வெள்ளி, 13 மே, 2016

யாருக்கு நாம் அடிமையாக வேண்டும் என்னும் தேர்தல் அல்ல இது.

இன்று, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆதரிக்கும் இந்த அரசியல்வாதிகள், முன் ஒருவரை ஒருவர் வசை பாடியவர்கள். அதுபோல், இன்று ஒருவரை ஒருவர் தாக்கும் இந்த அரசியல்வாதிகள், முன்பு ஒன்றாக இருந்தவர்கள். இவர்கள் எல்லாரும் 

சந்தர்ப்பவாதிகள். 

எரியும் கொள்ளியில், எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று சொல்ல முடியுமா? கடந்த, 1954ல் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை குறை கூறிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பேரன்கள் எல்லாம், இன்று அவர்கள் தந்தையைப் போல அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கவுன்சிலர், வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர் பதவி என்று, எல்லாவற்றிலும் அரசியல் வாரிசுகள், 'ஆக்டோபஸ்' போல வளர்ந்து விட்டனர்.இப்போது எல்லாரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். பதவி என்னும் போதை, இன்றைய அரசியல்வாதிகளை வாட்டி எடுக்கிறது. எனவே, விலை போகவும், விலைக்கு வாங்கவும் தயாராக உள்ளனர். அவ்வாறு விலை போகாத வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சொத்து சம்பாதிக்காத அரசியல்வாதியே இல்லை. படிக்காதவர் பலர் இன்று அரசியல் மூலம் கல்வித் தந்தையாக மாறிவிட்டனர். சுயநலமில்லாத அரசியல்வாதிகள் ஒரு சிலர் 
மட்டுமே. நல்லவர்களை, கண்ணியமானவர்களை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் சட்டசபையின் மாண்பு மாசுபட்டுவிடும்.கூட்டணி கட்சி வேட்பாளருக்கு, அதே கூட்டணியில் உள்ள வாக்காளர்கள் ஓட்டளிப்பரா என்று தெரியவில்லை. ஒரு கூட்டணியின் வேட்பாளரை மற்றவர்கள் விரும்புவதில்லை என்னும் நிலையில் உள்ளது கூட்டணி தர்மம்.
வரும், 2016 தமிழக சட்டசபைத் தேர்தல், தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தல் என்பதைவிட, தலைவர்கள் பலரின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக கட்டாயம் அமையும்.

தலைமையில் உள்ளவர்களில் யார் நல்லவர் என்று பாருங்கள். வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பாருங்கள். தலைமைக்காக, தவறான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டாம். நம்மிடம் 
உள்ளவர்களில் நல்லவரை தேர்வு செய்யுங்கள்.யாருக்கு நாம் அடிமையாக வேண்டும் என்னும் தேர்தல் அல்ல இது. நாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்று பார்க்கும் தேர்தல் இது. மேய்ப்பவனை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு, ஆடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆடு நனையும்போது, அழும் ஓநாய்க்கு இடம் கொடுத்து விட வேண்டாம்.
- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி 
- வழக்கறிஞர்
இ-மெயில்: asussusi@gmail.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக