வெள்ளி, 11 ஏப்ரல், 2014

மாயா இன மக்களும் உலக அழிவும்-6

இது பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் 'கிறிஸ்டல்' என்பது பற்றி நான் முதலில் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டும். கிறிஸ்டல் என்பது சாதாரண கண்ணாடியை விட வலிமை வாய்ந்த, கடினமான ஒரு மூலப் பொருள். கண்ணாடியிலும் கிறிஸ்டல் உருவாக்கப்படும் என்றாலும், 'குவார்ட்ஸ்' (Quartz) போன்ற பலம் வாய்ந்த மூலப் பொருள்களினாலும் அது அதிகம் உருவாக்கப்படுகிறது. இந்த வகைக் கிறிஸ்டலை வெட்டுவது என்பது, இன்றைய காலத்திலேயே, மிகக் கடினமானது. வைரம் போன்றவறால்தான் அதை வெட்ட முடியும். அல்லது நவீன 'லேசர்' (Laser) தொழில் நுட்பத்தினால் வெட்டலாம். 
சரி, மீண்டும் எங்கள் கிறிஸ்டல் மண்டையோட்டுக்கு வருவோமா! 
'மிச்செல் ஹெட்ஜஸ்' (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர். அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னா ஹெட்ஜெஸ் (Anna Hedges).  1924ம் ஆண்டு மிச்செல், மாயா இனத்தவர் வாழ்ந்த இடங்களை ஆராய்வதற்காக, லுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.  
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் இது……! 
 
அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம் பழமையானது தெரியுமா…? 5000  வருசங்களுக்கு மேல். அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு.  இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு மிக அழுத்தமாக, அழகாக, வட்டவடிவமாக தேய்க்கப்பட்டு, பளபளப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில், ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும். அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு. 
 
இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த 'ஹூவ்லெட் பக்கார்ட்' (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க  முடியாதபடி,  அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது  என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.  
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில், அவ்வளவு வலிமையான ஒரு பதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்? இது சாத்தியமான ஒன்றுதானா? இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர், இது லேசர் தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலை. லேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்தது என்றால் நீங்களே சிரிப்பீர்கள். அப்படி என்றால் இது எப்படி? இன்றுள்ள மனிதனால் கூட, நவீன கருவிகள் இல்லாமல்  இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்க முடியாது. 
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகள் பற்றிய செய்தி இவ்வளவுதானா என்று கேட்டால், நான் சொல்லும் பதிலால் நீங்கள் அதிர்ந்தே போய் விடுவீர்கள். அவ்வளவு மர்மங்களை அடக்கிருக்கிறது இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு கிடைத்ததற்கு அப்புறம், மாயன் சரித்திரத்தை இந்தத் திசையில் ஆராய்ந்தால் கொட்டுகிற செய்திகள் அனைத்துமே நாம் சிந்திக்க முடியாதவையாக இருக்கின்றன. இது பற்றி மேலும் சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் என்னும் அளவுக்கு மிகப்பெரிய செய்திகளை அடக்கியது இந்த மண்டை ஓடு.   
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓட்டை அடிப்படையாக வைத்து, 2008ம் ஆண்டு 'இன்டியானா ஜோன்ஸ் அன்ட் த கிங்டொம் ஆஃப் த கிறிஸ்டல் ஸ்கல்' (Indiana Jones and the Kingdom of the Crystal Skull) என்னும் படம் வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹரிசன் போர்ட் (Harrision Ford) நடித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg). 
 
முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தில் வரும் பாத்திரம் என்பது உண்மையாகவே இருந்த ஒரு பாத்திரம். அவர்தான் மேலே நான் சொல்லிய மிச்செல் ஹெட்ஜெஸ். 
 
இவ்வளவு ஆச்சரியம் வாய்ந்த மண்டை ஓடு மாயாக்களால் எப்படிச் சாத்தியமானது….? 
குவார்ட்ஸ் என்னும் கனிமத்தை எப்படி மாயாக்கள் எடுத்தார்கள்…..? 
அதை எப்படி மண்டை ஓடு போலச் செதுக்கினார்கள்…..? 
மாயாக்கள் என்ன, மனிதனாலேயே சாத்தியமில்லாத ஒன்றல்லவா இது! 
அப்படிப்பட்ட மண்டை ஓடு ஒன்றே ஒன்றுதானா....? 
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நடுவில், அன்னாவின் கிறிஸ்டல் மண்டை ஓட்டின் பின்னர், பலர் ஆராய்ச்சிக்குக் கிளம்பினார்கள். மேலதிக ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இது போன்ற மண்டை ஓடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரிந்தது. மொத்தமாக எட்டு கிரிஸ்டல் மண்டை ஓடுகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன. 
 அந்த எட்டு மண்டையோடுகளில் பெரும்பான்மையானவை, குவார்ட்ஸ் என்னும் கனிமத்தினாலும், சில 'அமெதிஸ்ட்' (Amethyst) என்னும் ஆபரணங்கள் செய்யும் ஒரு வகை இரத்தினக் கல்லாலும் செய்யப்பட்டவையுமாகும். 
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு கிறிஸ்டல் மண்டை ஓடுகளும் இவைதான். 
 
மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோது, இப்படிப்பட்ட மண்டை ஓடுகள் மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொண்டார்கள். அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்தக் காரணம் என்ன….? மிகுதி ஐந்து மண்டை ஓடுகளும் எங்கே போயின? அவை கிடைத்தால் எமக்கு ஏதாவது நன்மைகள் உண்டா?





மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாக பதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர். அந்தக் காரணம்  என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு  நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டு,  மீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன். 
இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவுவாதி அல்லாதவர்கள் என்னும் இரண்டு வகையாகப் பிரிந்தே வாழ்கிறார்கள்.  இங்கு பகுத்தறிவு என்று நான் சொல்வது நாத்திகத்தை அல்ல. பலர் பகுத்தறிவையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கித் தமக்குள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.  பகுத்தறிவின் ஒரு அங்கமாகத்தான் நாத்திகம் இருக்கிறது. ஒரு பகுத்தறிவுவாதி, நாத்திகராக இருப்பார். ஆனால் ஒரு நாத்திகர் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பையும் தாண்டி, பல மூடநம்பிக்கைகளையும் மறுக்கிறது. 
பகுத்தறிவுவாதி, பகுத்தறிவுவாதி அல்லாதவர் ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, அடுத்தவரை ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். தான் நினைப்பது மட்டும்தான் சரி என்னும் நினைப்பால் இருவருமே அடுத்தவனை அலட்சியப் படுத்துகின்றனர்.  தவறாக மதிப்பிடுகின்றனர். ஆனால் கோட்பாட்டு ரீதியில், இந்த இரண்டுவிதமான மனிதர்களுக்குமிடையில், நூலிழை போல இன்னும் ஒன்றும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுதான் 'மிஸ்டரி' (Mystery) என்று சொல்லப்படும் 'விடை தெரியா விந்தைகள்'. விடை தெரியாத பல விந்தைகள் இன்னும் உலகில் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கான விடையின்றி, காரணங்களே தெரியாமல் பல விசயங்களும், மர்மங்களும் எம்மிடையே இருந்து வருகின்றன.
இன்று எமக்கு இருக்கும் நவீன அறிவை வைத்துக் கொண்டும் கூட, அவற்றின் காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணங்கள் தெரியப்படுத்தப்படாத காரியங்களை அறிவியல் முழுமையான உண்மையாக ஏற்றுக் கொள்வது இல்லை. ஆகவே அந்தக் காரணங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அதை மிஸ்டரி என்னும் ஒன்றுக்குள் அடக்கி, அதன் விளக்கத்தை அறிவியல் ஆராய்ந்து கொண்டே இருக்கும். 
ஆனாலும் எமது அறிவியலின் ஆராய்ச்சித் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ஒரு குறித்த அளவுக்கு மேல், பலவற்றை அதனால் ஆராய முடியாமல் போய் விடுகிறது. அவற்றிற்கான விளக்கத்தை அறிவியல் கொடுக்காத பட்சத்தில், மக்களே அதற்கான பல விளக்கங்களை, கட்டுக் கதைகளாகக் கட்டிவிடத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மிஞ்சுவது குழப்பம் மட்டும்தான். எனவே, பல விந்தைக்குரிய விசயங்கள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரே, அரசுகளால் மறைத்து வைக்கப்படுகின்றது. 
இப்படி மறைத்து வைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கென்றே, அமெரிக்காவில் ‘ஏரியா 51' (Area 51) என்ற ஒரு இடத்தை மிகப் பாதுகாப்பாக அமைத்து வைத்திருக்கிறார்கள். 
 
மேலே இருப்பது சாட்டிலைட் மூலமாக 'ஏரியா 51' இன் காட்சிப் படம். இந்த 'ஏரியா 51’ அமெரிக்காவில் உள்ள நிவாடாவில் (Nevada) அமைந்திருக்கிறது. குறிப்பாக ஏரியா 51 இல் பறக்கும் தட்டுகள் (Flying saucer), வேற்றுக் கிரகவாசிகள் (Alien) ஆகியவற்றை ஆராய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விண்வெளியில் இருந்து வந்த ஒரு பறக்கும் தட்டையும், விண்வெளி உயிரினம் ஒன்றையும் ஏரியா 51இல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்னும் வதந்தி பலமாகவே இருக்கிறது. ஆனால் அங்கிருந்து இரகசியமாக கசிந்து வெளிவரும் தகவல்களும், படங்களும் அவை வதந்திதானா என்றே எம்மைச் சந்தேகப்பட வைக்கிறது. 
 
ஏரியா 51 இல் எடுத்த இந்தப் படத்தில் வட்டமாக இருப்பது ஏதோ கட்டடம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதை நன்றாகப் பாருங்கள். அது பறக்கும் தட்டு போல இருக்கிறதா? இந்தப் படம் மட்டுமில்லை,  'அலன் லூயிஸ்' (Alen Lewis) என்பரால் வெளிக்கொண்டு வரப்பட்ட இன்னுமொரு படமும், எம்மை அதிர வைக்கும் தன்மையை உடையது. 
 
தன்னுடைய அப்பா ஏரியா 51இல் வேலை செய்ததை அறியாத ஒரு மகன் அவர் இறந்ததும் கண்டெடுத்த படத்துடன் அவர் கொடுத்த குறிப்பு இது. 
"Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge..." 
இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது? 
இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது.  இந்த ஏரியா 51 ஐ, 'இன்டிபென்டன்ஸ் டே' (Independence Day) என்னும் 'வில் ஸ்மித்' (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னதுதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக