ஞாயிறு, 26 ஜூன், 2016

நாளைய சமுதாயச் சிற்பிகள்




எங்கே போய்க்கொண்டிருக்கிறது நம் தமிழ்ச் சமுதாயம்? தமிழ்நாட்டில்தான் இந்த நிலைமை என்றில்லை. நாடு முழுவதுமே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கும் போது, நெஞ்சம் பதறுகிறது.

ஆக்கபூர்வமான விஷயங்களில் மக்கள் ஏன் கவனத்தைச் செலுத்துவதில்லை? கடமையைச் செய்வதில்தான் எத்தனை சோம்பேறித்தனம்? கடமையை மீறுவதற்காக லஞ்சம் வாங்கிய காலம் போய், கடமையைச் செய்வதற்கே லஞ்சம் வாங்கி, அப்படி வாங்குவதுதான் சரி; வாங்காதவன் முட்டாள் என்று ஆகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இதைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறை, இதுதான் சரியென்று எண்ணிப் பின்பற்றாது என்பது என்ன நிச்சயம்? கடமையே இந்த நிலைமையிலிருக்கும் போது, கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் எங்கே தேடுவது?

இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சுயநல நோக்கம் வளர்ந்ததற்குக் காரணம் என்ன? சமுதாயமா? பெற்றோரா? ஆசிரியர்களா? கல்விமுறையா? சினிமாவா? டிவியா? அரசியலா? இவை அனைத்தும்தான் என்றால், இவற்றைத் தண்டிப்பது யார்? இப்படிக் கேள்விகள் ஆயிரம். பதில்தான் யாருக்கும் தெரியவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மதிப்பீட்டுமுறை (Value System) எனப்படும் வாழ்க்கை நெறிகளின் வரிசைக்கிரமத்தில் ஏற்பட்ட கோளாறுதான் இவற்றிற்கெல்லாம் காரணம். இந்த value system கெட்டுப்போன(வ)தற்குத்தான் மேற்சொன்ன காரணிகள் துணை நிற்கின்றன.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! தங்கள் விருப்பு வெறுப்புக்களைத் தங்கள் குழந்தைகள் மீது திணிப்பது மற்றும் தாம் சரியென நினைக்கும் விஷயங்களைக்கூட நாலு பேர் நம்மைப் பார்த்து என்ன சொல்வார்கள் என்று துன்பகாலங்களில்கூடப் பங்கெடுத்துக் கொள்ள முன்வராத அந்த முகம் தெரியாத யாரோ நான்கு பேருக்காக ஏற்க மறுத்து மான ரோஷத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு வாழும் முதுகெலும்பற்ற பெற்றோர்! 

இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயச் சிற்பிகள் என்பதை மறந்து, வாரத்திற்கு இரண்டு மணிநேரமாவது நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையைக் காற்றில் பறக்கவிட்டு, தன்னிடம் டியூஷன் படிக்க வருபவர்களுக்கே வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் என மாணவர்களைச் சீரழித்து, வகுப்பறையில் அமர்ந்து கந்துவட்டிக் கணக்குப் பார்க்கும் பொறுப்பில்லாத்தனத்தின் மொத்த உருவமாய்த் திகழும் ஆசிரியர்கள்!

மதிப்பெண் என்ற ஒரு தவறான அளவுகோலை மட்டுமே கொண்டு மாணவர்களின் திறமையை எடைபோட்டு, கல்விக்கூடங்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாக மாற்றிய நமது கல்விமுறை!

ஈறைப் பேணென்றும் பேணைப் பெருமாளென்றும் சொல்லி விட்டு, நாட்டில் நடக்காததையா நாங்கள் படமாக எடுக்கிறோம் எனத் தவறையே நியாயப்படுத்தும் தரங்கெட்ட சினிமாக்கள்!

சினிமாவாவது நீங்கள் திரையரங்குக்குச் சென்றால்தான் உங்களைக் கெடுக்கும். ஆனால் நாங்கள் உங்கள் வரவேற்பறைக்கே வந்து உங்களுக்குச் சிரமமின்றி உங்கள் சிந்தனையை மழுங்கடிக்கிறோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மீடியாக்கள்!

திருடர்களுக்கும் ரவுடிகளுக்கும் அங்கீகாரம் கொடுத்து, அவர்கள் குறைகளைச் சாதனைகள் போல எடுத்துக் கூறி மக்களை மதிமயக்கி, பணபலம் மற்றும் ஆள்பலத்தின் மூலம் அரசு இயந்திரத்தையும் அதிகாரிகளையும் தங்கள் விருப்பம் போல் ஆட்டி வைக்கும் அரசியல்வாதிகள்!

சமுதாயம் என்று தனியாக ஒன்று இருக்கிறதா என்ன? மேற்சொன்ன அனைத்தும் சேர்ந்ததுதானே அது? பிறகெப்படி இந்தப் பலமுனைத் தாக்குதலில் சிக்குண்டு தவிக்கும் குழந்தையினால் மன ஆரோக்கியத்துடன் வளர முடியும்? தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் சரிதான் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றதே இந்தச் சமுதாயம்! அதை அந்தக் குழந்தை எதிர்த்துப் போராட வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதுதான் எப்படி நியாயமாகும்?

ஆனாலும், இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்துதானே சிப்பிக்குள் முத்தென இராமானுஜரும் பாரதியும் பெரியாரும் காமராஜரும் அப்துல்கலாமும் வந்தார்கள்? ஆகவே, இந்தப் பலமுனைத் தாக்குதல்களைச் சமாளிக்க நம்மிடம் ஆயுதம் ஒன்று இருக்கிறது என்பது புலனாகின்றதன்றோ? அது என்ன?
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் 
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் 
இன்னாது என்றாலுமே இலமே; 'மின்னொடு 
வானம் தண்துளி தலைஇ, ஆறாது 
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே;
(புறநானூறு - பாடல்:192)

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தப் பாடல் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் கூறு என்ன? பாடலின் பொருள் ஒருபுறம் இருக்கட்டும். அதில் சொல்லப்பட்டிருக்கும் அன்று வாழ்ந்த தமிழ்க்குடிக்கு இருந்த சிந்தனை முதிர்ச்சியைப் பாருங்கள். இதுபோன்றவற்றைப் படித்தால்தானே அதைப் புரிந்துகொள்ள முடியும்? இதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'அதெல்லாம் அந்தக் காலத்தில் அரசர்களைப் புகழ்ந்து பரிசில் பெறுவதற்காகப் புனைந்துரைக்கப்பட்ட கற்பனைகள்' என்றார். அப்படியானால், சங்க இலக்கியம் முழுவதுமே பாராட்டுப் பத்திரங்களாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அகத்திணைப் பாடல்கள் இயற்றப்பட்டதன் நோக்கம் என்ன? அப்படியல்ல. அன்றைய வாழ்க்கை முறைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியம் மட்டுமல்ல. சங்கம் மருவிய காலத்தில் வந்த இலக்கியங்களும், இடைக்கால மற்றும் இக்கால இலக்கியங்களும் இதைத்தான் உணர்த்துகின்றன.

இந்தப் பதிவுகள்தானே நாம் யார் என்று நம்மை நமக்கு அடையாளம் காட்டி, சரியான ஒரு Value System -ஐ உருவாக்கிக் கொள்ள உதவும் சாதனங்கள்? ஆகவே, படிக்கும் பழக்கம்தான் மேற்சொன்ன பலமுனைத் தாக்குதலுக்கு எதிராக, சிந்தனை முதிர்ச்சி என்ற கேடயந்தாங்கி, புரட்சிகரக் கருத்துக்கள் என்ற வாள்சுழற்ற உதவுவது.

மெகா சீரியலோ அல்லது கிரிக்கெட் மேட்சோ பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. படிப்பதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். மாணவப்பருவத்திலிருந்தே இந்தப் படிக்கும் பழக்கம் ஆரம்பித்துவிட வேண்டும். அப்போதுதான் பெற்றோர் சொல்லித் தராவிட்டாலும் நம்மைச் சுற்றி நடக்கும் நல்லது கெட்டது தெரிந்து கொள்ள முடியும். கதைப்புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்துவிட்டு, தேர்வில் தவறிவிட்டால் என்ன ஆவது என்ற தேவையற்ற பயம் வேண்டாம். தேர்வில் தோல்வியடைவதற்கு படிக்கும் பழக்கம் எந்தவிதத்திலும் காரணமாகாது. மாறாக, விடைகளை இன்னும் விரிவாக, நிறைய மேற்கோள்கள் காட்டி எழுத உதவும். வெறும் பாடப்புத்தகத்தை மட்டும் மனனம் செய்து, தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்குவதில் ஒரு பயனுமில்லை.

'என் பையன் ஆங்கில மீடியத்தில் படிக்கிறான். தமிழே படிக்க வரமாட்டேனென்கிறது'. இது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் கவலையாக இருக்கிறது. ஆங்கில வழிக்கல்வி பயில வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம் எனப் பெற்றோர்கள் நினைக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரப்படுவதேயில்லை. வகுப்பறைகளில் தமிழில் பேசினால் அபராதம் கட்டச் சொல்லும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கல்லூரிகள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. நான் படித்த கல்லூரியிலும் அப்படித்தான் இருந்தது. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். முதலில் படிக்கும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்துங்கள். பிறகு பாருங்கள். ஆங்கில மீடியமாக இருந்தாலென்ன? ஹிந்தி மீடியமாக இருந்தாலென்ன? நல்ல தமிழ் நாவில் புரளும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் பேசிவரும் கலைஞரால், ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது ஒரு புதுக்கருத்தை மேற்கோள் காட்டிப் பேச முடிவது, தினமும் படிப்பதற்கென இரண்டு மணி நேரங்களை ஒதுக்குவதால்தான். இல்லாவிட்டால், பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்தவரால் சங்கத்தமிழ் மற்றும் குறளோவியத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தொல்காப்பியப் பூங்காவில் உலா வர முடியுமா?

எடுத்த உடனேயே எட்டுத்தொகையையும் பத்துப்பாட்டையும் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆரம்பத்தில் குமுதமோ விகடனோ மாத நாவலோ கூடப் படிக்கலாம். ஆனால் தினமும் படிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இப்படித் தினமும் படிக்கும்போது, காலப்போக்கில் அல்லவை விடுத்து, நல்லவற்றை மனம் தானே நாட ஆரம்பித்து விடும்.

எனக்குப் போரடித்தால் சிட்னி ஷெல்டன் அல்லது ராபின்குக் தான் படிப்பேன் என்று சில ஜந்துக்கள் பிதற்றுவதைக் காணலாம். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று வள்ளுவர் சொன்னது இவர்களுக்காகத்தான். ஆங்கில நாவல்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஷெல்லியையும் கீட்ஸையும் சிலாகிக்கும் அதே வேளையில், பாரதியையும் கம்பரையும் சிறிதேனும் கண்டுகொள்ளுங்கள்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு 'பொன்னியின் செல்வன்' ஒரு சாதாரண சரித்திர நாவல் போலத் தோன்றினாலும், அதைப் படித்தவர்களுக்குள் அது ஏற்படுத்திய மாற்றம் வார்த்தைகளில் வடிக்க இயலாதது. பலபேருடைய வாழ்க்கையை நல்வழியில் திசைமாற்றிய பெருமை அதற்கு உண்டு. இந்த www.varalaaru.com ஆசிரியர் குழுவிலுள்ள நாங்கள் அனைவரும் பொன்னியின் செல்வனைப் படித்தே இருக்காவிட்டால், இந்த இணையத்தளத்தை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இப்போது, மக்களிடையே படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. இதற்குச் சான்றாக, சென்ற ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைக் கூறுகின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில், பல கோடிகளுக்குப் புத்தகங்கள் விற்பனையான போதிலும், அதிக அளவில் விற்றவை சமையல், ஜோதிடம், ஆன்மீகம், வாஸ்து, செல்வந்தராவது எப்படி? போன்ற புத்தகங்கள்தான்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஏங்கும் மக்களின் நிலையை மாற்றி, தெளிவும் தெரியாமல் முடிவும் புரியாமல் மயங்கும் எதிர்காலத்தை வளமாக்க இந்தப் படிக்கும் பழக்கம் உதவும் என்பதில் சந்தேகமில்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக