புதன், 8 ஆகஸ்ட், 2012

மியன்மாரில்(மறித்துக் கொண்டிருக்கும் மனசாட்சி)


மறித்துக் கொண்டிருக்கும் மனசாட்சி


மியன்மாரில் (பர்மா) கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஏன் பெறவில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே உள்ளது.

இதுவரை சுமார் 20,000 முஸ்லிம்கள் -குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்டு- பதறப் பதறப் படு கொலைசெய்யப்பட்டுள்ளனர். உண்மையில்,கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இடம்பெயர்ந்தோர் தொகை என்பவற்றை துல்லியமாக அறிய முடியாத நிலையே தொடர்கின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ ஆட்சி தொடரும் மியன்மாரில், வெளிநாட்டு ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் பிடி மிக இறுக்கமாக உள்ளதால் களநிலவரங்களை அறிய முடியாதுள்ளது. எனினும், இவ்வளவு கொடூரமான இனச் சுத்திகரிப்பு ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடைபெற்று வருகின்ற போதும், நியூயோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட், பி.பி.சி. அல்லது ரொய்டரில் இந்தச் செய்திகள் எதுவும் பிரதானப் படுத்தப்படவில்லை. அறபு இஸ்லாமிய ஊடகங்களிலும் மியன்மார் முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் போதியளவு வெளியாகவில்லை.
கடந்த ஜூன் 03 இல் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தொடங்கிய வன்முறைகள் இன்னும் ஓயவில்லை. மியன்மார் இராணுவ அதிகாரிகளே முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு நேரடியாகத் துணை போகின்றனர்.
"உலகிலேயே மிகவும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சிறுபான்மைச் சமூகம் மியன்மார் முஸ்லிம்களே" என்று அறிக்கை விட்டதோடு ஐ.நா. அமைதி காக்கின்றது. மியன்மாரில் நடை பெற்றுவரும் மயிர் கூச்செறியும் குரூரமான இனப்படுகொலை மனித உரிமை பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மியன்மார் முஸ்லிம்கள் பற்றிய ஓர் தெளிவான வரைபடத்தைப் புரிந்துகொள்ளாமல், இன்று நடைபெறும் வன்முறைகளைப் புரிந்துகொள்ள முடியாது.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் பர்மாவில் இஸ்லாம் அறிமுகமாகியது. இந்தியா, சீனா,பங்களாதேஷ், தாய்லாந்து, மலேஷியா ஆகிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள்10 ஆம் நூற்றாண்டில் பெருமளவு பர்மாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களின் கூட்டுக் கலவையே இன்றைய மியன்மார் முஸ்லிம் சமூகம்.
சுமார் 360 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்களைக் கொண்டுள்ள பர்மிய சமூகத்தில், மூன்று பிரதான மாகாணங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றனர். தெற்கில் பான்தாய் எனப்படும் இனக்குழுமத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பூர்வீக பர்மிய முஸ்லிம்கள் எனக் கருதப்படுகின்றனர்.
தன்னசெரில் மாகாணத்தில் பஷூஷ் எனப்படும் குழுமத்தினர் வாழ்கின்றனர். இவர்கள் சீன மற்றும் தாய்லாந்து பூர்வீகத்தைக் கொண்டுள்ளனர். மேற்கு மாகாணமான அரகானில் வாழ்கின்ற ரோஹிங்யோ எனப்படும் முஸ்லிம்கள் மீதே தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து மியன்மாருக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்கள் ஆவர். இவர்களில் சிறு தொகையினர் பங்களாதேஷை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில், மொத்தமாக 60மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 5 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என மியன்மார் அரசாங்க தொகை மதிப்பு தெரிவிக்கின்றது. எனினும், ரோஹிங்யா முஸ்லிம்கள் இம்மதிப்பீட்டில் உள்ளடக்கப்படவில்லை. அவர்கள் மியன்மாரில் வாழும் வெளி நாட்டவர்கள் என்றே அரசாங்கம் கூறிவருகின்றது.
இதன் விளைவாக ஒரு நாட்டின் சராசரிப் பிரஜைக்கு உள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இவர்கள், அடிமட்ட தொழில்களை மாத்திரமே செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர்.
முஸ்லிம் சிறுவர்களும் கடின உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இவர்களின் சொத்துக்கள் அவ்வப்போது வெவ்வேறு பெயர்களில் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவர்கள் வாழும் நிலங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதோடு,இது வரை இவர்களுக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை.
மணம் முடிப்பதற்கு அரசாங்க அனுமதி கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அவ்வாறு அரச அனுமதி பெற்று நடைபெறும் திருமணங்களினூடாக ஆகக் கூடியது இரண்டு பிள்ளைகளே பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் இறுக்கமாக நடைமுறையில் உள்ளது.

பௌத்த பெண் ஒருவரை வல்லுறவுக்கு உள்ளாக்கினர் என்று குற்றம் சுமத்தப்பட்டே பஸ்ஸில் சென்ற 11 பேர் இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதோடு, சமீபத்திய வன்முறைகள் தொடங்கின. ஆயினும்,முஸ்லிம்கள் மீதான மியன்மாரின் அரச பயங்கரவாதத்திற்கு கடந்த 1000 ஆண்டுகால வரலாறு சாட்சியாக உள்ளது.
Glass Palace Chronicle எனப்படும் மியன்மாரின் பூர்வீக வரலாற்று நூலின்படி1050 களிலேயே செறிவான முஸ்லிம் குடியிருப்புகள் மியன்மாரில் இருந்தன. இந்திய பூர்வீக முஸ்லிம்கள் மீதான இத்தகைய இனப் பாகுபாட்டிற்கும் படுகொலைக்கும் காரணம் என்ன என்பது பற்றி பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மொகலாய மன்னர் ஷாஜஹானின் இரண்டாவது மகன் ஷாஹ் சுஜா என்பவர் ஒரு கட்டத்தில் மியன்மாருக்குக் குடிபெயர்ந்தார். மிகுந்த சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான அவரை அந்நாட்டில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்த சந்தாது தாமா எனும் மன்னன் அவரது சொத்துக்களையும் பெண் பிள்ளைகளையும் தனக்கு வழங்குமாறு வேண்டியதாகவும் சுஜா அதற்கு மறுப்புத் தெரிவித்தபோது பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பட்டினியால் கொல்லப்பட்டதோடு,இந்தியாவிலிருந்து வரும் முஸ்லிம்கள் மியன்மாரில் குடியேறாதவாறு தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் வந்த பய்யின் நுஆன், ஆடு, கோழி போன்ற இறைச்சி வகையினை முஸ்லிம்கள் ஹலாலான முறையில் உண்பதைத் தடைசெய்தான். இவனது ஆட்சியில் சகிப்புத் தன்மை மண்ணளவும் இருக்கவில்லை. பலர் பலாத்காரமாக பௌத்தத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். 1750இல் அரியணை ஏறிய அலோங்பாயாவின் ஆட்சியிலும் முஸ்லிம்கள் கடும் சோதனைகளை எதிர் கொண்டனர்.
1782 இல் அரியணை ஏறிய போ தௌபாயா மன்னனின் ஆட்சியில் முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை உண்ணுமாறு வற்புறுத்தப்பட்டனர். மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். ரங் கூனில் நீதிபதியாக இருந்த மௌரிஸ் கொலிஸ் எனும் ஆங்கிலேயர் இது குறித்து பதிவுசெய்துள்ளார். பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுப் பகைமையும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு பின்னணியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
1930 களில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு கலவரங்கள் நடந்தன. 1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்த மியன்மாரில் 1976, 1991, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளும் வன்முறைகளும் மிகவும் குரூரமானவை. 1978 இல் நடைபெற்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மியன்மாரை விட்டுத் தப்பியோடினர்.
தற்போது, அரகான் மாகாணத்தில் 800,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் சுமார் 300,000 பேர் பங்களாதேஷுக்கும் 24,000 பேர் மலேசியாவுக்கும் அகதிகளாக வெளியேறிச் சென்றுள்ளனர். கடல் மார்க்கமாக வெளியேறிச் செல்லும் அகதிகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதென்று மனித உரிமை நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் வாழும் முஸ்லிம்கள் மீதான இத்தகைய இனச் சுத்திகரிப்பும் படுகொலையும் நன்கு திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன என்பதை சுதந்திரத்திற்குப் பிந்திய 6தசாப்தங்களும் தெளிவாக உணர்த்துகின்றன. தற்போதைய வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதோடு, முஸ்லிம்களுக்குச் சொந்தமான இலட்சக்கணக்கான வீடு தீக்கிரையாக் கப்பட்டுள்ளன. பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இவ்வளவு கொடூரமான வன்முறைகளும் பயங்கரமும் கட்டவிழ்க்கப்படுகின்ற நிலையில்,சர்வதேச சமூகம் காத்து வரும் மௌனம் பேரதிர்ச்சியைத் தருகின்றது. மனித உரிமை நிறுவனங்களும் உருப்படியான வேலைத்திட்டம் எதனையும் மேற்கொள்ளவில்லை. மியன்மார் அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தமும் இதுவரை இடம்பெறாமை குறித்து கவலை வெளியிடப்படுகின்றது.
சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆயுததாரிகளாலும் வன்முறையாளர்களாலும் முற்றுகையிடப்பட்டு, மரண அச்சத்தில் உரைந்து போயுள்ள நிலையில், 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூகி கூட இவ்வன்முறைகள் குறித்து ஒரு வார்த்தையேனும் பேசாமல் இருப்பது அவரது ஜனநாயக நிலைப்பாடு குறித்த ஐயத்தை எழுப்புகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி அதிகாரத்திற்கு வந்த இராணுவ இயந்திரத்தின் கீழ் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீரில் இந்தியா கைக்கொள்ளும் அதே கபடத்தனமான போக்கையே மியன்மாரில் இராணுவக் குண்டர்கள் கைக்கொண்டு வருகின்றனர். மேலைய நாடுகளின் ஊடகங்களை மட்டுமல்ல, அவர்களது மனச்சாட்சியையேனும் இன்னும் இந்நிகழ்வுகள் உலுப்ப வில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே எழுகின்றது.
மியன்மாரின் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள இனச்சுத்திகரிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமாயின், ஐ.நா. அதில் தீவிரமாக தலையீடு செய்ய வேண்டியுள்ளது. அறபு நாடுகளும் இதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டியுள்ளது. நீடித்த மௌனம் ஒட்டுமொத்த அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை மனித உரிமை நிறுவனங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றாந்தாய்

மன்னிப்புன்னு கேக்ககூட
எனக்கிங்க தகுதி இல்ல...!!

ஐயா! முத்துசாமி..
நீதான் என் குலசாமி..
நான் விழுந்து கும்பிட,
எங்கே உன் கால காமி..!
நீ என்னய ஆத்தா-னு அழைச்சிருக்கே...
அதுக்கே உன்ன அறைஞ்சிருக்கேன்..!
மூத்தவ பெத்தவனே..
மாற்றாந்தாய் நான் உனக்கு..,
உன் ஆத்தா இருக்கையிலே - உன்
அப்பன் என்ன சேத்துக்கிட்டான் ..!!
அந்த மவராசி செத்தபின்னே,
இந்த வீட்ட எனக்கு எழுதி வச்சான்..
உன்ன பெத்தவ செத்துபோயி
ஏழெட்டு வருசமாச்சி..
இடைப்பட்ட வருசத்துல - நான்
உனக்கு வெந்த சோத்த போடலியே.!
களி கிண்டி கொடுத்திருக்கேன்..
கண் கசங்காம தின்னிருக்கே..!
பழைய சோத்த போட்டிருக்கேன்,
பணிவாத்தான் இருந்திருக்கே..!!
உன் வயசுலத்தான்
என் வயித்து புள்ள இருக்கான்..
அவனைத்தான் பொத்தி பொத்தி வளத்திருந்தேன் ,
ராசாத்தி ராசாவா நெனைச்சிருந்தேன்..
மூத்தவ தான் பெத்ததுன்னு - உன்ன
கடுகு போல பொறிஞ்சிருக்கேன்...
கருமிளகாவா எரிஞ்சிருக்கேன்..!
அனாதையா நெனச்சிருக்கேன் - ஒரு
ஆத்தாவா பாத்ததில்ல...!!
ஆடு மாடு மேய்க்கச்சொல்லி
காடு கழனி அனுப்பிருக்கேன்..
விறகு பொறுக்கி வரச்சொல்லி
மலையேத்தி விட்டுருக்கேன்...!
இவ்வளவும் செஞ்ச பின்னும்
பள்ளிக்கூடம் போய்வருவ..!!
இந்த வருஷம் நிறுத்திரலாம்,
இந்த வருஷம் நிறுத்திரலாம்னு
எப்போதும் நெனச்சிருக்கேன்..
பத்தாம் கிளாஸ் பரிட்சையில
நீ பள்ளியில முதலுன்னு
வாத்தி வந்து சொல்லி போக..,
படிக்கத்தான் வெப்போம்னு - உன்
அப்பன் வந்து சண்ட போட்டான்..!
அவனையுந்தன் சரிக்கட்டி
உன் மேற்படிப்ப நிறுத்தி வச்சேன்..!!
நான் பெத்த என் புள்ளைய..
பட்டணம் போயி படிக்கவச்சேன்..!
படிப்பத்தான் முடிச்ச புள்ள
பாவியாத்தான் திரும்ப வந்தான்..!
பிஞ்சியிலே பழுத்திருக்கான்
குடி கஞ்சா பழகிருக்கான்..
குடிக்கத்தான் காசு கேட்டு
குத்துவிளக்க வித்துபுட்டான்..!
இவன் போக்க என்ன சொல்ல
சரிக்கட்ட வேணுமின்னு,
இன்னைக்கு நான் கேக்கயிலே..
அம்மிக்கல்ல தூக்கியாந்து - என்
மண்டையிலே போட்டுபுட்டான்..
ரத்தம் போயி வாசலிலே..
குத்துயிரா கெடந்திருந்தேன்..
சித்தம் கலங்கி போயிருந்தேன்..!
வண்டி வச்சி நீதானே..
கட்டு போட கூட்டிவந்த..
ரத்தம் அதிகம் போச்சுதுன்னு
மருத்துவச்சி சொல்லி போக
நான் தாரேன் ரத்தமின்னு
நீதானே முன்ன வந்த...
மவராசி பெத்தவனே..!
நீதாண்டா என் புள்ள.!!
மன்னிப்புன்னு கேக்ககூட
எனக்கிங்க தகுதி இல்ல...!!
ஐயா முத்துசாமி,
நீதான் என் குலசாமி!!
நான் விழுந்து கும்பிடனும்,
எங்கே உன் காலக்காமி...!!!

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை

படித்த கவிதை இது...
போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!
சோர்ந்து விடாதே! இதுதானா வாழ்க்கை என்று கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே!
இல்லையென்பார், இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார் இதுதான் முடியும் என்பாய்!
மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!
கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பான்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பான்!
 நாம் இழைக்கும் தவறுகளிலே கதைப்
 பேசி பிழைக்கும் கூட்டங்கள்
இந்த நயவஞ்சக நாக்கினைக் கண்டு; கதற வேண்டாம்
 -உன்மனம் பதற வேண்டாம்!
வீணாய் ஒலித்துக்கொண்டிருக்கும் ஓநாய்களின் ஒப்பாரி சத்தமிது.. தானாய் குறைந்து விடும்; ஒரு நாள் காணாமலே கறைந்து விடும்! கருணையற்ற கூட்டம் காணும்படி, கண்ணீரை மட்டும் சிந்தி விடாதே! இவர்கள் -உன் விழி நீரிலே விளையாடும் விந்தை மனிதர்கள் -உன் கண்ணீரிலே கவிபாடும் கந்தை மனிதர்கள்! வில்லில் பூட்டின அம்புக்கும், வீணர்களின் நாவிலே மாட்டின வார்த்தைகளுக்கும், அதிக வித்தியாசமில்லை!! இரண்டுமே, காயப்படுத்திவிட தயாராய்.... அம்பின் கூர்மையும் மழுங்கி விடலாம்; வம்பளக்கும் அவர்களின் நாவுகளோ ஒருநாளும் மழுங்கி விடாது! புறம் கூறிடும் வஞ்சக கூட்டத்தின்; நிறம் மாறிடும் நாட்கள் வெகு தொலைவில் அல்ல தோழா! நன்றி கெட்ட மனிதனின் நாக்கு; அப்படி இப்படி புரளத்தான் செய்யும்! அவனுக்கும் ஒரு கூட்டம்; எப்படி எப்படியோ திரளத்தான் செய்யும்! போகட்டும் அவர்களிடம் இல்லாத, ஆனால் உன்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் மன்னிப்பு! இவர்களைப் பற்றி இனி மனதிலே சிந்திக்கவும் வேண்டாம்! மறந்தும் கூட நிந்திக்கவும் வேண்டாம்! காலம் கண் போன்றது! கவனித்துக்கொண்டே இருக்கிறது!! 
 
நல்லூர் உஸ்மான்
 

 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பதுருப் போர்

பதுருப் போர் (Battle of Badr, பத்ர் போர், அரபு மொழி: غزوة بدر, மார்ச் 17, கிபி 624) இசுலாமிய வரலாற்றில் முசுலிம்கள் இசுலாத்தின் பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் அரேபியாவின் (இன்றைய சவூதி அரேபியா) ஹிஜாஸ் (Hijaz) பகுதியில் இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி) 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முசுலிம்கள் பதுருச் சண்டையில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் வலிமையோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையின் வலிமையும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. குர்ஆனிற் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில சமர்களில் பதுருப் போரும் ஒன்றாகும்.
இப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் சில சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ரு என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பெருஞ் சமர் ஆகும். முகம்மது நபியின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மக்காவின் குறைசிப் படையினரை ஊடறுத்துத் தாக்கிப் பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரபு நாட்டின் வலிமை மிக்கதும், செல்வச் செழிப்பு மிக்கதுமாகத் திகழ்ந்த நகரமாக மக்கா விளங்கியது. முசுலிம்களின் படை வலிமையை விட மூன்று மடங்கு படையினரை மக்காக் குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிம்கள் பத்ருப் போரிற் பெற்ற வெற்றி அரபு நாட்டில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது மதீனாவிற் பிரிந்திருந்த பிரிவினரிடையே முகம்மது நபியின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.

[தொகு] போருக்கான காரணம்

Slide15.JPG
பத்ருப் போர் நடைபெறுவதற்குப் பல காரணங்கள் அப்போது இருந்ததாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இசுலாம் தனிப்பெரும் அரசாக வளர்ந்து வந்தமை அதன் எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். எனவே தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமற் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.
மக்காவின் குறைசியர்கள் முகம்மது நபியோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவர் மதீனாவிற் தம்மைத் திடப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து சிரியாவை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும்.
அத்தோடு நபியவர்களது பரப்புரை மக்காவையும் புனித கஃபாவையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். முகம்மது நபி மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மது நபி அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை படைத்துறை, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் எண்ணினர்.
இசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஹ் பின் சஃகுழ்சியின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் ஹள்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் ஹள்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு முகம்மது நபிக்கு மனநிறைவை அளிக்கவில்லை. எனினும் இசுலாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முசுலிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.

[தொகு] போர் நிகழ்வு

பதுருப் போர் நிகழ்ந்த இடம்
மேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசுபியான் 50 ஆயிரம் தினார் பெறுமதி கொண்ட வர்த்தகப் பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மது நபியின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசுபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான். மக்காவில் இச்செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசுபியானிடம் இருந்ததனால் இது ஒரு பெரும் சிக்கலாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களிற் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
இசுலாமிய நாட்காட்டியில் 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் முகம்மது நபி ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 மைல் தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.
மறு நாட் காலை, அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு போர் தொடங்கியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையிற் பின்வருமாறு இறைஞ்சினார். இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிறுவ ஆணவத்தோடும் ஆயுத வலிமையோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை இறைஞ்சுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் முகம்மது நபியிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான் என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
இப்போராட்டத்தில் முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முசுலிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முசுலிம்கள் கொள்கைக்காக குடல்வாய் உறவுகளைப் போர்க் களத்திற் சந்தித்தனர். குடல்வாய் உறவுமுறையை விடவும் தங்களின் இசுலாமிய கொள்கை வலிமை மிக்கது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவினர்.

பத்ர் போர்
Battle of Badr
முசுலிம்-குறைசி போர்கள் பகுதி
நாள்மார்ச் 17, 624 கிபி/17 ரமழான், 2 AH
இடம்பத்ர் (மதீனாவின் தென்மேற்கே 130 கிமீ
முடிவுமுசுலிம்கள் வெற்றி
பிரிவினர்
மதீனாவின் முசுலிம்கள்மக்காவின் குறைசிகள்
தளபதிகள்
முகமது நபி
ஃகம்சா இப்னு அப்துல் முத்தலிப்
அலீ இப்னு அபீதாலிப்
அபூஜகீல் (போரில் கொல்லப்பட்டார்
உத்பா இப்னு ரபீஆ (கொல்லப்பட்டார்)
உமையா இப்னு கலஃப் (கொல்லப்பட்டார்)
பலம்
313 பேர், 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள்1000 பேர், 100 குதிரைகள், 170 ஒட்டகங்கள்
இழப்புகள்
14 பேர் கொல்லப்பட்டனர்70 பேர் கொல்லப்பட்டனர்
43-70 பேர் பிடிக்கப்பட்டனர்



வரலாறு புகட்டும் பாடம்


  அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி).


படிப்பினைகள்





உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
islamic warrior
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.
ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.
நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.
என்ன அது?
நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.
அவன்  கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.

இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.

“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?
“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.
ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.
இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.

வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.

சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.

சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.

இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.
எவ்வாறு ?
சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.
குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.
எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.
தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.
இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.
சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?
“நிச்சயமாக இல்லை”
நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.
“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !
கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.
கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று  எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.
இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு  அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.
வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.
உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.
இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……வஸ்ஸலாம்
நட்புடன்
நல்லூர் உஸ்மான்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தொடக்கம் உன் பெயரால்


தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை
தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதுகோல் செய்த
‘சஜ்தாவின்’ சுவடுகள்
(சஜ்தா – சிரம் பணிதல்)
உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்
நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் ‘ஈமான்’ பின்னால்
ஏகும் ரகுமான்
இதுவரை ஒட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையை புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் அந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழகும் ஒரு வலைதான் – அதனால் தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே
உலகத்தை பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்
இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு
அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்தி தான்
அவனுடைய இரை நாம் தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் வரை
எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் ஏந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்
அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது
உணவு, உடை, உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நூலாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது
இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நூல் நூற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை
எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று ‘ஹிரா’
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று ‘தௌர்’
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி

‘தௌர்’ குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்

‘தௌர்’ குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ
சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்
உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலை தான்
மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஒரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்கல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்க வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்
அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ உலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முத்திரை போட்டாயோ
நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு (குபுரியம் – இறை மறுப்பு)
கபன் நெய்யத் தொடங்கினாய்
(கபன் – இறந்த உடலை மூடும் தையலில்லாத வெண்ணிற ஆடை)
இறைவன் தந்த நூல் மறை நூல்
உன் நூலோ மறை கொணர்ந்த
தூதரை மறைத்த நூல்
அன்று உன் மறை நூலால்
இறைவனின் மறை நூலையே
காப்பாற்றிவிட்டாய்
இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையை கட்டிவிட்டது
இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஒரு நூலாம் படையால்
தடுத்து நிறுத்தி  விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்றி காப்பாற்றப்பட்டது
இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது
என் இதயமும் ஒரு தௌர் குகைதான்
அங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா?
இந்த மனிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
என் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா
புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு