வெள்ளி, 5 அக்டோபர், 2012

கூடங்குளம் எனும் மாயை

 

‘இது ஒரு நவீன திட்டம்.’
‘இது ஒரு அழிவுத் திட்டம்.’
‘இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.’
‘மின்சாரத் தட்டுப்பாடு வந்துவிடும்.’
‘இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?’
‘23 ஆயிரம் கோடி செலவு ஆகியிருக்கிறது.’
‘உயிர்கள்தான் முக்கியமானவை.’
‘இதை இனி நிறுத்த முடியாது.’
‘உங்களில் ஒருத்தியாகப் போராடுவேன்.’
‘மக்கள் அழிந்துவிடுவார்கள்.’
‘—-செய்திகளுக்காக, கூடங்குளத்திலிருந்து —–’
இப்படி எத்தனையோ கருத்துக்கள் கூடங்குளம் பற்றி தினமும் பரிமாறப்படுகின்றன.
உறங்கி எழுந்தவர்கள், எழுந்து உறங்கியவர்கள் பலர் போராட்டக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மந்தரித்த கோழிகள் போல பலர் தலை ஆட்டுகிறார்கள்.
ஆடு மாடுகளாய் அடங்கிப் போகிறார்கள்.
ஒரு திட்டம் ஒரே நாளில் உருவாகிவிடுவதும் இல்லை. செயல்படுத்தப்பட்டுவிடுவதும் இல்லை.
அதற்குப் பின்னால் ஒரு நீண்ட அரசியல் இருந்துவிடுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் எதிர்ப்பவர்கள் அல்ல. ஆதரிப்பவர்கள் எல்லோரும் ஆதரிப்பவர்களும் அல்ல.
கூடங்குளம் எனும் ஒரு மின்சார ஊற்றிலிருந்து ஆற்றலை எதிர்கால அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒரு அரசியல் கூட்டம் காத்திருக்கிறது.
ஆகையால் ஆதரவாகவும் எதிராகவும் சொல்லாடல்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.
ஒரு சமூக அங்கீகாரத்தை அரசியல் மூளைகள் எதிர்பார்த்திருக்கின்றன.
இதற்குப் பின்னால் ஒரு பெரிய அமைப்பு இருக்கிறது.
மயங்கித் திரியும் ஊடகக்காரர்களுக்கு பின்னணி தெரிவதில்லை.
அணு உலை என்பது ஒரு திறந்த சவக் கிடங்கு. அணு ஒப்பந்தங்கள் அணு ஆயுத எதிர்பார்ப்புகளுடன் செய்யப்படுகின்றன.
அணு ஆயுதப் போராட்டம் ஒரு இனத்தின் போராட்டம். அது ஒரு ஆதிக்கப் போராட்டம்.
இதற்கு அணு மின் உலைகள் முகமூடிகள்.
அமைப்புக்கு எதிராக சாதாரண மனிதர்கள் வெல்வதில்லை. ஆனால் வெல்வது போன்ற கற்பனை அவர்களுக்குத் தரப்படுகிறது.
ஆனால் எந்தப் போரும் முடிவதில்லை.
போராட்டம் இருந்தால்தான் அமைப்பு பலப்படும்.
ஆகையால் போராட்டம் தொடரும்.
தொடரட்டும்.
***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக