அவர்கள் ஒரே தோற்றம் கொண்டவர்கள். இரட்டையர்கள் அல்ல. உடன்பிறப்புகள் அல்ல. உறவினர்கள் அல்ல. தெரிந்தவர்கள் அல்ல. எங்கோ பிறந்து ஒரே தோற்றம் கொண்ட வேற்று மனிதர்கள் அவர்கள்.
ஒன்று போல் மற்றது இருக்கும் வாழ்வின் தத்துவத்தை விளக்குவது ஜோஸ் சரமேகோவின் நாவல், ‘தி டபுள்’ – இரட்டை.
ஒரு பள்ளி ஆசிரியன் தன் வீட்டு வீடியோவில் திரைப்படத்தை ஓடவிடும்போது தன்னைப் போலவே இருக்கும் ஒரு துணை நடிகனைப் பார்த்துவிடுகிறான். அவனைத் தேடிக் கண்டடைகிறான்.
இருவரும் சந்திக்கிறார்கள். அவர்களின் தோற்றம், குரல், உயரம், மச்சங்கள் என்று அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆசிரியன் பிறந்ததற்கு அரை மணி நேரம் முன்னதாகப் பிறந்தவன் துணை நடிகன். அதனால் தான்தான் அசல் என்று அவன் கூறுகிறான். இனி சந்திப்பதில்லை என்று முடிவு செய்து அவர்கள் பிரிகிறார்கள்.
துணை நடிகனைச் சந்திக்கும்போது தான் அணிந்து வந்த ஒட்டு தாடியை அவனுக்கு ஆசிரியன் அனுப்பிவைக்கிறான். இருவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பது துணை நடிகனின் மனைவியிடம் மனச் சிக்கலை உருவாக்குகிறது.
தன்னைப் போல் ஒருவன் இருக்கும் ரகசியத்தை தன் காதலியிடம் ஆசிரியன் மறைத்துவிடுகிறான். ஆனால் தன் தாயிடம் கூறிவிடுகிறான்.
ஆசிரியனை துணை நடிகன் பழி வாங்க நினைக்கிறான். ஆசிரியனின் காதலியிடம் அவனைப் போலவே தான் இருப்பதை சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அவளுடன் ஒரு இரவைக் கழிக்க விரும்புவதாகச் சொல்கிறான். ஆசிரியனின் உடை அணிந்து, அவனுடைய காரிலேயே அவனுடைய காதலியை தன் பண்ணை வீட்டுக்கு அழைத்துப் போகிறான் துணை நடிகன்.
துணை நடிகனைப் பழிவாங்க ஆசிரியன் அவனுடைய வீட்டுக்குப் போய் அவனுடைய மனைவியுடன் இரவைக் கழிக்கிறான். அவன் வீட்டுக்கு வரும்போது தன்னை அவன் எதிர்கொள்ள வேண்டும் என்று காத்திருக்கிறான் ஆசிரியன்.
ஆனால் துணை நடிகன் வரவில்லை. அவனுடன் சென்ற தன் காதலியின் அலுவலகத்திற்கு ஆசிரியன் போன் செய்கிறான்.
ஒரு சாலை விபத்தில் காதலி இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்போது அவளுடன் அவள் காதலித்தவனும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
பண்ணை வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும்போது துணை நடிகனின் விரலில் மோதிரம் இருந்ததற்கான அடையாளம் கண்டு அவன் ஆசிரியன் இல்லை என்று காதலி புரிந்துகொள்கிறாள். வழியெங்கும் சண்டை போட்டு வந்தவர்கள் விபத்தில் சிக்கி இறந்துபோகிறார்கள்.
தன்னுடைய கோழைத்தனத்தால் இரண்டு பேர் இறந்துபோய்விட்டார்கள் என்று ஆசிரியன் குற்றவுணர்வு அடைகிறான்.
நடந்ததை தன் தாயிடமும் துணை நடிகனின் மனைவியிடமும் சொல்லி வருந்துகிறான்.
இறந்துபோனது ஆசிரியனாகவும் அவனுடைய காதலியாகவும் உலகுக்குத் தெரியட்டும். இனி துணை நடிகனின் பெயரால் தான் உலவப் போவதாக ஆசிரியன் கூறுகிறான். தன்னுடன் இருந்துவிடுமாறு துணை நடிகனின் மனைவி கூறுகிறாள்.
அந்த வீட்டில் அவன் இருக்கும்போது, அவனைப் போலவே தான் இருப்பதாக ஒரு குரல் போனில் கூறுகிறது.
ஒருவர் போல் மற்றவர் இருப்பதும், மற்றவராய் ஒருவர் இருந்துவிடுவதும், ஒருவரே எல்லாம் என்று இருப்பதும் தவிர்க்க இயலாத தத்துவங்கள் என்று நாவல் கூறுகிறது.
வாழ்வும் வரலாறும் வேறு ஒன்றின் பதிலிகள். ஒன்று மற்றொன்றின் மாற்று. ஒன்று மற்றொன்றின் பொருள்.
ஒன்று பலவாக மாறிப் போகும் இருப்பின் பிரதியை இந்த நாவல் பதிவு செய்கிறது.
மிகவும் நுட்பான நோக்குடன் எழுதப்பட்டது இந்த நாவல்.
ஜோஸ் சரமேகோ பல நாவல்களை எழுதியிருக்கிறார். அவருடைய இந்த நாவல் குறிப்பிடத்தகுந்த நாவல் ஆகும்.
ஜோஸ் சரமேகோ, 1998ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக