புதன், 24 டிசம்பர், 2014

கவர்ச்சி ஒளிவட்டம்

பலவீனமில்லாத வாழ்க்கையை வாழ்வது எப்போதுமே பாதுகாப்பானது. ஆனால், அதற்கு எளிமையும் நேர்மையும் அவசியம். தனிப்பட்ட வாழ்க்கையில் இவற்றைக் கையாளுவது சிரமமல்ல. ஆனால், நிருவாகம் என்பது எண்ணற்றோருடைய கூட்டமைப்பு. அதில் எங்கேனும் ஓரிடத்தில் நிச்சயம் பலவீனம் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதை உணர்ந்து, அந்தப் பகுதியைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.
இரண்டு நிறுவனங்கள் ஒரே வாடிக்கையாளர்களைக் கவரும் போட்டியில் ஈடுபடும்போது மற்ற நிறுவனத்தில் எது பலவீனமானது என்பதைக் கண்டறிய வேண்டும். விலங்குகளை வீழ்த்துகிறவர்கள்கூட அவற்றின் எந்தப் பகுதியை அடித்தால் உடனே உயிர் போகும், அதிகச் சித்திரவதை இல்லாமல் அவை உயிரிழக்கும் என்பதை எதிர்பார்த்துத்தான் தங்கள் அசைவை முன்நிறுத்துகிறார்கள்.
வர்த்தகத்தில் எதிராளியின் பொருளில் எது குறைபாடு என்பதைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் வகையில் ஆய்வை நடத்தி, தங்கள் நிறுவனத்தின் பொருளை மேம்படுத்துபவர்கள் விரைவில் சந்தையைப் பிடித்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட்டில்கூட மிக நல்ல நிலம் போவதற்கு வழியில்லாமல் நடுவில் மாட்டிக்கொண்டால், அடிமாட்டு விலைக்கு விற்க நேர்வதைப் பார்க்கலாம். தொடர்ந்து தன்னைப் பலப்படுத்திக்கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.
தலைசிறந்த நிர்வாகியாக இருக்கிறவர் பேச்சில், எழுத்தில், கூட்டங்களை நடத்துவதில், உடலசைவு மொழியில், உடைகளை உடுத்துவதில், கம்பீரமாக நடப்பதில், மிடுக்காக நடந்துகொள்வதில் தன்னை அச்சு அசலாக வெற்றிபெற்றவர்களைப்போல காட்டிக்கொள்ள முனையும்போது எதிராளிக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. வெகு எளிதில் அவனால் கவர்ச்சி ஒளிவட்டத்தை உண்டுபண்ணிவிட முடிகிறது.
அதற்குப் பிறகு அவன் கீழ் பணிபுரிபவர்கள் அவன் சொன்னதற்கெல்லாம் சொக்குப்பொடி போட்டதைப்போல மயங்கிவிடுகிறார்கள். சிலருக்கு பெரிய விஷயங்களில் பலவீனம் இருக்காது. ஆனால், சின்னவற்றில் பலவீனம் இருக்கும். தன்னுடைய பலவீனத்தை நண்பர்களிடமிருந்து கேட்டறிவதும், அவற்றைக் கவனமாக தவிர்க்க முயல்வதும் உறுதியான பலன்களை அளிக்கும். அப்போது வீழ்த்த முடியாத மனிதனாக வீறுகொண்டு எழலாம். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும் கொண்டவர்கள் எந்த நேரத்திலும் நிமிர்ந்து நிற்கிறார்.
வாழ்விலும் நிர்வாகத்திலும் எதிரியின் பலவீனத்தை நோக்கியே நாம் காய் நகர்த்த வேண்டும். சிலர் புகழையே தங்கள் பலமாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதை நோக்கி குறிவைத்தால் ஆடிப்போய்விடுவார்கள். அதற்கு எந்தக் களங்கமும் விளையக்கூடாது என்பதற்காக எதையும் பறிகொடுக்கத் தயாராக இருப்பார்கள். பலவீனம் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக