் இல்லாவிட்டால், போன் மூலமாகவே தகவலாக சொல்லலாம். போலீஸே சுயமுனைப்பில் அதை விசாரித்து உண்மையைக் கண்டுபிடிப்பார்கள்.
புகார் கொடுக்கும்பட்சத்தில், போன் பேச்சு (வாய்ஸ் ரெக்கார்ட்), வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் கொடுக்கலாம். இவை எதுவுமே இல்லை என்றாலும் கவலைப்படத் தேவைஇல்லை. எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுத்தாலே… கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம். சம்பந்தப்பட்ட குற்றவாளியின் லேப்டாப், செல்போன் போன்றவற்றிலிருந்தே ஆதா ரங்களை நாங்கள் சேகரித்துவிடுவோம்” என்று நம்பிக்கையூட்டினார்.
கேமராக்களை தடுக்கும் கருவிகள்!
செல்போன் கேமராக்கள் மற்றும் ரகசிய கேமராக்கள் நம்மை படம்பிடிப்பதைத் தடுக்க, சில வகை கருவிகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றையும் தெரிந்து கொள்வோமா..!
மொபைல் ஜாமர்:
குறைந்தபட்சம் 5,000 ரூபாய் விலையில் இது கிடைக்கிறது. வாக்கி டாக்கி சைஸில் இருக்கும் இதை வாங்கி வீட்டில் வைத்துவிட்டால்…. முப்பதடி சுற்றளவில் இருக்கும் செல்போன், அதிலிருக்கும் கேமரா ஆகியவற்றை செயல்படவிடாது. உங்கள் செல்போனும்தான்.
ஸ்பை கேமரா ஃபைண்டர்:
குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் இதுவும், வாக்கி டாக்கி போலத்தான் இருக்கும். இதைக் கையில் வைத்துக் கொண்டு நீங்கள் செல்லும்போது… இந்தக் கருவியில் சிவப்பு லைட் எரிந்தால், அங்கே ‘ஸ்பை கேமரா’ வைக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அந்தக் கேமராவை செயல்படவிடாமல் இக்கருவி தடுக்காது. விஷயம் தெரிந்த ஆட்களை அழைத்து, கேமராவை அகற்றிவிடலாம்.
ஸ்பை கேமரா ஜாமர்:
குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் இக்கருவியை உங்கள் வீட்டில் பொருத்திவிட்டால்… அங்கே எந்த வகையான ‘ஸ்பை கேமரா’ பொருத்தப்பட்டிருந்தாலும், அது செயல்படாது.
போலீஸே நடவடிக்கை எடுக்கலாம்!
‘பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து புகார் இல்லை. அதனால் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று போலீஸ் தரப்பில் கூறப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டபோது, ”குற்றவியல் சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்தான் புகார் கொடுக்க வேண்டும் என்று அத்தியாவசியம் இல்லை. மூன்றாவது நபர்கூட புகார் தரலாம். யாருமே புகார் தரவில்லை எனும்பட்சத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் போலீஸே புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு உதாரணங்களும் இருக்கின்றன.
‘பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முயற்சிக்கு போயிருக்கிறார்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று சொல்வது, போலீஸாரின் இயலாமையையே காட்டுகிறது. போதுமான நம்பிக்கையை போலீஸார் தந்திருந்தால், தற்கொலை முயற்சிக்கு போயிருக்க மாட்டார்கள். மேலும் இப்படிப்பட்ட விஷயங்களில் போதுமான பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதை சில வழக்குகளிலாவது நிரூபித்தால்தான்… எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக புகார்தர பலரும் தைரியமாக முன்வருவார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை சட்டத்தில் நிறைய பாதுகாப்புகள் இருக்கின்றன. அதிலும் இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் என்றால்… அவர்களுடைய அடையாளம் வெளியில் வரக்கூடாது. மீடியாக்களிலும் வெளியிடக்கூடாது, நீதிமன்றத்திலும் ரகசிய விசாரணை என பலவிதங்களில் பாதுகாப்பு இருக்கிறது.
எனவே, இந்த வழக்கில் போலீஸார் தாமாகவே முன்வந்து பெண் போலீஸைக் கொண்ட ஸ்பெஷல் டீமை உருவாக்கி விசாரித்து உரிய நடவடிக்கையை எடுப்பதுதான், எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்கள் நடப்பதைத் தடுக்கும். தற்போது குற்றம் செய்தவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத் தருவதாக இருக்கும்” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக