சனி, 19 ஏப்ரல், 2014

மாயா இன மக்களும் உலக அழிவும்-7




இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது.  விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக 'ஏரியா 51' உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.  
இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும்,  மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள். 
இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா.....….? 
 
கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….? 
 
மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்? 
அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற  காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு. 
உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான். உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன. 
சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம்  எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன. 
 
 

அது மட்டுமல்ல,  மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன? 
 
இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. 
செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை.......! 
'பால் வெளி மண்டலம்' எனச் சொல்லப்படும் 'மில்க்கி வேயில்' (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன. இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த 'இண்டியானா ஜோன்ஸ்' படம் எடுத்திருக்கிறார்கள். 
‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால்,  ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும். 
இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Lines). 
நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது.



 ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களா? இல்லையா? என்னும் இரண்டு விதமான கருத்துகளில் ஆய்வாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும், அப்படி யாரும் பூமிக்கு வரவில்லை என்பதை மையமாக வைத்தே நாம் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதாரமில்லாமல் எதையும் ஒத்துக் கொள்ளாத அறிவியல், இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பூமிக்கு ஏலியன்கள் வரவில்லை என்றுதான் அறிவியல் சொல்லிக் கொண்டிருக்கிறதே ஒழிய, ஏலியன்களே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லவில்லை.
கலிபோர்னியா மாநிலத்தில், 42 அதியுயர் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் அமைக்கப்பட்டு, 'பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் இருக்கின்றனவா? அவை பேசும் குரல்கள் எமக்குக் கேட்குமா?' எனத் தினம் தினம் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். இதற்கென பல மில்லியன் டாலர் செலவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டவர் வேறு யாருமில்லை. உங்கள் எல்லாருக்குமே தெரிந்த மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குனரான பவுல் அலென் (Paul Allen) தான் அவர். இதனாலேயே இந்த திட்டம் 'அலென் டெலெஸ்கோப் அர்ரே (Allen Telescope Array) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  ஆனால் பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள் பெரும்பாலும் சுட்டிக் காட்டுவது, 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Liines) என்பதைத்தான். தமிழில் அதை நாஸ்கா கோடுகள் என்று சொல்வோமா?
  அது என்ன நாஸ்கா கோடுகள்?  இது பற்றி கொஞ்சம் பார்க்கலாம்………..!
  தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca) என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன. கோடுகள், சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று  நினைத்து விடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லாமே மனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500 சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள். 
 
இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது. அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன.
  இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்கள்.
  இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும்,  நூற்றுக்கும் மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள்  285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது.  அதாவது கால் கிலோமீற்றர் நீளம். அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக